நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : கே.பி.க்குப் பிடியாணை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பிரிவின் தலைவர் எனக் கூறப்படும் கே.பத்மநாதனைக் கைதுசெய்வதற்குப் பிடியாணையைப் பிறப்பிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரியவருகிறது.
நாடு கடந்த தமிழீழம் அமைக்கப்படுமெனப் பத்மநாதன் அறிவித்திருப்பதைத் தொடர்ந்தே பத்மநாதனைக் கைதுசெய்வதற்கான பிடியானையைப் பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கே.பி.யைக் கைதுசெய்வதற்கு உதவுமாறு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாடுகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரப் பிரிவின் தலைவர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சர்வதேச ரீதியில் தேடப்பட்டுவரும் நபர் எனவும், அவரைக் கைதுசெய்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டிருப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம கூறியுள்ளார்.
இவரைக் கைதுசெய்வதற்கான ஆவணங்களை சர்வதேசப் பொலிஸாரான இன்டர்போலிடம் கையளித்திருப்பதாக நேற்றுப் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் தெரிவித்தார்.
நாடுகடந்த தமிழீழம்
அதேநேரம், பத்மநாதன் கூறியிருப்பதைப் போன்று நாடுகடந்த தமிழீழம் ஒன்றை அமைப்பது வெறும் கற்பனையென அமைச்சர் கூறினார்.
“கே.பி.யின் கற்பனைத் தமிழீழத்தை கனவுலகிலேயே இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டியிருக்கும்” என ரோகித்த போகல்லாகம தெரிவித்தார்.
அதேநேரம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்படவுள்ளதாக செல்வராசா பத்மநாதன் அண்மையில் அறிவித்திருந்தார்.
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியிருப்பதாகவும், தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் தோன்றியிருப்பதாகவும் பத்தமாதன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment