புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்
இணக்கப்பாட்டுக்கு வருவது சந்தர்ப்பவாதமல்ல. மாறாக அது தப்பி வாழ்வதற்கான கலையாகும். சமாதானத்துடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நான்கு நியாயபூர்வமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
1987 இல் இந்தியாவுடனும் 1990 இல் ஆர்.பிரேமதாசாவுடனும் 1994 இல் சந்திரிகா குமாரதுங்கவுடனும் 2002 இல் நோர்வே அனுசரணையுடன் ரணில் விக்கிரம சிங்கவுடனுமானவையே அந்த சந்தர்ப்பங்களாகும். ஆனால், ஈழம் தொடர்பாக பிரபாகரன் விட்டுக்கொடுப்புக்கு முன்வரவில்லை. தனது நோக்கத்தில் அவர் தோல்வி கண்டதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர் முயன்றார். ஆனால் தமிழர், சிங்களவர் உட்பட இலங்கையரின் முழுத் தலைமுறையுமே இதற்கு அதிக விலை செலுத்தியுள்ளது என்று இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.
"புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்' என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய கட்டுரை "த வீக்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு புனர்வாழ்வளித்து உள்ளீர்க்கப்பட்ட நேர்மையான இலங்கையர் சமூகத்தைக் கட்டியெழுப்ப இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருப்பதாகவும் அவர் யதார்த்தத்தை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி ஞானத்துடன் செயற்பட்டால் இலங்கையானது ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் வென்றெடுக்குமென எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை இந்தியா தனது வட்டத்திற்குள் கொண்டு வருவதே இப்போதுள்ள சவால் என்றும் சீனா, பாகிஸ்தானின் செல்வாக்கினால் இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அனிதா பிரதாப், சிறந்த வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர், பிராந்தியத்தில் வல்லரசாக இருக்கும் இந்தியாவானது ரஷ்யா, சீனா போன்றில்லாமல் உலக பெறுமானங்களை நம்புவதாகவும் இதுவே ஸ்திரத்தன்மையையும் அமெரிக்கா, ஐரோப்பியாவுடன் தேச அணியையும் ஏற்படுத்த உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முதலாவதும் அதிமுக்கியமான பாடமாகவும் அமைவது இலங்கையின் வெற்றியானது மிகத் தெளிவானதும் திட்டவட்டமானதுமான புதிய உலக ஒழுங்கு விதியை அடையாளப்படுத்துகின்றது. இது ஒரு முன்மாதிரியான மாற்றமாகும். அமெரிக்க மேலாதிக்க ஏகத்துவ உலகத்திலிருந்து எதிர்த்துருவமாக சீனா வெளிக்கிளம்பியிருக்கின்ற இருதுருவ உலகத்திற்கு நாம் நகர்ந்திருக்கின்றோம். அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜனநாயகம், சுதந்திரம், மனிதஉரிமைகள் போன்ற உலகப் பெறுமானங்களை பற்றிப்பிடித்திருக்கின்றன. ஆனால், சீனா வெளிக்கிளம்பியிருக்கும் எதிர்த்துருவமானது சுதந்திரமானதும் உலகப் பெறுமானங்கள் பற்றி அக்கறையற்றதுமாகவும் காணப்படுகிறது.
தத்துவார்த்தக் கோட்பாடற்றதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் தந்திரோபாய ரீதியான ஆதரவுக்கு தடையற்றதாகவும் அல்லது பொருளாதார நேச அணியின் ஆட்சி ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு வழங்குவதில் சமநிலையான தன்மையை பற்றிப் பிடித்திருக்காததாகவும் சீனாவின் உலக ஒழுங்கு கோடிடப்பட்டிருக்கிறது. கெடுபிடி யுத்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இருதுருவங்களாக இருந்தன. அந்த இருதுருவ உலகைப் போன்று அல்லாமல் 21 ஆம் நூற்றாண்டின் இருதுருவ உலகமானது வேறுபட்டதாக உள்ளது. "மீதியானவற்றின் எழுச்சி' என்று பரீட் ஷக்காரியா அழைப்பதை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள அதிகாரம் மிக்க நாடுகளும் ரஷ்யா, இந்தியா, தென்னாபிரிக்கா, பிரேஸில் போன்றன தமது பரிமாண எல்லைக்குள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான மேலாதிக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன. ஆனால், இது பலதுருவ உலகமல்ல. இது பல சமத்துவமான அதிகாரங்களைச் சுட்டி நிற்கின்றன. ஆனால், இதனை நான் "முன்னுரிமை அடிப்படையிலான புதிய உலக ஒழுங்கு' என்று கூறுகிறேன். இது முழுமையாக பீஜிங்கிற்கு (சீனா) உரியதல்ல. இது முன்னுரிமைகளின் அடிப்படையிலான கட்டமைப்பு என்று கூறுகிறேன். எஞ்சியிருப்பவற்றிலிருந்து எழுச்சி பெற்று வருபவர்களின் மத்தியில் சீனாவும் முன்னணியில் உள்ளது. மீறிச்சென்றுவிட வில்லையாயினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு கிட்டத்தட்ட பதிலீடான எதிர்த்தன்மை கொண்டதாகச் சீனா ஏற்கனவே காணப்படுகிறது. உலக விவகாரங்களில் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டமைப்புகளுக்கான மூலக்கூறுகள் அதற்கான சக்திகள் என்பனவற்றில் முதலாவதாக பாதிக்கப்பட்டவராக பிரபாகரன் உள்ளார். சீனாவின் பொருளாதார சக்தியானது சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக அரங்கில் அதன் அரசியல் ரீதியான பிரசன்னமானது விடுதலைப் புலிகளின் தோல்வியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சீனா முழுமனதுடன் அளித்த இராணுவ, நிதியுதவியே இலங்கையானது விடுதலைப் புலிகளை அழிப்பதில் இலங்கைக்கு வெற்றியை ஏற்படுத்தியது. இலங்கைக்கு சீனா ஆதரவளிப்பது அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதற்காகவாகும்.
இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடற்படைத் தளத்தை கொண்டதாக இந்த துறைமுகம் அமையுமென நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானின் கௌடர், மியன்மாரின் கியாக்பியூ ஆகிய இடங்களிலும் துறைமுகங்களை அமைப்பதன் மூலம் தெற்காசியாவை சீனா சுற்றிவளைத்திருக்கிறது. இது அச்சுறுத்தலான விடயமென சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் சீனா தனது சக்தி மற்றும் பொருட்களை விநியோகிப்பதற்கான மாற்றமாக இதனை மேற்கொள்வதாகக் கூறுகின்றனர்.
இந்தியாவின் தந்திரோபாயமான ஆதரவினாலும் புலிகளை இலங்கை அழிக்கக்கூடியதாக இருந்தது. இந்தியாவின் உதவியானது புலிகளின் ஆயுத விநியோகத்தைத் துண்டிப்பதற்கான கடற்பகுதிக் கண்காணிப்பு உட்பட பயிற்சி வழங்குதல் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். இதில் இரண்டு நோக்கங்கள் இருந்தன. புலிகள் இல்லாமல் இருப்பதை இந்தியா விரும்பியிருந்தது. இரண்டாவதாக சீனாவை இலங்கை தழுவும் விடயத்தில் இந்தியாவால் பேசாமல் அமர்ந்திருக்க முடியாது என்பது அடுத்த விடயமாகும். அதனால் அரசாங்கத்தின் போர் முயற்சிகளுக்கு உதவுவதே அதற்குரிய ஒரே வழியாகக் காணப்பட்டது. இலங்கை, இந்தியா, சீனா என்பவற்றின் ஒன்றிணைந்த யுத்த வல்லமையினால் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.
சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மைக்கு எதிராக தமிழர்கள் விசனம் கொண்டுள்ளனர். ஆனால், இது முரண்பட்ட கருத்தாகும். சர்வதேச சமூகமென்று குறிப்பிடப்படுவது அடிப்படையில் மேற்குலகத்தையும் ஐ.நா. வையுமாகும். பராக் ஒபாமா, ஐரோப்பா, ஐ.நா.வை இலங்கை எதிர்க்க முடியும். ஏனென்றால், சீனாவின் ஆதரவும் இந்தியாவின் நிலைப்பாடும் இலங்கைக்கு ஆதரவாக உண்டு. இலங்கை யுத்தம் தொடர்பாக நோர்வேயின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் விதார் கெல்கீசன் பின்வருமாறு எழுதியிருந்தார். "உதவிகள் சென்றடைவது மறுக்கப்பட்டுள்ளது மனிதாபிமான சட்டத்தை மதிப்பளிப்பது புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் நடவடிக்கைகளுக்கான அழைப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளில் மேற்குலகின் அரசியல் இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதிரியான தன்மைகளை நாம் வேறு இடங்களிலும் பார்த்திருக்கின்றோம்சூடான், சிம்பாப்பே, பர்மா எங்கும் பார்த்திருக்கின்றோம் ஆனால், இலங்கையைப் போன்று படிமுறையாகவும் அப்பட்டமாகவும் இத்தகைய விடயங்கள் எங்குமில்லை' என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த மாதிரியான நாடுகளில் ஒன்று சீனாவாகும். சீனா போன்ற நாடுகள் தமது சொந்தப் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொள்ளும் குரூரங்களைத் தண்டிக்க மேற்குலகு முயற்சி செய்த போது அவற்றைத் தடுத்து நிறுத்தின.
ஆனால், மேற்குலகமானது நம்பகரமானது என்றோ அல்லது நேர்மையான இடைத்தரகர் என்றோ கருதமுடியாதிருப்பது இங்குள்ள குழப்பமாகும். ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்றவற்றில் மேற்குலகத் தலையீடுகளின் போது ஜனநாயக ரீதியற்ற உபாயங்கள், மனித உரிமை மீறல்கள், பொதுமக்கள் இழப்புகள் என்பன இடம்பெற்றிருக்கின்றன. அண்மைக்கால ஆக்கிரமிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான் விடயங்கள் உள்ளன. ஆதலால் இலங்கைக்கு மேற்குலகு போதிப்பது பாசாங்குத்தனமானதாகும். அதேசமயம், சீனாவானது தாராளவாத விழுமியங்களை கவனத்திற்கொள்வதில்லை. தார்மீக சிந்தனைகள் அற்ற விதத்திலேயே அது தலையீடு செய்கின்றது.
இலங்கைக்கு இப்போது தேசிய ரீதியில் முன்னுரிமை கொடுக்கவேண்டிய விடயமாகவிருப்பது, தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாகும். நேர்மையாக உள்ளீர்த்துக்கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும். இது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பமாகும். யதார்த்தத்தை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி, உறுதியான ஞானத்தையும் கொண்டிருத்தல் வேண்டும். அதனை அவர் மேற்கொள்வாரேயானால் இலங்கையானது அழகானதும் ஸ்திரமானதும் சுபீட்சமானதுமான தீவென்ற தனது விதியை வென்றெடுக்க முடியுமென எதிர்பார்க்கலாம்.
Thinakural
0 விமர்சனங்கள்:
Post a Comment