இலங்கை இனப்பிரச்சினை : இரா. அன்பரசு - தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை
பத்திரிக்கை அறிக்கை
இரா. அன்பரசு Ex-M.P.
(நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் செயலாளர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த துணைத்தலைவர்)
அண்மையில் இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்களை இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கவும் அவர்களுடைய வாழ்க்கை நிலை அச்சம் நீங்கி பழைய நிலைக்கு திரும்பி அவர்கள் புதிய வாழ்க்கையைத் துவங்கிட வேண்டுமெனவும், பயங்கரவாதம் ஒழிந்து விட்ட நிலையில் இனியாவது இலங்கை வாழ் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் சிங்கள மக்களோடு சரிநிகர் சமானமான வாழ்வுரிமையைப் பெற்றிடவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினேன்.
அமரர் இந்திரா காந்தி, அமரர் இராஜீவ்காந்தி வாழ்ந்த காலங்களிலிருந்து ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை பெற்றிட நான் ஆற்றிய பணியையும் அவருக்கு எடுத்துரைத்தேன். 1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எவ்வாறு நானும் ஈடுபட்டேன் என்பதையும் தெளிவுப்படுத்தினேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் இயக்கத் தலைவர்களில் ஒரு சிலர் என்னிடத்தில் தொடர்புகொண்டுள்ளார்கள் என்பதையும் எடுத்துரைத்தேன்.
தலைமை இன்றி இலங்கை தமிழர்கள் தவித்திடும் இந்த நேரத்திலும் இந்தியாவில் உள்ள ஒரு சில தலைவர்களும், இலங்கை அரசும், இந்திய நாடு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதி நாடு என்ற திரிபுவாதத்தை முன்வைத்து தீவிரப் பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள். இத்தகைய செயலில் ஒரு சில தமிழக அரசியல் தலைவர்களும், இலங்கை அரசும் ஒரே வித விச விதையை இணைந்தே தூவி வருகிறார்கள். இந்த நிலை நீடிக்குமானால் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் இலங்கைத் தமிழர்கள் உதவிக்கு இந்தியாவிடம் நேச கரம் நீட்டமுடியாமல் போய்விடும்.
இதை முறியடிக்கும் வகையில் இந்தியப் பேரரசு பல்வேறு நல்வாழ்வு திட்டங்களை இலங்கைத் தமிழர்களுக்காக எடுத்திட இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி தமிழினத்தையே இலங்கை அரசு அழித்துவிடும் என்ற அச்சம் இலங்கைத் தமிழர்களின் மத்தியில் நிலவி இருப்பதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையையும் எடுத்துரைத்தேன். அப்போது தான் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்தியாவின் மீது புதிய நம்பிக்கையும் நல்லெண்ணமும் பிறந்திடும் எனக் கூறினேன்.
இதையெலலாம் கவனமாகக் கேட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு S.M. கிருஸ்ணா அவர்கள் உங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆனால் இலங்கையில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் என்னை தனித்தனியாக சந்திக்கிறார்கள். அவர்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தீர்வோடு என்னை அணுகினால் அதை பரிசீலிக்க இந்திய அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளித்தார்கள். மேலும் நீங்கள் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலாளராக இருந்த போது இலங்கைப் பிர்சினையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தீர்கள். எனவே நீங்களே இலங்கை அரசியல் தலைவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் அனைவரையும் ஒரே குழுவாக அழைத்து வாருங்கள் என்று என்னை பணித்தார்கள்.
தமிழகத்தில் இருக்கின்ற ஒரு சில தலைவர்கள் இலங்கைத் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதற்கு காரணம் இந்தியா தான். இந்திய நாடு தான் இலங்கை அரசுக்கு போர்த் தளவாடங்களை கொடுத்து உதவியது என்ற பொய்ப் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதை இந்திய அரசு மறுத்தது மட்டுமல்ல இலங்கை அரசின் விமானத் தளபதி (Chief Marshall) ரோஸன் கூனிதிலகா என்பவரும் ஜே.வி.பி. இயக்கத் தலைவர் சோமவான்சா அமரசிங்கே என்பவரும் இலங்கை இராணுவத்திற்கு சீனா, பாகிஸ்தான், ரஸ்யா போன்ற நாடுகளிலிருந்து தான் இராணுவத் தளவாடங்களை வாங்கினோம் என்று கூறியிருக்கிறார்கள். இலங்கை இராணுவத்தினுடைய செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானாயேகாரா என்பவர் T-55 என்ற இராணுவ டாங்குகளையும் (T-55 Main Battle Tanks) செகோஸ்லோவாகியா, சீனா, ரஸ்யா போன்ற நாடுகளில் தான் வாங்கினோமே தவிர இந்தியாவில் அல்ல. இந்தியாவிடமிருந்து ஏற்கெனவே போடப்பட்ட நிரந்தர ஒப்பந்தத்தின் படி ஒரே ஒரு ராடாரையும் அதை இயக்குபவரையும் தான் இந்தியாவிடமிருந்து பெற்றோமே தவிர வேறு எந்த ஆயுதங்களையும் இந்தியாவிலிருந்து வாங்கவில்லை என்று கூறியுள்ளார். அதுவும் விடுதலைப் புலிகள் கொழும்பின் மீது விமான தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்தியா ராடாரை வழங்கியது. இலங்கைத் தமிழர்களை கொல்வதற்கு எந்த ஆயுதங்களையும் வழங்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை!
இந்தியா இராணுவத்தளவாடங்களை இலங்கை இராணுவத்திற்கு விற்கவோ அல்லது அனுப்பவோ மறுத்துவிட்டது என்றும் இவ்வாறு இந்தியா இராணுவத்தளவாடங்களை மறுத்த காரணத்தினால் தான் பாகிஸ்தான், ரஸ்யா, சீனா போன்ற வேறு நாடுகளை நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் இலங்கை இராணுவப் படைத்தலைவர் சரத்பொன்சேகா என்பவரும் NDTV-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இப்படி இருந்தும் தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் இந்தியா தான் இந்த போரை நடத்தியது என்ற கோயபல் பிரச்சாரத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய புளுகு மூட்டை தமிழக அரசியல்வாதிகளின் முகத்திரையைக் கிழிப்பதோடு சொல்லொண்ணாத் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளாயிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு உதவிகளை விரைந்து செயல்படுத்துவது தான் உடனடித் தேவையாகும். ஏற்கனவே நான் திரு. ஞானசேகரன் (ராஜன்), திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், திரு. கஜேந்திரன், திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. சேனாதிராஜா, திரு. ஆனந்தசங்கரி போன்றவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை சந்திக்கும்படி அழைத்தேன். இவர்கள் என்னை சந்தித்து இனி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள். மற்ற தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டால் இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பணியாற்றிட நான் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை இந்திய நாட்டுக்கு எதிராகவே அவதூறு பிரச்சாரம் செய்து வந்த இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் மாலைமுரசு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இந்திய அரசு இனியாவது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்று கூறியிருப்பது வரவேற்கத் தகுந்த ஒன்றே. ஆனால் இந்திய அரசின் தலைமை ஏற்படுத்திய கொள்கை மாற்றத்தால் தான் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டது, இந்திய பேரரசு இயக்கிவிட்ட துருப்புச் சீட்டுகளாகத்தான் சிங்கள இராணுவம் தாக்கியது என்று மீண்டும் இந்திய நாட்டை குறை கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
ஒருபக்கம் இந்தியாவை குறை கூறிக்கொண்டு இந்தியாவின் உதவி வேண்டும் என்று சிவாஜிலிங்கம் கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்போக்கை அவர்கள் மாற்றிக்கொண்டு இந்தியாவிடம் நேசக்கரம் நீட்ட வேண்டும்.
இரண்டாவது கட்டமாக இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். அதற்கு 1987-ல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்து நடவடிக்கை எடுப்பதோ அல்லது புதிய கொள்கைகளை வகுத்து புதிய திட்டத்தை உருவாக்குவதோ இலங்கைத் தமிழர்களின் திட்டமாக இருக்க வேண்டும். தங்களுக்கு நல்ல அரசியல் தீர்வு எது என்பதை இலங்கை வாழ் தமிழர்களும் அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் புலம் பெயர்ந்து பல வெளிநாடுகளில் குடியிருக்கும் இலங்கைத் தமிழர்களும் தான் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும்.
பிரபாகரன் போரில் மரணம் அடைந்துவிட்டார் என்று இலங்கை அரசு அறிவிப்பதும், தமிழகத்தில் உள்ள ஒரு சில தலைவர்கள் அவர் உயிரோடு இருக்கிறார், ஒருநாள் எழுந்து வரத்தான் போகிறார் என்று சொல்வதுமாக பட்டிமன்றம் நடத்த தேவையில்லை. இதைப்பற்றி பட்டிமன்றம் நடத்துவதை தவிர்த்து, இனி இலங்கையில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் நல்வாழ்விற்கு என்ன செய்யப்போகிறோம் என்ற தீர்க்கதரிசனத்தோடு செயல்படுவதே உடனடி தேவையாகும்.
எனவே, இனியாவது இலங்கை அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுக்குள் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்துக் கொண்டு சரியான அரசியல் தீர்வினை இந்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். ஒரே தலைமையின் கீழு; ஒன்றுபட்டு செயலாற்ற இயலவில்லையெனில் ஒரு கூட்டுத் தலைமையையாவது ஏற்படுத்திக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட முன் வரவேண்டுமென்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் பிரித்தாளும் சூழ்ச்சியில் கைத்தேர்ந்த இலங்கை அரசு இலங்கையில் தமிழினமே அழிந்து போகும் நிலைமையை உருவாக்கிடும்.
அதுமட்டுமல்ல ஒரு தலைமையில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு தலைமையை ஏற்படுத்தி செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும்.
இந்தியா என்றுமே இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு நிலைகளில் உதவியிருக்கிறது. இன்று உதவுவதற்கு தயாராக இருக்கிறது. இந்திய நாட்டின் உதவியால் தான் இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வும் மறுமலர்ச்சியும் ஏற்படும். எனவே, அருள்கூர்ந்து தனிப்பட்ட மன வேறுபாடுகளை குழி தோண்டி புதைத்துவிட்டு இலங்கைத் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்திட நல்ல அரசியல் தீர்வு ஏற்படுத்திட ஒன்றுபட்டு செயலாற்ற வாருங்கள் என்று இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல், இயக்கத் தலைவர்களையும் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள இலங்கைத் தமிழர்களின் முன்னோடித் தலைவர்களையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
(இரா. அன்பரசு)
துணைத் தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
06-06-2009
0 விமர்சனங்கள்:
Post a Comment