தமிழ் அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்
இலங்கையின் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் அரசியல்வாதிகள் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. அருமைலிங்கம் அந்த வரிசையில் இறுதியாக இணைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருமைலிங்கம் ஈ.பி.டி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் எனவும், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபை மேயருமான சிவகீதா பிரபாகரன் மற்றும் அருமைலிங்கம் ஆகியோர் ஜனாதிபதியை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் விநாயகமூர்ததி முரளீதரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளும் கட்சி சிறுபான்மை கட்சிகளின் மீது பிரயோகிக்கும் அழுத்தம் காரணமாக கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வதாக சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருகின்றமை நோக்கத் தக்க விடயமாகும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment