புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்; சமாதான முயற்சிகளில் முக்கிய பங்காற்றத் தயார்: சிறிகாந்தா
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் தீர்வொன்றைக் காணும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள், நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்தால், அரசியல் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்குவகிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கூறினார்.
“பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கவேண்டும். ஐக்கிய இலங்கைக்குள், நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்கவேண்டுமென நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்” என அவர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வுகாணும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“2001ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் தீர்வொன்றுக்குச் செல்லவேண்டுமென நாம் வலியுறுத்தியிருந்தோம். அவர்களால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோம் என நாம் அந்தநேரம் கூறவில்லை. எனினும், 2001ஆம் ஆண்டின் பின்னர் எமது கொள்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் பேச்சுவார்த்தைக்குச் சென்று அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தோம்” என சிறிகாந்தா கூறினார்.
“தற்பொழுது விடுதலைப் புலிகள் இல்லாமல் போயுள்ளனர். அவர்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இதனால் நிலைமை முற்றாக மாறிவிட்டது. எனவே, அரசியல்தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றத் தயாராகவுள்ளது” என்றார் அவர்.
அதேநேரம், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதுடன், மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையின் போது பிராந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமெனவும் கூறினார்.
இதேவேளை, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், புதுடில்லி சென்று மத்திய அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்ததுடன், தமிழக முதல்வர் மு.கருணாநிதியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கவேண்டுமெனக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment