சீமானின் “கூத்து” !
எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை நாடச்செய்வதே சீமான் எனும் தமி்ழ் சினிமா இயக்குனருக்கு,அவரது நண்பர்கள்,உற்றார் உறவினர்கள்,நலன் விரும்பிகள் செய்யக்கூடிய முதலுதவியாகும்.
மன நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் சீமானின் மருத்துவச் செலவுகளை புலிகளின் தமிழக முகவர்கள் “நிபந்தனையின்றி” ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.
மேடை கிடைக்கிறது என்பதற்காக முழங்கித்தள்ளும் சீமான் எனும் கோணத்தில் இருந்து பார்ப்பதை விட, விரக்தியின் உச்சத்தில் ஏறத்தாழ விசர் பிடித்த நிலையில் குமுறித்தள்ளும் சீமான் என்றும் பார்க்கலாம்.
இந்த “விசர்” என்றால் என்னவென்று ஏற்கனவே தெனாலியில் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு நன்றாக விளக்கியிருப்பதால், இதை நாம் வேறு விளக்கும் அவசியம் இல்லை.
மொழிப்பற்றும்,இனப்பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பதில் தவறில்லை ஆனால் அது வரையறையை மீதும் போது தீவிரவாதமாகவும், அது ஆதரிக்கப்படாமல் தோல்விகள் வரும் போது பயங்கரவாதமாகவும் தோற்றம் பெறுகிறது.
புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த காலத் தோல்விகளை முற்று முழுதாக ஒத்துக்கொண்டு,அதை வெளியில் சொல்லி ஒரேயடியாக தம் நிதி வரவுக்கு “ஆப்பு” வைக்க விரும்பாத காரணத்தால் ஓரளவு மெதுவாக, விடயங்களை கசிய விட்டுக்கொண்டு, அதே நேரம் தம் பழைய பெயரைப் பாவித்து புதிய தலைப்பாகை ஒன்றைப் போட்டுக்கொள்ள முயற்சிப்பதை மாத்திரமே இன்றைய நிலையில் முன்னெடுக்கிறார்கள்.
அதற்கான சில முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள், இன்னும் சொல்லப்போனால் பழைய புலிக்கு அறவே தெரிந்திராத ஜனநாயக வழிகளையெல்லாம் பரீட்சித்துப் பார்க்கிறார்கள்.
புலி வரலாற்றில் என்றுமே இல்லாத வகையில் “பொதுக் கொள்கைக்கு” அதுவும் மக்கள் ஆலோசனை எல்லாம் கேட்கிறார்கள்.
இப்படி மக்கள் நலன் சார்ந்த ஒரு கட்டமைப்பாகத் முதலில் காட்டிவிட்டு,தொடர்ந்தும் பணக்கறப்பில் அவர்கள் இயங்குவார்கள் எனும் சந்தேகத்தைத் தூக்கியெறிய முடியாது, அதே வேளை அவர்களும் திருந்தமாட்டார்கள் என்று அடித்துக் கூறவும் முடியாது.
எனவே, புலிகளின் காமெடியே இப்படியிருந்து கொண்டிருக்க, இடையில் ஒன்றுக்கும் இல்லாமல் திடீரென சீமானின் கூத்து பெரும் கூத்தாக இருக்கிறது.
இனப்பற்று அனைவருக்கும் இருப்பது நியாயந்தான்,ஆனால் சீமானுக்கு ஏன் அது திடீரெனப் பொங்கி வழிகிறது?
அண்ணன் பிரபாகரன் ஏதாவது ஒரு கூரையைப் பிய்த்துக்கொண்டு இல்லை வானத்தையே பிளந்தாவது வீர சாகசம் காட்டுவார் என்று நம்பி ஏமாந்த கடைநிலை, அதுவும் மிகக் கடைசியாக புலி ஆதரவாளராக மாறிய சீமானுக்கே இந்த விரக்தி இருக்குமென்றால், அண்ணன் பிரபாகரனை நம்பி 30 வருடம் தம் இன்னுயிர்களை,உழைப்பை,உறவுகளை, உடலுறுப்புகளை இழந்து தவித்து வாடிப்போய் இருக்கும் இவருக்கு முந்திய புலி ஆதரவாளர்களுக்கு எந்தளவு இருக்க வேண்டும்?
சினிமாவில் வரும் ஹீரோக்களால் செய்யக்கூடிய மாய மந்திரங்களை நிஜ வாழ்க்கையில் வைத்து ஒப்பிட்டுப்பார்த்து உறங்கிக்கொண்டிருக்கும் சீமான் இன்னும் நித்திரையை விட்டு எழுந்துகொள்ளவி்ல்லை என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
எது உண்மை? எது பொய்? என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னர் ஒவ்வொரு மனிதரும் தம்மைத்தாமே உணர்ச்சியூட்டிக்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பாசத் தம்பி சீமான் தமிழீழப் போராட்டத்தை மேடையில் சீறிப்பாய்ந்து கூடியிருக்கும் மக்கள் விசிலடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்து, திட்டமிடப்பட்டு களமிறக்கப்பட்ட கோமாளியா அல்லது உண்மையிலேயே விசர் பிடித்திருக்கும் ஒரு பக்தனா என்பது குழப்பமாகவே இருக்கிறது.
தம் மீதிருக்கும் போர்வையை அகற்றிக்கொள்ள இதற்கு முன்னர் இருந்த புலித்தலைவர்கள் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்கவில்லை, ஆனால் இப்போதைய புலித்தலைவரும் அதன் பிரச்சார மருத்துவர்களும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.
பத்மனாதனின் ஒரு பக்கப் படத்தை உலகமெல்லாம் வெளியிட்டு விட்டு, இப்போது அதே படத்துக்கு மீசை வைத்தும் வெளியிட்டு வருகிறார்கள்.
பல விதமான குழப்பகரமான அறிக்கைகளும் வெளியிடுகிறார்கள்.
இப்படி முன்னாள் புலிகள் செய்யும் காமெடிகளே பெரியளவில் நடந்தேறிக்கொண்டிருக்க, சீமான் போன்றவர்கள் இவற்றையெல்லாம் மிஞ்சி சிங்களவனுக்கு சவால், கலைஞருக்கு மறைமுகமான சாடல் என்று எதற்காக இந்தக் கூத்தை அரங்கேற்றுகிறார்?
அவருக்கு அரசியலில் புக வேண்டும் எனும் ஆசை இருக்கிறது என்றால், நேரடியாக மக்கள் பிரச்சினையை முன்வைத்து அவர் விரும்பும் களத்திலேயே குதிக்கலாம், அதை விட்டு “தமிழ் உணர்வு” எனும் ஆயுதத்தை கையிலெடுப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு இவர் சொல்ல வருவது என்ன?
பிரிவினைவாதமே தமிழகத்தை முன்னேற்றும் என்பதா? அதாவது இந்திய தேசத்தை விட்டுத் தமிழகம் பிரிந்து தனியொரு நாடாக வேண்டும் என்பதா?
இலங்கையில் போலன்றி, இந்தியாவில் “தமிழரும்” இந்தியராக இருப்பதனால் தான் அவர்களின் “தமிழர்” எனும் அடையாளமும் மதிப்புடன் பேணப்படுகிறது.
பிரிவினை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை என்பதை கடந்த தேர்தலில் மக்கள் மிகத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டனர்.
திடீர் பல்டி அடித்து அதில் பெற்ற தோல்வியில் இருந்து இன்னும் அம்மையார் வெளிவரவே இல்லை, தமிழக அரசியல் நிலை இப்படியிருக்க இந்த சீமான்களின் இடுகை தமிழக சமூகத்தையும், இலங்கை சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கப்போகிறது என்பதை சாதாரண மக்கள் சிரத்தையுடன் எதிர்க்கொள்ளும் அவசியம் வருகிறது.
“சிங்களனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.” – சீமான்.
ஏனய்யா சீமான், தமிழர் வாழ்வு இப்போதுதான் யுத்தச் சத்தம் அற்ற ஒரு நிலையை அடைந்திருக்கிறது, அதற்குள் உமக்கேன் இந்த இரத்த வெறி?
உம்மைச் சொல்லிக் குற்றமில்லை, எல்லாம் உமக்குப் படங்காட்டிய வெற்றுப் புலிகள் செய்த வேலை.
எண்ணிலடங்கா விமானங்கள் இருக்கும் ஒரு நாடு, இன்னொரு நாட்டின் மீது விமானத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ளலாம், இருப்பதே இரண்டு விமானம், ஏற்கனவே லட்சோப லட்ச மக்களை இழு இழு என இழுத்துக்கொண்டு சென்றாகிவிட்டது, பல ஆயிரம் தொன் இரும்புத் துண்டங்களையும் இழுத்து வந்தாகி விட்டது.
இலங்கை அரசின், விமானப்படையின் பூதக்கண்களிலிருந்து இனியும் மறைக்க முடியாது, மறைக்கவும் இடமில்லை எனும் நிலையில், முட்டாள்த் தனமாக இரு “தமிழ்” விமானிகளை ஒன்றுக்கும் பிரயோசனமில்லாமல் உயிரிழக்கச் செய்து, இருந்த விமானங்களையும் பரிதாபமாக இழந்து விட்டு, “தற்கொலைத் தாக்குதல்” நடத்தியதாக வீரம் பேசியவர்கள் தான் புலிகள்.
இதைக் கூட தன் அறிவுக் கண்ணால் அறிந்து கொள்ள முடியாத சீமான், பத்துப் பள்ளியில் குண்டு போடுவேன் என்று கூறுவதோடு நிறுத்திக்கொண்டாலும் பரவாயில்லை, தன் குடும்பத்தையே அழித்துக்கொண்டு களமாடிய தன் தலைவன் பெருமை பேசுவது கொஞ்சம் அல்ல மிக மிக ஓவர்.
யாரைக் குடும்பம் என்கிறார் சீமான்? பலி கொடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் அனைவரையுமா? அவர்கள் எல்லாம் பலி கொடுக்கப்பட்டது உம் தலைவரின் வீரமா?
உம் தலைவரின் காலடியில் துப்பாக்கி ரவைகள் வந்து விழும் வரை அவருக்கு “நீங்களே” கூறும் குடும்பம் செத்து மடிந்து கொண்டிருப்பது தெரியவே இல்லையே சீமான்?
அவரது குடும்பம் என்று நீங்கள் கூறும் அப்பாவி மக்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச்செல்லப்பட்டு துப்பாக்கிகளை ஏந்தச் செய்த போது, ஒவ்வொரு தாய்மாரும்,தகப்பன் மாரும் விட்ட கண்ணீர் எல்லாம் உம் தலைவரின் கண்ணுக்குத் தெரியவே இல்லையே சீமான்?
முகாம்களில் சித்திரவதை,கம்யுனிசம்,அது இது என்று அலைபாய்ந்து திரியும் சீமானின் கூத்து சரி அவரே கூறுவது போன்று முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் மக்களுக்கு உதவும் ஒரு திட்டத்தை முன் வைக்கத் தவறுவது ஏன்?
தமிழர் தலைமை எப்போதுமே ஆயுத முனையில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததால், இன்று துண்டாடப்பட்டுத் தலைமையெ இல்லாமல் திக்காடும் தமிழினத்தின் ஒற்றுமை குறித்து ஒரு வார்த்தை தானும் பேச முடியாத கையேறு நிலை ஏன்?
உண்மையில் ஈழத்தமிழினம் மீது அக்கறை இருந்தால், அந்த அக்கறையை அப்பாவி மக்கள் மீதும் காட்டலாமே? அதையெல்லாம் செய்ய மாட்டீர்கள், ஏனென்றால் உங்கள் அகராதிகளில் தமிழினம் என்றால் அது பிரபாகரனும் அவரைச் சுற்றி மிக அருகில் இருந்து கோழைத்தனமாக சரணடைந்த தளபதிகளும் தானே?
மக்களை உசுப்பேத்தி அவர்கள் உணர்ச்சியில் குளிர்காய்ந்துகொண்டிருக்கும் சீமான்கள் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள்.
அதுதான், அவர்களை விட இந்த ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே, அவ்வளவு ஏன் பிரபாகரனையும் கூட தம் வீட்டில் வைத்து சோறு போட்டுக் காப்பாற்றி வந்த எத்தனையோ தமிழுணர்வாளர்கள் இன்றும் தமிழகத்தில் வாழ்கிறார்கள்.
ஆனால், அவர்கள் அனைவரும் மெளனமாக இருக்கிறார்கள்.
அவர்கள் மெளனத்தின் பின்னால் என்ன காரணம் இருக்கலாம் என்று அங்கும் இங்கும் தேடிச் செல்வதை விட, பிரபாகரனின் தந்தையை நன்கறிந்த ஒரு சிலரிடம் கேட்டுப்பார்த்தாலே போதுமானது.
உண்மைகள் இவ்வாறிருக்க, அண்டை நாடு, அண்டை மாநிலங்களிலும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் கோமாளித்தனமாக இவர் பேசித் திரிந்தாலும்,இவரை யாதொருவரும் கணக்கிலும் எடுக்கவில்லை என்பது மிகக் கட்டாயமாக அவதானிக்கப்பட வேண்டியது.
கலைஞரும் இருந்த ஒரு மேடைக்கு குட்டையான பாவாடை அணிந்து வந்தார் என்று ஸ்ரேயாவுக்கெல்லாம் வழக்குப் பதியப் போன தமிழக வழக்கறிஞர்கள் கூட இந்த சீமானின் கேலிக் கூத்துளைப் பார்த்து மெளனித்திருக்கிறார்கள் எனும் போதே இவரது “கூத்தின்” சக்தி என்னவென்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் சீமான் போன்ற புல்லுருவிகள் ஆரம்பத்திலேயே அடக்கப்பட வேண்டிய தேவையும் தமிழ் மக்களுக்கு இருக்கிறது.
அதற்காக அவரை அடிக்க வேண்டாம், திட்ட வேண்டாம், அவர் கூத்துப் போடும் மேடைகளை நிராகரித்தாலே போதுமானது.
இப்படியான கோமாளிகளை, கோமாளிகளாகப் பார்ப்பது ஒரு புறமிருக்க, இவை வேறு சக்திகளால் தமிழினத்தின் மீதான சந்தேகக் கண்ணை இந்திய உளவுத்துறையும், இலங்கையும் கூட திறந்து வைத்திருப்பதற்குத் திட்டமிட்டு களமிறக்கப்பட்டவைகளாக இருக்கலாம்.
திருமாவளவன் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பிக்கொள்ள சீமான் எடுக்கும் பிரயத்தனம் மற்றவர்களை விட கேமாளித்தனமாக இருந்தாலும், இவர் விதைக்க முயலும் நச்சுக்கள் தீவிரமானவையாகவே தெரிகிறது.
மலையாளி,கன்னடன்,சிங்களன் என்று தமிழ்நாட்டைச் சுற்றி அனைத்துப் பக்கங்களையும் பகையாக்கி, தமிழினத்தைத் துண்டாட முற்படும் அனாமேதய சக்தியாகவே இவர்கள் கணிக்கப்பட வேண்டும்.
இன்னும் ஆயிரம் சீமான்கள் ஒன்று சேர்ந்தாலும் தமிழ்நாட்டின் தேசப் பற்றை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மையானாலும், இப்போது விதைக்கப்படும் விதைகளின் விளைச்சல் பயங்கரமானதாகவும் இருக்கலாம்.
தமிழ் சினிமா மொழியிலேயே சொல்வதானால் சீமான் போன்றவர்கள் ஐ.ஏ.எஸ், இலங்கை உளவுத்துறை,சி.ஐ.ஏ அல்லது எம்.ஐ 15 போன்ற உளவுத்துறைகளின் கையாளாகவும் இல்லை விலை போனவராகவும் கூட இருக்கலாம்.
ஒரு இனம் சார்ந்த குரல் என்பது அந்த இனத்தின் அத்தனை பிரிவு மக்கள் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சாரம் என்பது சமுதாயத்தின் அனைத்து சாரார் சார்ந்த கருத்தாகவும் இருக்க வேண்டும்.
எப்போது சமுதாயத்தின் ஒரு சிறு குழுவின் நலனுக்காகப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறதோ, அப்போதே அது மக்கள் நலன் எனும் இடத்திலிருந்து வெளியேறி விடுகிறது.
அதன் பின், மக்கள் நலன் எனும் போர்வையில் அவர்கள் போடும் அத்தனை கூத்துகளும் அவர்கள் நலன் சார்ந்த குறுகிய விடயமாக மட்டுமே இருக்கும்.
இவற்றை கடந்த கால வரலாறு நிரூபித்தும் இருக்கிறது.
எனவே, இவ்வாறான முட்டாள்களின் கோமாளித்தனங்களை வாசகர்கள் மீது திணித்து அதைக்கொண்டு சில்லறை பார்ப்பதைவிட இவற்றின் நியாய,அநியாயங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் தம் கடமையையும் ஊடகங்கள் செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர் வரவை அதிகரிப்பதற்காக சில இன்டர்நெட் ஊடகங்களும் இவர்களின் இந்தக் கோமாளித்தனத்தை தலைப்புச் செய்திகளாக்கி அழகு பார்க்கின்றன.
தமிழ் உணர்வு என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான விடயங்கள் ஏதுமில்லாம இக் கோமாளிகளின் கூத்துக்கள் தேவையில்லாத பிரிவினைவாதத்தைத் தூண’டுமே ஒழிய வேறு எதையும் செய்யப் போவதில்லை.
இந்தத் துண்டாடலில் யாருக்குப் பாதிப்பு என்று சிந்திக்கும் கடமைப்பாடு இவ்வாறான கோமாளிகளை ஊக்குவிக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது.
இன்றைய உலகமயாக்கலில் மறைந்து கொண்டு போகும் மொழிப்பாவனைக்கு எதிராகவே ஊடகங்களின் பங்கு இன்னும் வீறு கொண்டு எழவில்லை, இந்த நிலையில் சீமான் போன்ற கோமாளிகளை தோலுரிக்கக் கேட்பது எந்த அளவு எடுபடும் என்று தெரியாது.
ஆனாலும் புலிகள் சார்பான ஊடகங்களுக்கு சீமான் போன்ற கூத்தாடிகள் இருந்தால் தான் பிழைப்பே நடக்கும்.
அந்த இடைவெளியைப் பாவிக்கத்தெரிந்த இன்னும் பல சீமான்கள் உருவாகுவதையும், புறக்கணிக்கப்படுவதையும் தீர்மானிக்கும் சக்தி மக்களிடமே இருக்கிறது.
அந்த மக்களுக்கு உண்மைகளை எடுத்துச்சொல்லும் பங்கை ஊடகங்கள் செய்யாமல் விடும் பட்சத்தில், மக்கள் கணிப்பு என்பதும் தொடர்ந்தும் ஒரு “உணர்ச்சியூட்டல்” மாயையாகவே இருக்கப்போகிறது.
அறிவுடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment