புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரித்தானிய ஆயுதம்? : டைம்ஸ்
இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திவரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடந்த மூன்று வருடங்களில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியிருப்பதாக பிரித்தானிய டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்காக 13.6 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், தன்னியக்கக் கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பிரித்தானியா இலங்கைக்கு விற்பனை செய்திருப்பதாக அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைவிட, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு 1.1 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான 10,000 ரொக்கட்டுக்களை விற்பனை செய்ததுடன், 1.75 மில்லியன் பவுன்ஸ் பெறுமதியான துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வழங்க பல்கேரியா அனுமதி வழங்கியிருந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், அனுமதியளிக்கப்பட்ட அனைத்து ஆயுதங்களும் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தமுடியாது போனதாகக் குறிப்பிட்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகை, ஸ்லோவாக்கியா இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கியதை உறுதிப்படுத்த முடிந்தது எனத் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடந்த ஐந்து மாதங்களில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மோதல்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்தும் டைம்ஸ் கேள்வியெழுப்பியுள்ளது.
“இந்த ஆயுதங்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு நாம் பதில் வழங்கவேண்டும்” என தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும், பொது வெளிவிவகாரங்களுக்கான தெரிவுக்குழுவின் தலைவரும், ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினருமான மைக் கபேஸ் கூறினார்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சீனாவின் ஆயுத உதவி
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தார்.
“பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கும் அல்லது விற்பனை செய்யும் நிலையில் தாம் இல்லையென இந்தியா கூறிவிட்டது. தொடர்பாடல் சாதனைங்களைக்கூட வழங்கமுடியாது என அவர்கள் கூறிவிட்டனர்” என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.
இதனாலேயே, பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடவேண்டியேற்பட்டதாகவும், மாற்றுவழியின்றியே சீனாவிடமிருந்து கனரக ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டி ஏற்பட்டதாகவும் இராணுவத் தளபதி கூறியிருந்தார்.
இவ்வாறு, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆயுத உதவியுடன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்குப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமெனப் பல்வேறு தடவைகள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கோரிக்கைவிடுத்திருந்த மிலிபான்ட், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போதும் மோதல்கள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அத்துடன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து இலங்கை விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், மோதல்கள் நிறுத்தப்படவேண்டுமென்ற மிலிபான்டின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது. இதன் பின்னரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதிலும் சர்வதேச நாடுகள் தோல்வி கண்டன.
இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு பிரித்தானியாவும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுதங்களை வழங்கியதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Britain sold weapons to help Sri Lankan army defeat Tamil Tigers
0 விமர்சனங்கள்:
Post a Comment