தெரியாத பாதையில் புரியாத பயணம்
எங்கே போகிறோம் ? எப்படிப் போகிறோம் ? தெரியாமல் ஒரு பயணம் புரியாமல் ஒரு செய்கை. ஆம் ஈழத் தமிழர்களாகிய எங்களது இன்றைய நிலை இதுதான். ஈழத்தமிழ் மக்களின் இன்றைய அரசியல் நிலைமை மனதுக்கு ஒருவித அச்சத்தையே கொடுக்கிறது. இதுநாள்வரை புலிகள, பிரபாகரன் இவர்களின் மீதே மாற்றுக் கட்சிகளின் கவனம் முழுவதுமே திருப்பப்பட்டிருந்தது. தமது மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்ய முடியாது புலிகள் தடை செய்து கொண்டிருக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. நேர்மையாக எமது மக்களின் அரசியல் விடிவை நோக்கி காத்திருந்த பலரும் அனைத்து மாற்றுக்கட்சிகளின் நிலைப்பாடை பெரிதாக உற்று நோக்காது விட்டிருந்தார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது,
புலிகள் விவஸ்தைற்ற நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தம்மைத் தாமே அழித்துக் கொள்வார்கள் என்னும் ஒரு எதிர்பார்ப்பு.
அப்படியே புலிகள் வெற்றியடைந்து விட்டாலும் தமிழர்களின் வாழ்வில் ஒரு தற்காலிக விடுதலை கிடைக்காதா? என்னும் ஏக்கம்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் நடந்ததென்னவோ முதலாவது நிலைமையே. சொகுசு வாழ்க்கை கனவு கண்டு இருந்த மண்சட்டியையும் உடைத்தவனின் கதைபோல புலிகள் இன்று இருந்ததையும் இல்லாமல் ஆக்கிய பெருமையை பெற்றுக் கொண்டார்கள்.
ஆனால் இன்று மீதமிருக்கும் எமது மாற்றுக் கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பார்க்கும் போது நிச்சயமாக மனதில் ஒரு பீதி ஏற்படத்தான் செய்கிறது.
கருணா என்னும் தனிமனிதனின் பிரிவு புலிகளுக்கு கொடுத்த பயங்கரமான தாக்குதலின் விளைவே புலிகளின் இந்தப் பாரிய அழிவு என்பதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. கருணா பிரிந்த பொழுது இத்தகைய ஒரு நிலை புலிகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று உளச்சுத்தியோடு எடுத்துரைத்த உண்மை மனிதர்களைப் பார்த்து எள்ளி நகையாடிய புலி ஆதரவாளர்களை நானறிவேன்.
என்ன காரணத்திற்காக கருணா பிரிந்தார் என்பது ஒரு புறமிருக்கட்டும். கருணா வெளிப்படையாகவே அரசுடன் இணைந்து கொண்டது நிச்சயமாக ஒரு நேர்மையான செய்கையே.
அதில் உள்ள சரி, தவறு என்னும் நிலைப்பாட்டை ஒதுக்கி விடுங்கள். தான் அரசுக்கு எதிரானவர் என்று மக்களுக்கு ஒரு பொய்வேடத்தைக் கொடுத்துக் கொண்டு அரசுடன் மறைமுக உறவுகளை அவர் பேணி வந்திருக்கலாம். அப்படிச் செய்யாது அனைவருக்கும் வெளிப்படையாக தெரியும்படி தனது அரசு சார்பான நிலையை எடுத்தது தமிழர்களின் கறுப்பு அரசியலைக் கழுவும் முதலாவது செயலாகும்.
அதேபோல அனைவராலும் துரோகியாக வருணிக்கப்படும் டக்லஸ் தேவானந்தா அன்றிலிருந்து இன்றுவரை தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. அவருடைய நிலைப்பாட்டின் சரி, பிழை என்பன பற்றி இப்போது விவாதிக்கத் தேவையில்லை ஆனால் வெளிப்படையான அரசுடனான உறவு அவரைப்பற்றி மக்கள் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க உதவுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் செயலை விபரிக்கத் தேவையில்லை விரைவில் அவர்களே தமக்குள் பிளவுபட்டு ஒருவர் மீது ஒருவர் கரைபூசும் நோக்கில் அனைத்தையும் கக்கி விடுவார்கள். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பிரபாகரன் செய்ததை விட அதிக அளவில் தவறான செய்கைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலேயே செய்யப்பட்டிருக்கின்றது.
புலிகளின் அதிகாரபலத்தில் வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பதிவிகளால் இன்றுவரை அவர்கள் தமிழர்களுக்கு ஆற்றிய பணிகள் தான் என்ன? ஈழத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவினார்களா? தம்முடைய குடும்பத்தினர் வெளிநாடுகளில் படிப்பதற்கும், வாழ்வதற்கும் ஏற்ற வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக தமது பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுவே உண்மை.
அந்த வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு புலிகளால் எந்தவிதமான தடைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக புலிகள் செய்த அடாவடித்தனங்கள் அனைத்துக்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தார்களே ஒழிய தமது மனட்சாட்சியின் படி நடக்கவில்ல.
பல்லாயிரக்கணக்கான மக்களைப் பணயமாக வைத்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள புலிகள் முயன்றபோது ஒரு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற அங்கத்தினராவது, மக்களை விட்டு விடுங்கள் என்று முணுமுணுக்க ஆவது செய்தார்களா? இதை ஈழத்தில் வாழ்வை இழந்து தவிக்கும் அந்த அப்பாவி மக்கள் மறந்து விடுவார்கள் என்று இவர்கள் எண்ணினால் இவர்களை விட மூடர்கள் இருக்க முடியாது.
அடுத்ததாக புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மனாபா அணி) இவர்கள் இணைந்த தமிழ்த் தேசிய ஜனநாயக கூட்டு முன்னனியின் சமீபத்திய செயற்பாடுகள் மிகவும் தெளிவின்மையாக இருக்கிறது.
புலிகள் அமைப்பு தனது இறுதிக் காலத்தை எட்டும் காலங்களில் கூட்டுமுன்னனி அமைத்துக் கொண்ட இவர்கள் கூட்டமைப்பிற்கான தமது நோக்கத்தைத் தெரிவித்த போது பேதங்களை மறந்து தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைவதற்கு அடித்தளம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்றொரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சமீபத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதில் உபயோகிக்கும் சின்னத்திலேயே ஒரு ஒருமைப்பாடு காண முடியாது போன சம்பவத்தினால் மக்களின் மனதில் மீண்டும் அந்த அச்சம் கலந்த பீதி நிலவுகிறது.
பிரபாகரனும், புலிகளும் இருக்கும் போது அவர்களை எதிர்க்கும் மனோபாவமோ அன்றி அவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு கவசமாகவோ தான் இந்தக் கூட்டுமுன்னனி ஏற்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உண்மையான தமிழ் மக்களின் நியாயமான தீர்வை எதிர்நோக்கும் யாவருக்கும் புலிகளை அழிப்பதோ அன்றி பிரபாகரம் மரணமடைவதோ தான் நோக்கமாக இருக்கவில்லை.
தமிழ்மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கிறோம் என்னும் போர்வையில் அவர்களது குரல்வளையைப் பிடித்திருந்த புலிகளின் பிடி தளரவேண்டும் என்ற எதிர்பார்ப்பே அனைவரிடமும் நிறைந்திருந்தது. துரதிர்ஷ்டவசமாகவோ அன்றி காலக்கணிப்பின் கட்டாயத்தின் படியோ புலிகளின் அழிவும் பிரபாகரனின் மறைவும் நிகழ்ந்து விட்டது.
பிரபாகரன் மறைந்து விட்டார் என்னும் சொல்வோரையே அடித்துத் துவம்சம் செய்வோம் என்று அதட்டல் அதிகாரம் செய்த புலி ஆதரவாளர்கள் நேற்று வெளியான புலிகளின் புலனாய்வுத் துறையின் ஒப்புதல் அறிக்கையைப் படித்து என்ன சொல்லப்போகிறார்களோ தெரியவில்லை.
ஈழத்திற்கு வெளியே தமிழீழத் தனியரசு அமைப்பது ஈழத்தமிழருக்கு எந்தவகையிலும் தீர்வாக அமையாது. அந்த அறிக்கை வெளிவந்தவுடனேயே வெளிநாட்டு பத்திரிகைகள் அதன் பாரதூரமான விளைவுகளைப் பற்றி அலச ஆரம்பித்து விட்டன.
சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வை விரைவில் அளிக்க வேண்டும் என்னும் எண்ணம் சிறீலங்கா அரசுக்கு இருக்குமானல், இத்தகைய அறிக்கைகள் அந்த முடிவை பின்போட அவர்களுக்கு சரியான வகையில் உதவும் என்பதுவே துயரமான உண்மை.
அதுமட்டுமின்றி அகதிகள் முகாமில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்னும் சந்தேகப் பார்வையோடு நோக்கப்படும் இளைஞர், யுவதிகளின் விடுதலை பின்போடப்படுவதும் சாத்தியமே.
தாமே ஈழத்தமிழர்களின் தலைவர்கள் என்று தமக்குத்தாமே முடிசூட்டிக்கொண்ட புலிகள் தமது அழிவைத் தாமே தேடிக் கொண்ட பின்னால், விரும்பியோ விரும்பாமலோ ஈழத்தமிழினம் நடுக்கடலில் துடுப்பின்றித் தத்தளிப்பதௌ போலவே தென்படுகிறது.
இந்நிலையில் தமது சுயநலங்களை மறந்து மக்களை பாதுகாப்பாக கரைசேர்க்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் மாற்று அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரே திசையில் மக்களை அழைத்துச் செல்வார்களா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
இத்தனை காலம் எம்மக்கள் பட்ட துயரங்களில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக தமக்குள் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளை மறக்க இல்லை மன்னிக்க இதுவே சிறந்த தருணம்.
மாற்று இயக்கங்கள் தாம் கடந்து வந்த பாதையில் தவறிழைக்காமல் வந்தவர்கள் அல்ல. அதை அவர்கள் உணரும் தருணமும் இதுவே. இவ்வியக்கங்களில் இருந்து இதயசுத்தியிலமைந்த உயர்ந்த தலைமை வெளிவருமா? என்பதுவே எமது இன்றைய ஏக்கம்.
தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து மக்களின் உன்னத வாழ்க்கைக்காக குரல் கொடுக்க வேண்டிய தலைமைக்கு இப்போ தேவையானது துணிவு.
மாற்றுக்கருத்தாளர்களை நெற்றிப்பொட்டில் போடும் துணிவல்ல, அவர்களையும் அணைத்துக் கொண்டு ஒரு பரந்து பட்ட புரிந்துணர்வு என்னும் குடையின் கீழ் திரள வேண்டியதற்கான அவசியம்.
ஈழத்தமிழர்களுக்கு ஒரு தீர்வளிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் இருக்கும் இந்தியாவின் முழுப்பலத்தையும் பிரயோகித்து ஒரே நாட்டிற்குள் சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு மாநில சுயாட்சியைப் பெற்றுக்கொள்ள நாம் அவர்களுக்கு அளிக்கக்கூடிய சந்தர்ப்பம் இதுவே.
1983ம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி உயிரோடிருந்த பொழுது எமது இயக்கங்கள் தமக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைந்து புரிந்துணர்வு கொண்டிருந்தால் கிடைத்திருந்திருக்கக்கூடிய அதிகபட்ச தீர்வை அடையக்கூடிய சந்தர்ப்பத்தை மீண்டும் இழந்து விடக்காரணமாக இருந்தால் சரித்திரம் மன்னிக்காது.
தமிழ்மன்னன் போன்ற துரோகிகள் எழுதும் இந்த வீணான அலட்டலுக்கு யார் செவிசாய்க்கப் போகிறார்கள் ? என்று நகைக்கிறீர்களா…
புலிகளையும், பிரபாகரனையும் பாதுகாக்க நீங்கள் முன்னெடுத்த போராட்டங்களை இப்போ எமது மக்களின் விடுதலைக்காக எஞ்சியிருப்போர் இணைவதற்கான கோஷமாக முன்வையுங்கள்.
தமிழகத்து உறவுகளே! உங்களது முழுமுயற்சியும் பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறாரா இல்லையா எனபதில் செலவு செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு, ஈழத்தமிழர்களின் தீர்வை வென்றெடுப்பதற்காக அனைவரையும் ஒன்றுபடுத்துவதில் செலவழிக்கப்பட வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்.!!
தெரியாத பாதையில் புரியாத பயணத்தை பெயர்தெரியா ஊருக்கு மேற்கொள்ளும் நடவடிக்கையிலிருந்து எமது மக்களைப் பாதுகாக வேண்டிய கடமையில் அனைவரும் இருப்பதை மறந்து விடாதீர்கள்…!!!
–தமிழ்மன்னன்
அதிரடி இணையம்






0 விமர்சனங்கள்:
Post a Comment