தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கு உகந்தது தானா? இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் இக்கட்சியினால், தமிழர்களின் இன்னல்களைத் தீர்க்க முடியுமா?
யாழ் மாநகரசபை, மற்றும் வவுனியா நகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல் வேட்புமனுத்தாக்கல்கள் முடிவுறும் இறுதித் தினமாக நாளைய தினம் (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் வேட்புமனுவை பூர்த்தி செய்து, அதன் வேட்பாளர்கள் அனைவரும் ஒப்பமிட்டு, இன்றுகாலை சிவசக்தி ஆனந்தன் எம்.பி.யினால் அவ்வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. “நாய்கள் குரைத்த போதிலும் வணிக வண்டிகள் தொடர்ந்து செல்ல வேண்டியது நியதியானதே” ஆனால், மனிதர்கள் கதறிய போதிலும் நாய்கள் வணிக வண்டிகளை இழுத்துச் செல்ல வேண்டியது தேவை தானா? என்பதே இங்கு கேள்வியாகியிருக்கின்றது. தமிழ் கட்சிகளின் அரசியல் வரலாற்றில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கடந்தகால, நிகழ்கால செயற்பாடுகளை நாம் அவதானமாக நோக்குவோமாக இருந்தால், அவர்களின் எதிர்காலம் என்பது கேளிக்குறிகளினால் நிரப்பப்படுவதனை தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்த்தை அடக்குமுறைகள் மூலமும், அட்டூழியங்களின் மூலமும், அநீதியான செயற்பாடுகள் மூலமும் தமதாக்கிக் தக்கவைத்துக் கொண்டிருக்கும் இவர்களால், தமிழர்களுக்கென்று நிறைவேற்றப்பட்ட கடமைகள் என்று எதுவொன்றுமே இல்லை என்பது இதுநாள்வரை எமக்குக் காணக்கிடைத்தவை. தமிழர்களுக்கு அரசியல் அநுகூலங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய இவர்கள், அரசியல் அராஜகங்களை அரங்கேற்றித் திரிந்தது தான் இவர்களின் இதுவரைகாலச் சாதனையாகவிருக்கின்றது.
தமிழர்களுக்காக பேசவேண்டிய இவர்கள் புலிகளுக்காக பேசியதும், தமிழர்களுக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளைப் புலிகளுக்காக புறந்தள்ளியதும் தான் இவர்களின் இத்தனைகால அரசியல் அரங்கேற்றங்களாக இருந்தன.
தற்போது கூட எத்தனையோ எம்.பி. பதவிகளைப் பறித்து வைத்துக் கொண்டிருக்கும் இவர்களினால், தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரயோசனங்கள் இருக்கின்றனவா? என்று கேள்வியெழுப்பினால் அத்தனை குரல்களும் அறவே கிடையாது என்று ஆர்ப்பரித்துக் கூறவே தலைப்படும் என்பது தடுக்க முடியாத உண்மை. அது தவிர ஆதரவாக ஒரு குரலேனும் ஒத்தூத தலைப்படாது என்பதும் உண்மையே.
இப்படியாக, கைவசம் இருக்கின்ற எத்தனையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையே பயன்படுத்தத் தெரியாத இவர்கள். நடைபெறவிருக்கும் மாநகர, நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு சாதித்துக் கிழிக்க விரும்புவது எதனையோ என்று எண்ணுகிற போது வேதனைப்படுவதைத் தவிர வேறெந்த சிந்தனை பாவங்களும் எங்களுக்குத் தோன்றுவதாகத் தெரியவில்லை. பாராளுமன்ற பதவிகள் மூலமே பயன்களைப் பெற்றுக்கொடுக்கத் தெரியாத இவர்கள் இந்த மாநகர, நகரசபைகளைக் கைப்பற்றி பறைசாற்ற விரும்புவது என்ன? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பதன் பவர் நிரூபிக்கவே தவிர மக்களுக்கு நன்மை பயப்பதற்காக அல்ல. அதாவது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக அல்ல என்பதும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்காகவே மக்கள் என்பதுமே இவர்களின் தார்மீகக் கொள்கையாக இருக்கின்றது. ஆனால், இங்கு இவர்கள் ஒன்றை உணரத் தலைப்படவில்லை என்பதே வேடிக்கையாக இருக்கின்றது.
பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தால், கட்டிய கோவணமும் களவாடப்பட்டு விடும் என்பதை இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏன்தான் உணரவில்லையோ தெரியவில்லை. இவர்கள் உணராது விட்டாலும் விரைவில் இவர்களுக்கு அது உணர்த்தப்படும் என்பது உறுதியாகத் தொனித்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை காலமும் அரசியல் என்றும், அதிகாரம் என்றும், தமிழர்களின் தலைவர்கள் என்றும் புலம்பித்திரிந்த இவர்களிடம், தீர்வுத் திட்டமென்று ஒன்று இதுநாள்வரை இல்லாதிருந்தது வருந்தத்தக்கதே. ஏனெனில், இப்படியான நிலையொன்று ஏற்படும் என்ற காலக்கண்ணோட்டம் இல்லாத மந்தார மடையர்களாக இவர்கள் இருந்ததே இதற்குக் காரணம்.
தற்போதும் தீர்வுத்திட்டமொன்று கைவசம் இல்லாதிருக்கின்ற இவர்கள் இனிமேல்தான் தீர்வுத்திட்டமொன்றைத் தயாரிக்கவிருக்கிறார்கள் என்பது எவ்வளவு கேவலமானது. தனிநாட்டு இலக்குடன் இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமில்லாத கொள்கையினைக் கொண்டிருந்தனர் இவர்கள். இப்போது, அவர்கள் உருவாக்கப்போகும் தீர்வுத்திட்டந்தான் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பதும் இவர்களது நிலைப்பாடாக இருக்கிறதாம்.. அதற்காக 13 ஆம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதையும் உறுதியாக எதிர்க்கிறார்களாம்.
ஜாதிக ஹெல உறுமயவும், ஜே.வி.பி. யும் இனவாதம் கொண்ட கருத்தியல் வாதிகள் என்பது அறிந்ததே. அவர்கள் தான் 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வருவதை கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால், கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழர்களுக்கெதிராக குத்தாட்டம் ஆடி 13ஆம் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதன் அர்த்தந்தான் என்னவென்று எமக்கு புரியாத பெரும் புதிராக இருந்து கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி. யினது மார்க்சிச சிந்தனைகள் எப்படி சிவப்புக் கொடியுடனும், மார்க்சிச கர்த்தாக்ளின் புகைப்படங்களை சுமந்து செல்வதிலும், சேகுவேரா போன்றவர்களை போஷ்டர் அடிப்பதுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு, இனவாத சிந்தனைகள் தலைக்ககெடுக்கப் பட்டிருக்கின்றனவோ, அதேபோன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழர்களை விற்று, வீராவேசப் பேச்சுக்கள் பேசுவதிலும் மட்டுமே தமிழ் தொனிக்கிறதே தவிர செயல்களில் தமிழ் சீரழிப்பு நடவடிக்கைகளே மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கனவுவாதிகளே தவிர, ஆக்கபூர்வமான சிந்தனை வாதிகளோ, அரசியல் அறிந்தவர்களோ, காலநிலைமை புரிந்தவர்களோ அல்லாத முழு அறிவிலிகள் என்பது அவர்களது பல்வேறு செயற்பாடுகளின் மூலமாக மக்களுக்கு பிரசன்னமாயிருக்கின்றது.
அதாவது, பெரும்பாலான சிறுபான்மை கட்சிகளும், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு நோக்கிச் சிந்திப்பவர்களும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நல்ல வாய்ப்பாக கருதி ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும், ஹெல உறுமயவும் மட்டும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் இதனை எதிர்ப்பதில் அவர்களுக்கு நன்மை இருக்கின்றது. ஏனெனில் தமிழர்களுக்கு அதிகாரங்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் குறியாய் இருப்பவர்கள் அவர்கள். ஆனால், இவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் என்னதான் அர்த்தமிருக்க முடியும் தமிழர்களே!
அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின் இருப்புக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவு மிக மிக அவசியம் என்ற நிலை இருக்குமாக இருந்தால் கூட பரவாயில்லை. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முழுமையான தீர்வு என்னும் போலியான வாதத்தில் காலங்கடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியும்.. ஆனால், இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் ஆதரவு அரசாங்கத்திற்கு அணுவளவும் அவசியமில்லை என்றிருக்கின்ற நிலையில், இவர்களின் இறுக்கமான நிலைப்பாட்டினால் ஏதாவது பயன்கள் கிட்டுமா? அதனால், தமிழர்களுக்கு தக்க வழி பிறக்குமா? இந்நிலைப்பாடு பயங்கரவாதத்தை மறந்து சிறுபான்மை இனமே இல்லையென்றும், தமிழர்கள் பட்டபாடு போதும் என்றும் எண்ணும் பெரும்பான்மை அப்பாவி இனத்தவர்கள் மத்தியில் மேலும் மேலும் வெறுப்புணர்வுகளையும், கசப்புணர்வுகளையுமே கல்வெட்டாகப் பதிவு செய்து கொண்டிருக்குமல்லவா? மீண்டும் தமிழர்களை புலிகளாக பார்க்கும் நிலைகளையும் தோற்றுவிக்கும் அல்லவா?
தற்போதிருக்கின்ற காலநிலைமையில், 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு, மெதுமெதுவாக முழுமையான தீர்வு நோக்கி முன்னேறுவதே ஏற்புடையதாக இருக்கும் என்பது தெளிவு. இவ்வாறு இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மெதுமெதுவாக முன்னெறுவதுதான் முற்போக்கான சிநதனை என்பதற்கு உலகிலும், இலங்கையிலும் கூட எத்தனையோ வரலாறுகள் சான்று பகர்ப்பனவாக இருக்கின்றன.
உதாரணமாக, இந்திய வம்சாவழியினரான தமிழர்களின் பிரச்சினைகள் ஒப்பீட்டளவில், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் பார்க்க பாரதூரமானதாக கருதப்பட்டது. ஏனெனில், அவர்களை இந்தியாவும் ஏற்கவில்லை. இலங்கையிலும் அவர்களுக்கு, பிரஜாவுரிமையோ வாக்குரிமையோ இருக்கவில்லை. இப்படியானதொரு நிலையில், இவர்களுக்காக குரல்கொடுக்க பாராளுமன்றத்திலோ, நாட்டில் தெருக்களிலோ ஒருவரும் இருக்கவில்லை. இந்நிலையில்தான், அமரர் தொண்டமானின் ஆக்கபூர்வமான அணுகுமுறையின் காரணமாக இந்திய வம்சாவழியினருக்கு கட்டங்கட்டமாக பிரஜாவுரிமை வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. இப்போது அவர்கள் எல்லோரும், பிரஜாவுரிமையும், வாக்குரிமையும் பெற்று அவர்களுக்கு வேண்டியதை அடைந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் இப்படி கட்டங்கட்டமாக கிடைப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. முழுமையாக ஒரே நேரத்தில் எல்லோருக்கும் தரவேண்டும் என்று வீம்பு செய்து கொண்டிருந்திருந்தால், இன்றும் கூட அவர்கள் அநாதரவான நிலைமையிலேயே காலந்தள்ள வேண்டிய நிலை தொடர்ந்திருக்கும் என்பது தெளிவு.
இனிமேல்தான், தீர்வுத்திட்டமொன்றைத் தயாரிக்கவிருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இருந்து கொண்டு, அத்தீர்வுத் திட்டம் ஏற்கப்படக்கூடியதா? அல்லது இல்லையா? என்பது கூடத்தெரியாதிருக்கும் நிலையில், 13 ஆவது திருத்தத்தையும் நிராகரிக்கும் இவர்களது போக்கை என்னவென்று கூறுவது.
இனிமேல், கூட்டமைப்பினர் தயாரிக்கவிருக்கும் மாய மந்திரத் தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா? ஏற்காது விட்டால், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மீண்டும் போராட்டமா? அல்லது, மேடைபோட்டு பேசுவார்களா? அல்லது பக்கம் பக்கமாக அறிக்கைகள் விடுவார்களா? இதில் இவர்கள் எதைச் செய்தாலும், அதனால் தமிழர்களுக்கு ஏதாவது பயன்கள் கிட்டுமா?
இவற்றுக்கெல்லாம், முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கும் நிலையில் இல்லாதிருக்கின்ற போது, தங்கள் தீர்வுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுவதற்காக காலம் முழுவதும் போட்டுக் கொண்டிருக்கப்போகும் கோஷம் தமிழர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துமா? அதுவும் தற்போதிருக்கின்ற நிலையில் நன்மையாகுமா? உண்ணவும், குடிக்கவுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உங்கள் கோஷம்…முடியும்வரை, தீர்வுகொடுக்கும் வரை உண்ணவும் குடிக்கவும் வழியமைத்துக் கொடுக்கப் போவது யார்?
கூட்டமைப்பினரின் கோஷம் முடிந்து தீர்வு கிடைக்கும் வரை கூட்டமைப்பினர் உண்ணவும், குடிக்கவும் தமிழர்களின் பெயரால் அபகரித்த செல்வங்கள் போதும், கோஷம் முடியும் வரையென்ன, சாகும்வரை சந்தோஷமாக இருக்கப் போதும். ஆனால், அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களின் நிலை என்னவாகும்.
கடைசித்தமிழன் இருக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூத்துப் போட்ட கூட்டமைப்பினர்தானே இவர்கள். கடைசித் தமிழனும் இறந்த பின்னர் அந்தப் போராட்டம் எதற்காக என்று யோசிக்கத் தெரியாத கூத்தமைப்பினர்தானே இவர்கள்.
ஆகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கண்ணாம்பூச்சி விளையாட்டுக்களும், காலங்கடந்த கட்டபொம்மன் கதைகளும் தமிழர்களுக்கு நலன்பயக்காது. இனிமேல், தமிழ் கூட்டமைப்பினரால் தழிழர்களுக்கு பயனேதுமிருக்காது. பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செய்து கிழித்தது போதாதென்று, இப்போது மாநகரசபையையும், நகரசபையையும் கைப்பற்றி கிழிகிழியென்று கிழித்து குப்பையாக்க களமிறங்கியிருக்கும் இவர்களுக்கு தமிழ்மக்கள் தக்க பதில் கொடுந்து திருந்தச் செய்வார்கள் என்பது அவதானிகளின் கருத்து. இல்லாவிட்டால், இன்னல் படும் தமிழர்களின் கதை தொடர்கதையாவதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டது போல் ஆகிவிடும் என்பதும் நோக்குணர்கள் விடை.
ஆகவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கு உகந்ததுமில்லை. தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கப் போவதுமில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆதலால், அறிவிலிகளான கூட்டமைப்பினருக்கு தமிழர்கள் அளிக்கப்போகும் ஆக்கபூர்வமான பதில்கள் அவர்களைத் திருந்தச் செய்யும், அல்லது அவர்களை உண்மையான தமிழர்களாக வாழச்செய்யும் என்று கேட்டு எதிர்பார்ப்புடன் விடைபெறுகிறோம். எதிர்வரும் தேர்தல்களின் பின் மீண்டும் வருவோம்…
திரு.வைகைவளவன் -வவுனியா
அதிரடி இணையம்
0 விமர்சனங்கள்:
Post a Comment