வடிகட்டிய முட்டாள்களின் கதைகேட்டு அம்மானை ஓரம்கட்டியதால் இன்று முப்பது வருடகால ஈழ யுத்தத்தை மூழ்கடித்து விட்டார் பிரபாகரன்.
புலித் தலைமையால் தனிமனிதர் என்று கருதப்பட்ட கருணா அம்மான் என்ற அந்தத் தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மனமில்லாத காரணத்தினால் இன்று முப்பது வருடகால தமிழீழப் போராட்டம் முப்பது மாதங்களுக்குள் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நாகரீக அரசியல் உலகத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் மாறுபட்டேயாக வேண்டிய ஈழப்போராட்ட வரலாற்றில் பெரிதும் தேவையான தொன்றாக இருந்தது. தலைவன் பிழை செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டும் மக்களாக நாம் அன்று ஒன்றுபட்டு இருக்கவில்லை. புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள், என்று சுற்றிவரப் பலபேர் இருந்தும் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளைச் சுட்டிக்காட்டக்கூடிய நிலை இல்லாததன் விளைவே தர்பா காட்டு வாழ்க்கையின் பக்கம் பிரபாகரனை அழைத்துச் சென்றது.
இலங்கையில் தமிழர் வாழ்க்கை இத்தனை நெருக்கடிகளைச் சந்திப்பதற்கும் யார்காரணம் ? இத்தனை அழிவுகளும் விளைவுகளும் யாரால் நடந்தது ? இதை எமது உலகத் தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும் ! பிரபாகரனுடன் 22 வருடங்கள் கருணா அம்மான் இருந்துள்ளார். இலங்கை, இந்திய ராணுவத்தினுடனான வெற்றிச் சண்டைகள் அனைத்தையும் கருணா அம்மானே முன்னின்று நடத்தியுமுள்ளார்.கிழக்குப் பேராளிகளை ஒரு கட்டுக்கோப்பான உக்கிர படையணியாக கருணா அம்மான் வழிநடத்தியதன் விளைவாலேயே பிரபாகரன் என்ற டம்மி மனிதனின் பெயரை உலகத் தமிழினம் அறியத் தொடங்கியது. உலக அரசியலின் நவீன ஓட்டத்திற்கு ஏற்றாற்போல நாங்களும் அரசியலில் முதிர்ச்சி அடைய வேண்டியது காலத்தின் நியதியாகும். இதைத்தான் அன்று பிரபாகரனிடம் தனி ஒரு மனிதனாக இருந்து துணிந்து நின்று எடுத்துரைத்தார் கருணா அம்மான் அவர்கள்.
இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும், கொள்கைகளை மாற்ற வேண்டும், தனிநபர்படுகொலைகளை நிறுத்த வேண்டும், பொதுமக்களின் வீணான உயிரிழப்புக்களைத் தவிர்க்க வேண்டும். அப்பாவி சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான இரக்கமற்ற படுகொலைகளை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் பிரபாகரனின் முகத்திற்கு முன்னே பேசக்கூடியவராக கருணா அம்மான் ஒருத்தரே இருந்தார். இருந்தாலும் அம்மானின் படைசேர்ப்பு, படைகுவிப்பு, படைகாப்பு, படை மீட்பு என்ற நுணுக்கமான தொடர் ராணுவ வெற்றிகளைக் கண்ட பிரபாகரன் எதுவுமே எதிர்த்துக் கதைக்க முடியாதவராக தொடர் பாராட்டுக்களையும் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றியுமே பேசுபவராக இருந்தார். அன்று கருணா அம்மான் புலிகளின் ராணுவப் பிரிவுத் தலைமைத் தளபதியாக இருந்து வடபகுதி முழுவதையுமே போர் நடவடிக்கை மூலம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தார். ஆனால் இன்று முழு நிலங்களையுமே புலிகள் இழந்துள்ளனர். களத்திலே முன்னணி மூத்த தளபதிகள் இருந்தும் மூக்குடைக்கப்பட்டதன் விளைவு என்ன ? எல்லோருமே மூச்சில்லாமல் போனதன் முடிவு என்ன?
ஆளுமையும் அதிஷ்டமும் உள்ள அந்த அம்மான் என்ற தனிதனிதன் களத்தில் இல்லாமல் போனதே இத்தனை அவலங்களுக்கும், விளைவுகளுக்கும் முடிவுகளுக்கும் காரணமாகும். ஆட்லறி ஏவுகணை, ஆகாய விமானங்கள் என்று ஆயுதவளங்களும் ஆட்பலமும் இருந்தால் மட்டும் போதாது. அதனை எல்லாம் நெறிப்படுத்தக்கூடிய ஆளுமையும், அதிஷ்டமும் உள்ள கருணா அம்மானின் போரியலின் சூத்திரங்களும், சூழ்ச்சிகளும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அன்று கருணா அம்மானின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டிருப்பாரேயானால் இன்று பிரபாகரனால் இத்தனை மக்கள் இழப்புக்களும் அவலங்களும், போராளிகளின் அநாவசிய இழப்புக்களும் ஏன். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதிகளின் இழிவான பேரிழப்புக்களும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இருந்திருக்காது. அம்மானின் கிழக்குப் படையணிகள் இல்லாத போர்க்களம் என்னவாச்சு ??
வன்னிக் காடுகளும் சண்டையிடும் என்று நம்பிய புலித்தலைமைக்கு அம்மானின் உதவி கிடைக்காது போனதால் அத்திவாரத்தோடு அழிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு தளப்பிரதேசமும் மக்கள் ஆதரவும் இரு கண்களாகும். இரண்டையும் இழப்பதன் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைகின்றது. கருணா அம்மானின் பிளவோடு புலிகளின் நிலப்பரப்புக்கள் சுருங்கத் தொடங்கியது. வடிகட்டிய முட்டாள்களின் கதைகேட்டு அம்மானை ஓரம்கட்டியதால் இன்று அதே அம்மான் இல்லாத போர்க்களத்தில் முப்பது வருடகால ஈழ யுத்தத்தை மூழ்கடித்து விட்டார் பிரபாகரன். உலகத் தமிழினமே எண்ணிப்பார்! போர் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பாக கடைப்பிடிக்கப்படும் ஜெனீவா உடன்படிக்கைக்கு முரணான வகையில் மக்களை வெளியேறவிடாமல் தடுத்த புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீங்கள் மௌனம் சாதித்தது ஏன்?
பல்வேறுபட்ட புரிந்துணர்வு உடன் படிக்கையின் பின் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பின் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பார்த்திரத்தை உதாசீனம் செய்து தொடர்ச்சியான யுத்த நிறுத்த மீறல்களை புலிகள் செய்த போதும் மக்கள் படை என்ற பெயரில் புலித்தலைமையை உடன்போரை தொடங்குமாறு கூறும் கடிதங்களை பிரசுரித்த போதும் மக்களின் இடப்பெயர்வு சொல்லொண்ணாத் துன்ப துயரங்கள், எம்மினத்தின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், இழப்புக்கள், எதிர்கால வாழ்க்கை தொடர்பான தொலைநோக்குச் சிந்தனை இல்லாது போனது ஏன்? மாவிலாறு நீரை மறித்துப் படையினரை வலிந்து போருக்கு இழுத்தது மாத்திரமன்றி கிழக்கில் மக்களை இடம்பெயர வைத்து வாகரையில் மக்களைத் தடுத்து மனிதக் கேடயங்களாகப் பாவித்து இன்று கிழக்கு முழுவதையும் இழந்த கையோடு குறுகிய காலத்திற்குள் மன்னார் மடுமாதா, கிளிநொச்சி, முல்லைதீவு, விசுவமடு, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் என்று மக்களைத் தடுத்து மனிதக் கேடயங்களாகப் பாவித்து இறுதியில் ஆயிரக் கணக்கான மக்களையும் பலிக்கடா ஆக்கிவிட்டு, ஆயிரக்கணக்கான அப்பாவிப் போராளிகளையும் பலியிட்டு இறுதியில் வடக்கையும் இழந்து ஏன் புலித் தலைமையின் சாம்ராஜ்ஜியத்தை அத்திவாரத்தோடு பிடுங்கி வீசப்பட்டுள்ள இந்த நேரத்தில், விடுதலைப் புலிகளை நம்பி ஏமாற்றப்பட்டு ஒரு அரசியல் பலமில்லாது தனிமைப்பட்டு நிற்கும் அப்பாவி மக்களின் அழுகுரல் மரண ஓலம் இவைகள் தான் பிரபாகரனால் விட்டுச் சென்றுள்ள தமிழர் தடயங்களாக உள்ளது. இதிலிருந்து நீங்கள் பெற்றுக் கொண்ட படிப்பினைதான் என்ன சர்வதேச தமிழினமே ??
பிரபாகரனிடம் ஒரு தொலைநோக்குப் பார்வையோ, மக்கள் சிந்தனையோ வளரவில்லை. தொடர் யுத்தப் பொறிக்குள் எம்மக்களை தள்ளிக் கொண்டிருப்பதால் எம்மக்கள் படும் சொல்லொண்ணாத் துன்ப துயரங்கள் பற்றிய மனித நேயமும் வளரவில்லை. இத்தகைய தவறான அதிகார ஆலோசனைகளின் வழிநடத்தலாலேயே இன்று தமிழீழப் போராட்டம் முற்றாக நசுக்கப்படும் நிலையும் ஏற்பட்டது. தொடர்ச்சியாக வந்த சமாதானச் சந்தர்ப்பங்களை தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி புறந்தள்ளிக் கொண்டு யுத்த முனைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் எதிர்காலத்தில் எம்மினத்திற்கு ஏற்படக்கூடிய பின் விளைவுகள், வீழ்ச்சிகள் அரசியல் பின்னடைவுகள் பற்றிய அபாயத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவோ அல்லது அதை எடுத்துரைக்கவோ பிரபாகரனுடன் சார்ந்திருந்த அறிவாளிகள், புத்திஜீவிகள் அரசியல் தலைவர்களும் தெம்பில்லாதவர்களாகிப் போனது தமிழினத்தின் சாபக்கேடாகும். தவறைத் தவறென்று அன்று பிரபாகரனுக்கு எடுத்துக்கூற யாரும் முன்வரவில்லை. அதுவே இன்று எம்மினத்தின் தொடர் வீழ்ச்சிகளுக்கும், தோல்விகளுக்கும் மூலகாரணியாகும்.
தென்றல் இணையம்
1 விமர்சனங்கள்:
அருமையான கட்டுரை - எனது பதிவில் கருணா அம்மானால் மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு என்று 02.03.2004இல் எழுதப்பட்ட கட்டுரையை விரைவில் பதிவிட இருக்கிறேன்.
Post a Comment