புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கும் பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் தொடர்பில்லை: இந்தியா
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டமைக்கும், இலங்கை-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கும் தொடர்பில்லையென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் தெரிவித்தார்.
“இலங்கை-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பாக முதில் பேச்சுக்கள் நடைபெற்றனதான். ஆனால் அதனை நாம் பின்னர் கிடப்பில் போட்டுவிட்டோம். அதனைப் பின்தொடரவில்லை” என சிவ்சங்கர் மேனன் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்ததில் ஒரு விடயம் இன்னமும் இறுதிப்படுத்தப்படவேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், சில வருடங்களுக்கு முன்னரே அந்த நடவடிக்கைகளை ஒத்துவைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்படாதபோதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு ஆயுதங்கள் தேவையெனக் கோரிக்கைவிடுத்துவந்ததாகவும் அவர் கூறினார். அவற்றில் சிலவற்றைமாத்திரமே இந்தியா வழங்கியதாகவும், எஞ்சியவற்றை பாகிஸ்தான், உள்ளிட்ட ஏனைய நாடுகளில் பெற்றுக்கொண்டதாகவும் மேனன் சுட்டிக்காட்டினார்.
எனினும், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா ரோடார்கள், 40 மில்லி லீற்றர் எ-70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை வழங்கியிருந்ததாக இந்திய அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கியதாகத் தமிழகக் கட்சிகள் பல குற்றஞ்சாட்டியிருந்ததுடன், அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருந்தன.
அதேநேரம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் யுத்தத்தைத் தான் முன்னெடுத்ததாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment