விமான விபத்தில் தப்பிய பெண் கார் விபத்தில் பலி : ஆஸ்திரியாவில் சம்பவம்
அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏயார் பிரான்ஸ் விமானத்தை அதிஷ்டவசமாக தவற விட்ட இத்தாலியப் பெண், ஆஸ்திரியாவில் நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இத்தாலியைச் சேர்ந்தவர் ஜோஹன்னா கான்தாலர். இவரது கணவர் குர்த். இருவரும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தம்பதியினர்.
இருவரும் விடுமுறைக்காக பிரேசில் வந்திருந்தனர். பிரேசில் பயணத்தை முடித்து விட்டு ரியோ டிஜெனீரோ நகரிலிருந்து பாரீஸ் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்யவிருந்த விமானம்தான் சமீபத்தில் அட்லாண்டிக் கடலில் விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த 228 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அன்றைய தினம் அதிஷ்டவசமாக அந்த விமானத்தைத் தவற விட்டு விட்டது குர்த் ஜோடி.
இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்தத் தம்பதி, பயணத்தை முடித்துக் கொண்டு ஜெர்மனி சென்றது.
அங்கு ஒரு காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இருவரும் இத்தாலிக்குக் கிளம்பினர். ஆஸ்திரியாவைத் தாண்டித்தான் இத்தாலி செல்ல முடியும்.
ஆஸ்திரியாவின் குஃப்ஸ்டெய்ன் என்ற நகரில் அவர்கள் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி, குர்த் தம்பதி பயணம் செய்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஜோஹன்னா பரிதாபமாக உயிரிழந்தார். குர்த் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
பெரும் விமான விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய ஜோஹன்னா, கார் விபத்தி்ல் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரையும், இத்தாலியையும் சோகக் கடலில் மூழ்கடித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment