உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டே பிரபாகரன் கொலை செய்யப்பட்டார்- பல்கலைக்கழக மனித உரிமைகள் அமைப்பு!
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ராணுவத்தின் உயர்நிலை தகவல்களை மேற்கோள்காட்டி “மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ என்ற அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தயாரித்துள்ள 48 பக்க அறிக்கை “இந்திய -ஆசிய செய்தி சேவை’ நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
இலங்கையில் முல்லைத்தீவில் மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற கடைசிக் கட்ட சண்டையில் ராணுவத்தின் கொடூரமான தாக்குதலில் ஏராளமான அப்பாவி பொதுமக்களும் விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் அவரது முக்கிய சகாக்களும் கொல்லப்பட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. ஆனால் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன் இலங்கை ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார் என்று மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் பிடிபட்டபோது, இலங்கை ராணுவத்தினருடன் தமிழ் அரசாங்கத்தில் உள்ள முக்கிய அரசியல்வாதி ஒருவரும் (வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா) உடன் இருந்துள்ளார். அவரது முன்னிலையிலேயே பிரபாகரன் துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆனால் ராணுவத்தினருடன் நடந்த சண்டையில் பிரபாகரனும் அவரது மெய்க்காப்பாளர்கள் 18 பேரும் கொலை செய்யப்பட்டுவிட்டதாக “இந்திய -ஆசிய செய்தி சேவைக்கு’ அளித்த பேட்டியின்போது கருணா தெரிவித்துள்ளார். இதில் பிரபாகரன் சித்திரவதை செய்யப்பட்டதை கருணா மறைத்துள்ளார்.
பிரபாகரன் பிடிபட்டவுடன், இலங்கை ராணுவத்தின் 53வது பட்டாலியனின் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு வைத்து அவரை துன்புறுத்தியதாகவும் மனித உரிமை அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.
பிரபாகரன் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவருடைய 12 வயது இளைய மகன் பாலசந்திரனும் உயிருடன் பிடிபட்டுள்ளார். பிரபாகரனின் கண் எதிரே அவரது மகனையும் இலங்கை ராணுவத்தினர் துன்புறுத்தி சுட்டுக்கொன்றுள்ளனர்.
இலங்கை ராணுவ மூத்த அதிகாரிகளின் நேரடி பார்வையிலேயே இந்த சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவர்கள் அதை மறைத்துள்ளனர்.
மேலும் பிரபாகரன் பிடிபட்ட பிறகு, எஞ்சிய விடுதலைப் புலிகள் அனைவரையும் கைது செய்த ராணுவம், அவர்களை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்துள்ளது.
மேலும் பிரபாகரனின் மனைவி மதிவதனி, உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை இலங்கை அரசு மறைத்துவருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பிரபாகரன் பிடிபட்டாரா என்பதைதான் உலக மக்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். அவருடைய மனைவி கொல்லப்பட்டாரா, அவரது சடலம் கிடைத்ததா என்பது குறித்து எங்களுக்கு முக்கியமல்ல’ என்று பிரிகேடியர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பேபி சுப்பிரமணியம், கிழக்கு மாகாண முன்னாள் தலைவர் கரிகாலன், புலிகள் அமைப்பின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் யோகரத்தினம் என்கிற யோகி, புலிகள் அமைப்பின் சர்வதேச தலைமையகத்தின் முன்னாள் தலைவர் லாரன்ஸ் திலகர், அரசியல் ஆலோசகர் வி.பாலகுமார், யாழ்ப்பாணத் தலைவர் இளம்பரிதி மற்றும் திரிகோணமலைத் தலைவர் ஈழன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிறகு, தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
0 விமர்சனங்கள்:
Post a Comment