புலி பயங்கரவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்க மாட்டோம்-பாலித கோஹன!
இலங்கையில் ஒழிக்கப்பட்ட புலிப்பயங்கரவாதத்தின் செயற்பாடுகள் சர்வதேசத்திலிருந்து தலைதூக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறான முயற்சிகளுக்கும் புலிப் பயங்கரவாதம் எங்கிருந்தும் மீண்டும் தலைதூக்குவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவித்தார்.
புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional transnational government of tamil Elam)ஒன்றை அமைப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகின் மிக பெரிய பயங்கரவாதமான புலி பயங்கரவாதிகளை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அழித்தது என்பதனை உலகறியும். அதன் பயனாகவே புலிகளுக்கு ஆயுத விநியோகத்தில் ஈடுபடுகின்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் என்பவரை கைது செய்வதற்கு அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளது.
சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ளும் அதேவேளை அவர் தொடர்பான முழு விபரங்களும் சர்வதேச நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பல பக்கங்களின் நெருக்குதலுக்கு மத்தியிலேயே கே.பி இவ்வாறான அறிவிப்பொன்றை விட்டிருக்கலாம்.
இந்த அறிவிப்பு தொடர்பில் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை ஆனாலும் அது தொடர்பில் உடன் கவனத்தை செலுத்தி சர்வதேச ரீதியில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பயங்கரவாதத்தை வெற்றி கொண்ட எமக்கு அப்பயங்கரவாதத்தை தலைத்தூக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருக்கின்ற சில சக்திகளின் நடவடிக்கைகளை நசுக்குவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறுவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் விடுத்துள்ள விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ற அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் செயற்திட்டம் சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது. தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு தமது விடுதலைப் இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.
இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம். நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும்இ புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டுஇ நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம். இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுவுக்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம். தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம்இ தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை. 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம்இ 1985ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.
இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை. இதேவேளையில்இ இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது. இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது. இந்நிலையில், பொது நோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக் குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும். அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளைப் பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும். இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.
இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும். தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத் திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும். இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment