‘யாழ்தேவி’ வரலாற்றுக் குறிப்பு
இலங்கை வரலாற்றை எடுத்து நோக்கும் போது இந்நாட்டில் முதன் முதலில் புகையிரதப் போக்குவரத்து 1864ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையில் இந்த முதலாவது ரயில் பயணம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
புகையைக் கக்கியவாறே, ஊவென்ற ஓசையுடன் சென்ற இந்தப் புதிய உருவத்தை முதன் முதலில் கண்ட மக்கள் இதற்கு ‘இரும்புப் பேய்’ எனப் பெயரிட்டு அழைக்கலாயினர்.
எரிபொருளுக்கு பதிலாக இது கறியை உபயோகித்ததால், கறி உண்டு நீர் குடித்து கொழும்புக்கு போகும் ‘இரும்புப்பேய்’ என்றும் மக்கள் செல்லமாக அழைக்கலாயினர்.
இதன் பின்னர் படிப்படியாக நாட்டின் பல பாகங்களுக்கு புகையிரதச் சேவை பரவலாக்கப்பட்டது. இந்த புகையில் வடக்கு வாழ் மக்களுக்கும் புகையிரத சேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
இதன் முதற்கட்டமாக 1903ம் வருடம் பொல்காவலையில் இருந்து அனுராதபுரம் வரையில் ஆரம்பிக்கப்பட்ட புகையிரதச் சேவை 1915ம் வருடம் அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையில் நீடிக்கப்பட்டது.
இவ்வாறு கொழும்பு – யாழ் புகையிரதச் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் ஆரம்பத்தில் இதனூடான பயணம் மிகவும் சிரமங்களைக் கொண்டதும் காலதாமதங்களை ஏற்படுத்துவதுமாக அமைந்திருந்தது. இப்பயணமானது இரு கட்டங்களாக இரு இயந்திரங்களைப் பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் முதலாவது கட்டம் கொழும்பில் இருந்து அனுராதபுரத்திற்கும் இரண்டாவது கட்டம் அனுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குமாக அமைந்தது. இக்கால கட்டத்தில் நீராவி இயந்திரங்களே பயன்பாட்டில் இருந்தன.
1951ம் வருடம் இங்கிலாந்தின் பு~; பெக்னோல் நிறுவனத்திடமிருந்து 1500 குதிரை சக்தி கொண்ட டீசல் இயந்திரங்க்ள 25 பெறப்பட்டன.
அதன் பின்னர் 1954ம் வருடம் ‘கொழும்பு முறைமையின்’ கீழ் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்திடமிருந்து எம்-2 ரக இயந்திரங்கள் கிடைக்கப் பெற்றன. இதன் பின்னர் புகையிரத சேவையின் பொற்காலம் இலங்கையில் ஆரம்பமாயிற்று எனலாம்.
1956ம் வருடம் ஏப்ரல் மாதம் 23ம் திகதி. எமது வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு நாளாகும்.
அப்போதைய போக்குவரத்து அமைச்சராக இருந்த மைத்திரிபால சேனநாயக்க, புகையிரத பொது முகாமையாளர் டீ.டீ.ரம்பால, போக்குவரத்து அதிகாரி டீ.கே. ஜென்க உட்பட பல அதிகாரிகள் கோட்டை புகையிர நிலையத்தில் கூடியிருந்தனர்.
அன்று அதிகாலை 5.45 மணிக்கு சுபவேளை குறிக்கப்பட்டிருந்தது.
அலங்கரிக்கப்பட்ட யாழ்தேவி மங்கள வார்த்தியங்கள் முழங்க காலை 6.01 மணிக்கு தனது முதலாவது பயணத்தை யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பித்தது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 290 மைல் செல்ல வேண்டும். அதாவது 395.83 கிலோமீற்றர். யாழ்தேவி புகையிரதம் 7 மணி 30 நிமிடங்களில் இத்தூரத்தைக் கடந்தது.
காலை 5.45க்கு யாழ்தேவியில் பயணம் மேற்கொள்ளும் ஒருவரால் பகல் சுமார் 2.00 மணி அளவில் யாழ்ப்பாணத்தை அடையக்கூடியதாக இருந்தது.
இவ்வாறு யாழ்தேவி பொதுமக்களின் பேரபிமானத்தைப் பெற்றிருந்தவேளை ‘உத்தரதேவி’ என்றொரு புகையிரதமும் கொழும்பு – யாழ் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
ஆயுதப் போராட்டம் தமிழர் தாயகப் பகுதிகளில் தலை நிமிர்ந்து வந்திருந்த ஒரு காலகட்டத்தில், அதாவது 1985ம் வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதி கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டிருந்த யாழ்தேவி புகையிரத்திற்கு மாங்குளம் - கொகாவில் பகுதியில் வைத்து நிலக்கண்ணி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக எட்டு பெட்டிகள் முழுமையான சேதங்களுக்கு உள்ளாகின. இதில் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். யாழ்தேவி முகங்கொடுத்த முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும். இதில் 175க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
1986ம் வருடம் மார்ச் மாதம் 16ம் திகதி உத்தரதேவி புகையிரதம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வரும்போது பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளானது. இதே மாதம் மீண்டும் ஓமந்தையில் வைத்து யாழ்தேவி புகையிரத்திற்கு தீ வைக்கப்பட்டது.
1986 மார்ச் மாதம் 25ம் திகதி மீண்டும் புளியங்குளத்திற்கும் வவுனியாவுக்கும் இடையில் வைத்து யாழ்தேவி குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது. அதன் பின்னரும் யாழ்தேவி புகையிரதம் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
பின்னர் 1987ல் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான புகையிரதப் பாதை சேதமாக்கப்பட்டது.
அதன் பின்னரும் புகையிரதப் பாதை செப்பனிடப்பட்டு மீண்டும் யாழ்தேவி தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
ஆனால் தொடர்ந்தும் யாழ்தேவி மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால் இறுதியில் 1990ம் வருடம் ஜூன் மாதம் 13ம் திகதி யாழ்தேவி தனது யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை நிறுத்திக் கொண்டது.
இப்போது – 19 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் யாழ்தேவி தனது பயணத்தை யாழ்ப்பாணம் நோக்கித் தொடர தயாராகி வருகிறது. இதற்கென வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை வரையில் 159 கிலோமீற்றர் பாதை புனரமைக்கப்பட வேண்டியிருப்பதால் இதற்கென அரசு ‘வடக்கு நண்பர்கள்’ என்றொரு திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் 2010ம் வருடம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு அனைவரும் கட்டாயமாக உதவ முன்வர வேண்டும்.
இதற்கென 14 பில்லியன் ரூபா நிதி தேவைப்படுமென திட்டமிடப்பட்டுள்ளது.
- இப்னு அசூமத்






0 விமர்சனங்கள்:
Post a Comment