புலிகளைவிடத் தமிழர்களின் பிரச்சினையே பெரியது: பாரதப் பிரதமர்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையானது ‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைவிடப் பெரியது’ எனத் தெரிவித்திருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் இலங்கை துணிவுடன் செயற்படும் என நம்பிக்கைவெளியிட்டுள்ளார்.
“தமிழர்களின் பிரச்சினை விடுதலைப் புலிகளைவிடப் பெரியது. தமிழர்கள் ஏனைய சமூகங்களைப் போன்று சமத்துவமாக, இறைமையுடன், தன்மானத்துடன் வாழ்வதற்கான தேவைகளை இலங்கை துணிவுடன் நிறைவேற்றும் என நான் நம்புகிறேன்” என மன்மோகன் சிங் இன்று செவ்வாய்க்கிழமை லோக்சபாவில் கூறினார்.
குடியரசுத் தலைவர் லோக்சபாவில் ஆற்றிய உரைக்கு நன்றிதெரிவித்து நடத்தப்பட்ட விவாதத்தின்போது லோக்சபா உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இந்தியப் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய பங்காற்றிவருவதாகக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே இலங்கைக்கு 500 கோடி ரூபாவை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைத் தமிழர் விடயம் தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் அனைத்துக்கட்சிக் குழுக்கூட்டமொன்றைக் கூட்டவேண்டுமென லோக்சபாவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள், இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாகத் தமது கவலைகளை வெளிக்காட்டியிருந்ததுடன், இலங்கை விடயம் குறித்து ஆராய அனைத்துக் கட்சிக்குழுக் கூட்டமொன்று கூட்டப்படவேண்டுமெனக் கோரிக்கைவிடுத்திருந்தன.
இதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதாக மத்திய அரசாங்கம் லோக்சபாவில் உறுதிமொழி வழங்கியது.
0 விமர்சனங்கள்:
Post a Comment