என்றைக்குமே தெரியாமல் போகக்கூடிய எண்ணிக்கை?
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் முல்லைத்தீவு கரையோரமாக பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தற்போது சர்ச்சையொன்று கிளம்பியிருக்கிறது.
இறுதி நாட்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தினமும் சுமார் ஆயிரம் மக்கள் பலியாகினார்கள் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அந்தரங்க ஆவணங்களில் காணப்படக் கூடியதாக இருந்ததாகக் கூறப்படும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு லண்டனின் "த ரைம்ஸ்' பத்திரிகை கடந்த வாரம் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. இதை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே மறுத்துவிட்டது. ஆனால், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. இணைச் செயலாளர் சேர் ஜோன் ஹோம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விபரம் குறித்து தங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது என்றும் "அந்த எண்ணிக்கை சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். சிலவேளை அதைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ கூட இருக்கலாம்' என்றும் நழுவல் போக்கில் கருத்துத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எமது உள்நாட்டுப் போரில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பில் கடந்த கால்நூற்றாண்டு கால கட்டத்தில் ஒருபோதுமே சரியான விபரங்கள் தெரிவிக்கப்பட்டதில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும். உலகில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்களில் அப்பாவிக் குடிமக்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டவற்றில் முக்கியமானதாக இலங்கையின் உள்நாட்டுப் போர் விளங்கியது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் பலியானவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தினாலோ அல்லது மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளினாலோ அல்லது அரசியல் கட்சிகளினாலோ தெரிவிக்கப்பட்டதையும்விட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. 2006 பிற்பகுதியில் இருந்து போர் மீண்டும் தீவிரமடைவதற்கு முன்னதாக போரில் சுமார் 80 ஆயிரம் இலங்கையர்கள் பலியானதாகவே பல வருடங்களாகக் கூறப்பட்டு வந்தது.
2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் தீவிரமடையத் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் வன்முறைகளில் பலியான அப்பாவிக் குடிமக்கள் தொடர்பிலான புள்ளிவிபரமொன்றைத் தொகுத்து மனித உரிமைகளுக்கான இல்லம் (Home for Human Rights) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையொன்றிலே ஒவ்வொரு 5 மணித்தியாலங்களுக்கும் ஒருவர் என்ற வீதத்தில் குடிமக்கள் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் கால கட்டத்துக்குப் பிறகு தீவிரமடைந்து இருவாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த மோதல்களின் போது குடிமக்களை இலக்காகக் கொண்ட தாக்குதல்களில் வகைதொகையின்றி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த உயிரிழப்புகளையெல்லாம் நோக்கும் போது உள்நாட்டுப் போரில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு அமைப்புகளினாலும் வெளியிடப்பட்ட விபரங்கள் உண்மையான நிலைவரத்தைப் பிரதிபலிப்பவையாக இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
2008 நடுப்பகுதிவரை உள்நாட்டுப் போரில் பலியானவர்கள் தொடர்பில் சகவாழ்வுக்கான மன்றத்தின் (Foundation for Co-Existence) தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க அந்தக் காலப்பகுதியில் கொழும்பில் இடம்பெற்ற தனது நூல் வெளியீட்டு வைபவமொன்றில் கணக்கொன்றைத் தெரிவித்திருந்தார். உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80 ஆயிரம் என்று கூறப்படுகின்ற போதிலும், 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியிருப்பதாக கணிப்பீடுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக கலாநிதி ரூபசிங்க குறிப்பிட்டிருந்தார். இத்தகைய எண்ணிக்கைகள் தொடர்பில் உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமுமே அபிப்பிராயங்களைத் தெரிவித்ததில்லை. இருவாரங்களுக்கு முன்னர் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்கு முன்னரான நாட்களில், வாரங்களில், மாதங்களில் கொல்லப்பட்ட அப்பாவிக் குடிமக்களின் எண்ணிக்கையை உலகம் என்றைக்குமே அறியாமல் போகக் கூடும் என்று சேர் ஜோன் ஹோம்ஸ் கூறியிருக்கிறார். இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை மாத்திரமல்ல, கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உள்நாட்டுப் போரில் பலியான மக்களின் உண்மையான எண்ணிக்கையையும் உலகம் என்றைக்குமே அறியாமல் போகக் கூடும்!.
0 விமர்சனங்கள்:
Post a Comment