‘வணங்கா மண்’ கடற்படையினரால் தடுத்து வைப்பு;அரசின் அனுமதியுடன் பொருட்களை வழங்கவுள்ளவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலை கடற்படையினர் தடுத்து நிறுத்தியிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.
வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த இக்கப்பலை பாணந்துறை கடற்பரப்புக்கு மேற்கே 150 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து நேற்றுக் காலை 4 மணியளவில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மேர்சி மிஷன் டூ வன்னி(வணங்கா மண்) எனும் பதாகையைத் தாங்கி சிரிய நாட்டுத் தேசியக் கொடியுடன் வந்த இக்கப்பலில் பயணம் செய்த 15 வெளிநாட்டு மாலுமிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வரும் இக்கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்பட்டன. இக்கப்பலில் பயணித்தவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை இலங்கை அரசின் உரிய அனுமதி பெற்று தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடக மேற்கொண்டுள்ளதாக வணங்கா மண் ஏற்பாட்டு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment