சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும். அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.
முற்குறிப்பு:
ஏராளமான கதைகள் உலவுகின்றன.
என்னைப் பற்றியும் ஒரு கதை உலாவியது: 'மெளனம் சம்மதம்' என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு தகவல்களையும் ஒரு வேண்டுகோளையும் விடுத்து விட்டு முடிக்கின்றேன்.
தகவல் ஒன்று: சிவபெருமானே இறங்கி வந்தாலும் அவருடன் கருத்து வேறுபடுவதற்கும், எனது கருத்தை வெளியில் சொல்வதற்கும் எனக்கிருக்கும் உரிமையை அவர் நிராகரிக்க மாட்டார்.
தகவல் இரண்டு: தமிழ்ச்செல்வன் அண்ணனே எழுந்து வந்தாலும் அவர் மீது எனக்கிருந்த மரியாதையையோ அல்லது எனது ஒழுக்கத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையையோ மறுக்க மாட்டார்; அதனை என்னையும் அவரையும் நன்கறிந்தவர்களும் மறுக்க மாட்டார்கள்.
வேண்டுகோள்: தமிழர்களாகிய நாம் உன்னதமான பண்பையும், மேன்மையான பண்பாட்டு விழுமியங்களையும் கொண்டு 2,500 ஆண்டு காலமாகக் கூர்ப்படைந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மக்கள் இனம். ஒரு மனிதனின் கருத்தோடு உடன்படவில்லை என்பதற்காக - அவனின் ஒழுக்கத்தைக் களங்கப்படுத்தி Character Assassination செய்யும் விதமாக - கடுகளவேனும் உண்மையற்ற விடயங்களைத் தயவு செய்து எழுதாதீர்கள், தயவுசெய்து மின்னஞ்சல் செய்யாதீர்கள், தயவு செய்து எங்கும் வெளியிடாதீர்கள்.
நன்றி.
* * * * *
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2
ஏராளமான கதைகள் இப்போது உலவுகின்றன.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்ப வேண்டிய துயரச் சூழலுக்குள் தமிழ்த் தேசிய இனம் சிக்குண்டுள்ளது.
தேசியத் தலைவர் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்ற உண்மையை வதந்தி எனவும், செல்வராஜா பத்மநாதன் அவர்கள் யாரிடமோ விலை போய் விட்டார் என்ற வதந்தியை உண்மை எனவும் நம்ப வேண்டிய சூழலுக்குள் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
உண்மை சொல்லும் நம்பக ஊடகங்களாக ஒரு காலத்தில் போற்றிய தளங்களையெல்லாம், வதந்தி பரப்பும் துரோகத் தளங்களாகப் பார்க்க வேண்டிய கதிக்குள் மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
முன்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் உண்மையானவர் என்றும் பின்பு அறிக்கை விட்டபோது அறிவழகன் பொய்யானவர் என்றும் நம்ப வேண்டிய நிலைக்கு மக்கள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பல கதைகளின் உண்மைத் தன்மையைத் தெளிவுபடுத்தும் பொறுப்பைக் காலத்தின் கைகளில் விட்டுவிடுகின்றேன்; நிகழ்காலத் தேவை கருதி - அதில் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற வகையில் - ஒரு கதைக்கு மட்டும் விளக்கம் சொல்லி விட்டு முடிக்கின்றேன்.
தலைவர் அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கின்றார் என்றும், "உரிய நேரத்தில் வந்து இறங்கிக் காப்பாற்றுவோம்" என்று சொல்லி "யாரோ" அவரை ஏமாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கதை உலாவுகின்றது.
வன்னிப் போரை நிறுத்தி, மக்களைக் காத்து, தலைவரையும் தலைமைப்பீடத்தையும் பாதுகாப்பான ஒர் இடத்திற்கு நகர்த்துவதற்காக -
கடந்த வருடம் (2008) செப்ரெம்பர் முதல் எடுக்கப்பட்டு வந்த கடுமையான - இடையறாத - முயற்சிகளிலும் -
விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமை, சில மேற்குலக நாடுகள், சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகியவற்றுக்கு இடையில் கடந்த 9 மாத காலமாக இது தொடர்பாக இடம்பெற்று வந்த தொடர்பாடல்களிலும் -
நடேசன் அண்ணனின் அங்கீகாரத்துடன் ஏதோ ஒரு வகையில் பங்கேற்றவன் என்ற முறையில் ஒரு விடயத்தைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்:
பரப்பப்படுகின்ற எந்தக் கதையிலும் எந்தவிதமான உண்மையும் இல்லை.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்
ஆயுதங்களை மெளனிக்கச் செய்துவிட்டு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் ஒத்துழைக்குமாறு கடந்த 9 மாத காலமாக - குறிப்பாக 2009 இன் தொடக்கம் முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை வேண்டப்பட்டது.
நோர்வே அரசு, குறிப்பாக திரு. எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் தனிப்பட்ட அக்கறையுடன் இதில் நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்தார். அவரும் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தனர்.
ஆனால், விடுதலைப் புலிகளின் தலைமைக்கு யாருடைய உதவியும் தேவைப்பட்டிருக்கவில்லை.
எவரையும் நம்பியோ, அல்லது "கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவோம்" என்ற எவருடைய வாக்குறுதியையும் நம்பியோ தலைவர் அவர்கள் அங்கிருந்து போராடவில்லை.
2009, மே 14, வியாழக்கிழமை வரை - தொடர்ந்து போராடுவதில் தமக்கு இருந்த உறுதிப்பாட்டையே விடுதலைப் புலிகளின் தலைமை வெளிப்படுத்தியபடி இருந்தது.
ஏதோ ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது; ஆனால், அது வெளியிலிருந்து யாராலும் கொடுக்கப்பட்டதல்ல.
மே 14, வியாழன் அன்று, தம்மால் இன்னும் தொடர்ந்து சில காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்று புலித்தேவன் என்னிடம் தொலைபேசியில் சொன்னார்; அதே விடயத்தை, அதே நாள், அவர் பத்மநாதன் அண்ணனுக்கும் சொல்லியுள்ளார்.
போரை இடைநிறுத்தி, அயுதங்களை "மெளனிக்கச் செய்வதற்கு" மே 15, வெள்ளிக்கிழமை, இலங்கை நேரம் பிற்பகல் அளவிலேயே விடுதலைப் புலிகளின் தலைமை முன்வந்தது.
அப்போது என்னைத் தொலைபேசியில் அழைத்த நடேசன் அண்ணை - ஆயுதங்களைக் கைவிடத் தாம் தயாராக இருப்பதாகவும், சம்மந்தப்பட்டவர்களை வந்து இறங்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சொல்லும்படியும், தலைவர் அவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் என்னிடம் சொன்னார்; எனது பங்கு நடவடிக்கைகளை நான் எடுத்தேன்.
இதே தகவல் - பத்மநாதன் அண்ணனுக்கு சூசை அண்ணனால் சொல்லப்பட, அவரும் உருத்திரா அண்ணனும் தமது பங்கு நடவடிக்கைகளை எடுத்தனர்.
வேறும் சில நண்பர்கள் வேறு சில முனைகளால் தமது முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால் - விடுதலைப் புலிகளின் தலைமை அவ்வாறு முன்வந்த போது, எல்லாம் காலம் கடந்தவையாக ஆகிவிட்டிருந்தன.
இவை தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக நடந்த தொடர்பாடல்கள், உரையாடல்கள், பரிமாற்றங்கள், ஆதாரங்கள் என்பனவற்றை - தேவையேற்படும் போது - வரலாற்றைச் சீர்படுத்துவதற்காக - சம்மந்தப்பட்டவர்கள் வெளியிடுவார்கள் என்று நம்புகின்றேன்.
கே.பி.-யருக்குத் துதிபாடுவது எனது நோக்கமல்ல: அவரை நான் பார்த்ததும் கிடையாது; அவருடன் தொடர்பு கொள்ளும் படி நடேசன் அண்ணை சொல்லும் வரை அவருடன் நான் பேசியதும் கிடையாது.
கே.பி. அண்ணரைப் பற்றி பல கதைகள் உலாவவிடப்பட்டுள்ளன. "துரோகி", "விலை போனவர்", "ஏமாற்றியவர்" என்று ஒரு மாத காலத்திற்குள் அவருக்குச் சூட்டப்பட்டுவிட்ட பட்டங்கள் பல.
கடந்த 30 வருடங்களாக அவர் என்ன செய்தார் என்பது - அவருக்கும், தலைவருக்கும், இடையிலிருந்த தொலைத் தொடர்பு கருவிக்கும், அதனை இயக்கிய போராளிகளுக்கும் மட்டுமே தெரிந்த விடயங்கள். மற்றவர்களாகிய நாங்கள் கற்பனைகளை வளர்க்காமல் சும்மா இருப்பதே நல்லது.
அவருடைய பாதுகாப்பும் அந்தப் பணிகளின் பாதுகாப்பும் கருதி - ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதிக் கையாளுகை விடயங்களிலிருந்து கடந்த நான்கு வருடங்களாக ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த கே.பி. அண்ணர் அவர்கள் - அவர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக - பாலா அண்ணை விட்டுச் சென்ற இடத்தை ஓரளவுக்காவது நிரப்புவதற்காக தலைவர் அவர்களால் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.
இத்தகைய சூழலில் - என்னைப் பொறுத்தவரையில் - கே.பி. அண்ணர் அவர்களை நம்புவதற்கும், அவரை நம்பும்படி சக தமிழர்களுக்குச் சொல்வதற்கும், தன் கீழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடையாக அவரை ஏற்றுக்கொள்ளுவதற்கும் நான்கு காரணிகள் அடிப்படையாக உள்ளன:
1. தனது தொடர்பு அறுந்து போனால் கே.பி. அண்ணருடன் தொடர்பு கொள்ளும்படி தான் நடேசன் அண்ணை என்னிடம் சொல்லியிருந்தார்.
2. வன்னியிலிருந்து வந்த ஆகக் கடைசி ஒலிப்பதிவில் - கே.பி. அண்ணர் ஊடாகவே எல்லாம் செய்யப்படுகின்றது என்பதை சூசை அண்ணன் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
3. கடந்த 30 வருடங்களாக - விட்டுப் பிரியாமல் தலைவரோடு இருந்து பேராட்டத்தை வளர்த்த - தற்போது மிஞ்சியிருக்கும் இருவரில் ஒருவர் அவர்; அடுத்தது, அடேல் அன்ரி.
4. வன்னியிலிருந்த எவராலும், வெளியிலிருக்கும் எவருக்கும் வழங்கப்பட்ட முதலும் கடைசியுமான அறிவுறுத்தலில் கே.பி. அண்ணரின் வழிநடத்தலில் இயங்குமாறே சொல்லப்பட்டிருக்கின்றது.
ஆக, இப்போதிருக்கும் சூழலில் அந்த மனிதர் மீது சேறு பூசுவதை நிறுத்திவிட்டு - கட்டுக்கோப்புடனும், ஒருங்கிணைவுடனும், கூட்டுச்சிந்தனையுடனும் உருப்படியாக ஏதாவது செய்ய முற்படுவதே தமிழர் எல்லோருக்கும் நல்லது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன்
* * * * *
தயை கூர்ந்து நான் சொல்கின்ற கருத்துக்களைத் திறந்த மனதோடு - ஒரு விஞ்ஞான சிந்தனையோடு கிரகியுங்கள்.
ஒரு கடமை உணர்வோடு உண்மையைச் சொல்ல முனையும் ஒருவனோடு கோவிக்காதீர்கள்; அவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதாதீர்கள்; விலகி இருப்போரைச் சேர்த்துச் செல்ல வேண்டிய காலத்தில் இருக்கும் போது, சேர்ந்து இருப்போரை விலக்கி விடாதீர்கள்.
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போர் இப்போது ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது.
ஒர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய அகச் சூழல் தாயகத்தில் இப்போது இல்லை.
அம்பாறைக் காட்டில் ராம் அண்ணை அடுக்கெடுக்கிறார் என்பதெல்லாம் வெறும் கதை; வன்னிக் காட்டில் ஆயிரக்கணக்கில் புலிகள் பதுங்கியிருக்கின்றார்கள் என்று சொல்லப்படுவது சுத்த வதந்தி; நாளை அவர்கள் வெளியில் வந்து, கெரில்லாப் போர் நடாத்தி, சாதனைகள் புரிவார்கள் என்று காத்திருப்பது வெறும் கற்பனை.
தயவு செய்து கெரில்லாப் போர் முறையை (Guerrilla Warfare) விளங்கிக்கொள்ளுங்கள்:
பொதுமக்கள் வாழாத இடத்தில் - அது காட்டுப் புறமோ அல்லது நாட்டுப் புறமோ - ஒரு கெரில்லாப் போராளி வாழ்வதென்பது சாத்தியமே இல்லாத விடயம்.
கெரில்லாப் போர் முறைக்கு அடிப்படையானது மக்கள்:
மக்கள் தமது ஊர்களில் வசிக்க வேண்டும்; வசித்தாலும், போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; தயாராக இருந்தாலும், ஒரு கெரில்லாப் போராளிக்கு உதவ அவர்கள் முன்வர வேண்டும்.
தமிழீழத்தின் தற்போதைய களப் புறநிலையில் இவை எதுவுமே இல்லை:
ஒரு கெரில்லாப் போராட்டத்தை நடத்தும் ஏது நிலையோ அல்லது அதன் விளைவுகளைத் தாங்கும் சக்தியோ மக்களுக்கு இப்போது இல்லவே இல்லை.
அதே நேரம் - ஒர் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு பெறக்கூடிய புறச்சூழல் இந்தப் பூலோகத்திலும் இப்போது இல்லை.
ஆயுதப் போராட்டத்தைப் பின்புலமாக வைத்து அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் காலம் - உண்மையில் செப்ரெம்பர் 11, 2001 அன்றுடன் இந்த உலகத்தை விட்டும், கடந்த மே 18, 2009 அன்றுடன் தமிழர்களை விட்டும் போய்விட்டது.
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பதென்பது வரலாற்றுப் புதைகுழியை அகழ்வாராய்ந்து உக்கிப் போன எலும்புகளை எடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல; பழைய பட்டறிவின் பாடங்களிலிருந்து எதிர்கால வாழ்வை ஒழுங்கமைப்பதற்கே.
வடிவத்தை மாற்றாது ஆயுதப் போராட்டத்தையே நாம் நடாத்திக்கொண்டிருந்த கடந்த 25 வருட காலத்தில் - இந்தப் பூலோகம் நான்கு உலக ஒழுங்குகள் ஊடாக மாறி, மாறி வந்துவிட்டது:
சில ஒழுங்குகள் எமக்குச் சாதகமானவையாக அமைந்தன; சில ஒழுங்குகள் எமக்குப் பாதகத்தையே செய்தன.
1. பனிப் போர் காலம் (..... - 1990): உலகம் இரண்டாகி அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலைமையில் பிரிந்து நின்றது: ஏதோ ஒரு பக்கத்தோடு சார்ந்திருந்து - அரசியல் விடுதலைக்கான ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடிய ஏது நிலைகள் அப்போது இருந்தன; இது எமக்குச் சாதகமாய் அமைந்தது. தென்னாசியாவின் புவிசார் அரசியல் (Geo-Politics) காரணிகளால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமும் முனைப்புப் பெற்றது.
2. பனிப் போருக்குப் பின்னான காலம் (1990 - 2001): கொம்யூனிசம் கரைந்து போக, ஒற்றை வல்லரசாகிய அமெரிக்காவின் கீழ் உலகம் திரண்டது: மேற்கின் நலன்சார்ந்த ஆயுதப் போராட்டங்கள் வெல்ல வைக்கப்பட்டன. தென்னாசியப் பிராந்தியம் முக்கியமற்றதாக இருந்ததாலும், ராஜீவ் காந்தியின் இறப்போடு விலகி நிற்கும் கொள்கையை இந்தியா கடைப்பிடித்ததாலும் - இந்தக் காலமும் எமக்குச் சாதகமாய் அமைந்தது; தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இன்னும் சற்று வளர்ச்சி கண்டது.
3. செப்ரெம்பர் 11-க்குப் பின்னான காலம் (2001 - ....): பனிப்போர் காலத்தைப் போலவே இந்தத் தடவையும் உலகம் இரண்டாகி நின்றது: ஆனால், இந்தத் தடவை அரசுகள் (States) எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டு அரசு-அல்லாத-ஆயுத-இயக்கங்களை (Non-State-Armed-Actors) அடுத்த பக்கத்தில் வைத்தன; "பயங்கரவாதிகள்" என்று அவர்களுக்குப் பெயர் சூட்டின. நியாயபூர்வமான வேட்கைகளுக்காகக் கூட (Legitimate Aspirations) ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் உலக அரங்கிலிருந்து முற்றாக அகற்றப்பட்டது.
4. புதிய பனிப் போர் காலம் ( 2005 - ....): பூகோள வல்லரசாக எழுச்சி கொள்ளும் சீனாவுக்கு இந்து சமுத்திரம் தேவைப்பட்டது; அது சிறிலங்காவுக்கு உதவியது. புலிகளை அழிக்க விரும்பிய இந்தியாவுக்கு ஒரு போர் தேவைப்பட்டது; அதுவும் சிறிலங்காவிற்கு உதவியது.
பொருளாதார ரீதியில் சீனாவோடு சார்ந்திருந்ததால் இந்து சமுத்திரத்தில் அதன் ஆதிக்கத்தை நேரடியாக எதிர்கொள்ள வழியற்றிருந்த அமெரிக்காவுக்கு அதைச் செய்வதற்கு இந்தியா தேவைப்பட்டது; முடிவாக, இந்தியாவை மீறி தென்னாசியாவில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட அசைக்க விரும்பாத சூழல் பிறந்தது.
அவரவர் புவிசார் நலன்களுக்காக (Geo-Political Interests) ஒவ்வொரு நாடும் ஒவ்வொன்றைச் செய்ய, மே 21, 1991-க்குப் பழி தீர்க்க இந்தியா தன் பங்கைச் செய்ய - மே 18, 2009 அன்று தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நிரந்தரமான முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது நாம் - உலகச் சூழலுக்கு ஏற்ற வேறு வழிகளைப் பார்க்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதுபெரும் தளபதிகளான பிரிகேடியர் சூசை, பிரிகேடியர் பானு ஆகியோர் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன்
* * * *
கடந்த 60 ஆண்டு காலத்தில் முதற் தடவையாக - தமிழ்த் தேசிய இனம் இப்போது தான் என்றுமில்லாத அளவுக்குப் பலவீனமாகி நிற்கின்றது.
தமிழ்த் தேசிய இனம் என நான் இங்கு குறிப்பிடுவது தமிழைத் தாய் மொழியாகப் பேசும் எல்லோரையும் சேர்த்த ஒரே மக்கள் இனம்.
எமது இனம் இப்போது எல்லா வழிகளிலும் பூதாகரமான பேராபத்தை எதிர்கொண்டு நிற்கின்றது.
எம்மைக் கொன்றொழித்துவிட்டு, எஞ்சியோரைத் துரத்தியடித்துவிட்டு, மிஞ்சியோரைத் தடுப்பு முகாம்களுக்குள் போட்டு அடைத்துவிட்டு பெளத்த சிங்களப் பேரினவாதப் பூதம் இப்போது திமிரோடு நிற்கின்றது.
எமது சமூகக் கட்டமைப்பினதும் பொருளாதார வாழ்வினதும் ஆதாரமான எம் நிலங்களை விழுங்கிவிட்டு அந்தப் பேரினவாதப் பூதம் இப்போது ஏப்பம் விட்டு நிற்கின்றது.
தமிழரது தாயகக் கோட்பாடும், தேசியத் தன்மையும், இனத் தனித்துவமும், அவற்றின் விளைவாகத் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமைகளும் அந்தப் பேரினவாதப் பூதத்தின் கைகளில் முழுமையாகச் சிக்கி அழிவை எதிர்கொண்டு நிற்கின்றன.
எமக்கு முன்னால் இப்போது மிகப் பெரிய ஒரு களம் விரிந்து கிடக்கின்றது.
இது புதிய களம்; புதிரான களம்; இரும்பினால் ஆன ஆயுதங்கள் கொண்டு வெல்ல முடியாத களம்; அறிவின் உச்சப் பயன்பாட்டுக்கான களம்.
அன்புடையோர்களே!
எம் மத்தியில் கருத்து வேற்றுமைகள் இருந்தன; இப்போதும் இருக்கின்றன. ஆனால், அது செல்ல வேண்டிய பாதை பற்றியதே அல்லாமல், செல்ல வேண்டிய இலக்கு பற்றியதல்ல.
எம் மத்தியில் குழப்ப நிலை இருந்தது; இப்போதும் இருக்கின்றது. ஆனால், அது தமிழீழத் தனியரசு சாத்தியமானதா இல்லையா என்பதே அல்லாமல், தமிழீழத் தனியரசு தேவையானதா இல்லையா என்பது பற்றியதல்ல.
சிங்களப் பேரினவாதம் தானாகவே முன்வந்து தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்ற தெளிவிலும், ஏதோ ஒரு வகையில் நாமாகவே போராடித்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவிலும் - எங்களுக்குள் கருத்து வேறுபாடுகளோ அல்லது குழப்ப நிலைகளோ இருந்ததில்லை; இப்போதும் இல்லை.
அந்த முடிவோடும் தெளிவோடும் தான் - நாம் வரித்துக்கொண்ட அதே இலட்சியத்தைத் தாங்களும் வரித்துக்கொண்டு தான் - எம் தேசத்தின் 30 ஆயிரம் புதல்வர்களும் எம் தேசியத் தலைவனும் தமிழீழத் தேசியக் கொடியின் கீழ் அணிவகுத்தார்கள்; தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் போராடினார்கள்; தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.
அண்ணனை நேசிப்போர் அவருக்காகவும், அவரை விமர்சிப்போர்கள் - அவருக்காக அல்லாவிட்டாலும், எமக்காகத் தமது உயிர்களை தந்த அந்த 30 ஆயிரம் போராளிகளின் உயிர்களுக்காகவேனும் அவர்கள் அணிவகுத்த அதே கொடியின் கீழே அணிவகுப்போம்.
பிரிந்து சிதறி நாங்கள் தூள்களாகப் போய்விடும் நாளுக்காகத் தமிழர்களின் எதிரிகள் காத்திருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் போர் வலுவை வீழ்த்திவிட்டபின், தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்து - எங்களின் அரசியல் திறனையும் நொருக்கி - எங்களை நிரந்தர அடிமைகளாக்கும் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதங்களாக, குழுக்களாக, கட்சிகளாக, பிரிவுகளாகத் திசைக்கு ஒன்றாய் சிதறாமல் - சகிப்புத் தன்மையுடன், உள்வாங்கும் மனதுடன், விட்டுக்கொடுப்புடன், தவறுகளை ஏற்கும் திறந்த இதயத்துடன் - நாம் எல்லோருமே 'தமிழர்கள்' என ஒன்றிணைய வேண்டும்.
அந்த ஒன்றிணைவு இல்லையென்றால் எம்மில் யாருக்குமே எதுவுமே இலங்கைத் தீவில் கிடைக்கப்போவதில்லை.
எமக்கிடையில் இறுகிய ஒற்றுமையும், மனம் திறந்த கூரிய சிந்தனையும், எதிர்காலம் பற்றிய தெளிந்த பார்வையுமே - எம் எல்லோருக்குமான எல்லாவற்றையும் வென்றெடுப்பதற்கு நாம் கையிலெடுக்க வேண்டிய ஆயுதங்கள்.
புதிய வடிவத்தில், புதிய பரிமாணத்தில், புதிய சூழலிற்குள் நுழைகின்ற தமிழீழப் போரில் இந்த ஆயுதங்கள் இருந்தால் எந்தப் பலத்தாலும் எங்களை வீழ்த்த முடியாது.
தமிழீழப் போர் - 1 மற்றும் தமிழீழப் போர் -2 ஆகியன கற்றுத் தந்திருக்கும் பாடங்களை அடிப்படையாக வைத்து தமிழீழப் போர் - 3 இனை நாம் வடிவமைக்க வேண்டும்.
அனைத்துலக உறவு விடயங்களில் Smart Power என்ற ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது.
Hard Power என்பது போர்-சார் பலத்தைக் குறிப்பதும், Soft Power என்பது போர்-சார்பற்ற ஏனைய பலங்களைக் குறிப்பதுமாகும்.
Smart Power என்பது - ஏனைய நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவு, உறவற்ற மற்றும் முரண்பட்ட நிலைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி - Hard Power மற்றும் Soft Power மூலம் சாதிக்க முடியாத விடயங்களைச் சாதிப்பதற்கு ஒரு நாடு அல்லது இனம் கொண்டிருக்கும் நுண்ணறிவுப் பலத்தைக் குறிப்பதாகும்.
இன்று பெரும் உலக வல்லரசுகளே ஒன்றை ஒன்று மேவி எழுவதற்காக இந்த நுண்ணறிவுப் பலத்தைத் தான் பயன்படுத்தகின்றன; சிறிலங்கா கூட இதே நுண்ணறிவுப் பலத்தைப் பயன்படுத்தித் தான் விடுதலைப் புலிகளின் இராணுவ இயந்திரத்தைத் தகர்த்தது.
போர்-சார் பலம் ஒத்துவராத ஒர் உலக ஒழுங்கு கால கட்டத்தில் நாம் எமது Hard Power மூலம் பேராட்டத்தை நகர்த்த முனைந்ததால் - இன்று அந்தப் பலம் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. Soft Power என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இப்போது எதுவுமே எம்மிடம் இல்லை.
இப்போது - எம்மிடம் உள்ளதும் நாம் பயன்படுத்தக்கூடியதும் எமது Smart Power-ஐத் தான்.
எந்த 'புவிசார் நலன் அரசியல்' எமது ஆயுதப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்ததோ, அதே 'புவிசார் நலன் அரசியல்' எமது போராட்டத்தை வெல்ல வைக்கும்.
அதற்கான ஏது நிலைகளை நாமும் சேர்ந்தே உருவாக்க வேண்டும்; உருவாகி வருகின்ற ஏது நிலைகளைச் செவ்வனே பயன்படுத்த வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன்
உணர்ச்சிவசப்படுவதால், அல்லது உணர்ச்சியை அடிப்படையாக வைத்து அரசியல் காய்களை நகர்த்த முனைவதால் எமக்கு ஆகப்போவது எதுவுமேயில்லை என்பதைத் தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்.
எமது பயணத்தின் இறுதி இலக்கு தமிழீழத் தனியரசை அமைப்பது தான். ஆனால், அந்தப் பயணம் மிக நீண்டது; மிக நெருக்கடியானது; நுட்பமான சவால்கள் பல நிறைந்தது.
இந்தப் பயணத்தில் - பழைய வண்டிகளைக் கைவிட்டுவிட்டு சில புதிய வண்டிகளை நாம் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்; இந்தப் பயணத்தின் பாதை சில இடங்களில் நெடுஞ்சாலைகளாகவும் சில இடங்களில் குறுந்தெருக்களாகவும் இருக்கும்; இந்தப் பயணத்தின் வழியே சில இடைநிறுத்தங்கள் வரும்; அவற்றில் நாம் சில காலம் தரித்துச் செல்ல வேண்டியிருக்கும். எமது எதிரிகளை முறியடிப்பதற்காக பழைய மற்றும் புதிய நண்பர்கள் சிலரை எம் கூடவே அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
புதிய வண்டிகளுக்கு மாறுவதோ, குறுந்தெருக்களால் மெல்ல வளைவதோ, இடைநிறுத்தங்களில் சில காலம் தரிப்பதோ, பழைய நண்பர்கள் சிலரை மீண்டும் அணைப்பதோ, புதிய நண்பர்கள் சிலரை எம்மோடு சேர்ப்பதோ - இலக்கை நாம் மாற்றிவிட்டதாகவோ, அல்லது கூடப் பயணிப்போர்களை ஏமாற்ற முனைவதாகவோ அர்த்தமாகாது; அவ்வாறாக தயவு செய்து அர்த்தப்படுத்தியும் விடாதீர்கள்.
எமக்கு அருகிலே கோலோச்சுகின்ற ஒரு பெரும் வல்லாதிக்கச் சக்தி இந்தியா; நவீன உலக வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத கேந்திர அதி முக்கியத்துவத்தை அது இப்போது பெற்றுவிட்டது; இந்தியாவை மீறி தென்னாசியக் கடலில் ஒரு அலை கூட அசையப் போவதில்லை என்பது நாமே பட்டறிந்துவிட்ட பாடம்; பழைய வீராப்புப் பேச்சுக்களோடு மல்லுக்கு நிற்பது வெறும் அட்டைக் கத்தி வீரம்; இந்தியாவோடு அனுசரித்து, அதனை அரவணைத்து, இரு தரப்பு நலன்களையும் அகத்திலெடுத்து, அதன் துணையோடு நமது போராட்டத் தேரை நாம் முன்நகர்த்த வேண்டும்.
உலகப் பெரும் சக்திகள் பலவும் தமிழர் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்துள்ளார்கள்; ஆனால், அவர்களின் நலன்களும் எமது போராட்ட வடிவமும் இதுவரை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு இருந்துவிட்டன. இனிமேல் - நமது புதிய போராட்ட வடிவத்தின் கீழ் - நாம் அவர்களது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் பெறவேண்டும்.
கர்வத்துடனும், கெளரவத்தடனும் வாழ்ந்த எமது மக்கள் கம்பி வேலிகளுக்குப் பின்னால் கண்ணீரோடு நிற்கின்றார்கள்; அவர்களைப் பக்குவமாக மீட்டெடுத்து அவர்களது பழைய கம்பீர வாழ்வை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.
இத்தனை ஆண்டு காலம் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய போராளிகள் பலர் சிங்களத்தின் சிறை முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்; அவர்களையும் மெதுவாக மீட்டெடுத்து அவர்களது சகவாழ்வுக்கு நாம் வழிசெய்ய வேண்டும்.
இலங்கைத் தீவின் பல பாகங்களிலும் பணிகள் நிமித்தம் அனுப்பப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருந்த எமது போராளிகள் பலர் உயிர் ஆபத்தான சூழல்களில் சிக்குண்டுள்ளார்கள்; அவர்களையும் நுட்பமாக மீட்டெடுத்து நாம் காக்க வேண்டும்.
உணர்ச்சிப் பெருக்கோடு நாம் வெளி உலகிலிருந்து செய்ய முனையும் எதுவும், சிங்களப் பேரினவாதத்தை உசுப்பேற்றி அங்கே ஆபத்தில் இருப்போரை இன்னும் பேராபத்திற்குள் தள்ளுவதாக அமைந்துவிடக் கூடாது.
தமிழர்களைப் பிரதிநிதித்தவப்படுத்துவதற்கு இலங்கைத் தீவில் மிஞ்சியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - சிறிலங்காவின் அரசியலமைப்பக்கு உட்பட்டுச் செயற்பட வேண்டியுள்ளது; வெளியிலிருந்து நாம் எடுக்கும் அரசியல் முயற்சிகள் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துவிடவும் கூடாது.
இவ்வாறாக - எமது நீண்ட சுதந்திரப் பயணத்தில் - எம் ஒவ்வொருவரது தோள்களிலும் வரலாறு சுமத்தியிருக்கும் இந்த உடனடிக் கடமைகளை நிறைவு செய்யும் அதே வேளையில் - எமது நிரந்தர அரசியல் உரிமைகளை வென்றெடுக்கும் பாதையில் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
இரண்டு பூர்வாங்க வேலைத் திட்டங்கள் இப்போது தொடக்க கட்டத்தில் உள்ளன:
1. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் [Transnational Government of Tamil Eelam]
2. பூகோளத் தமிழர் பேரவை [Global Tamil Forum]
முதலாவது - ஒர் அனைத்துலக அங்கீகாரத்துக்கானது [International Recognition]; அதிகாரபூர்வமானது: அடுத்தது - எமது இன ஒருங்கிணைவுக்கானது.
ஒன்று - அரசு; Government: அடுத்தது - மக்கள் சமூகம்; Civil Soceity
அரசு என்பது மக்கள் சமூகத்தை வழிநடாத்தும் ஒரு தலைமைச் சக்தியாகவும், மக்கள் சமூகம் அந்த அரசைத் தாங்கி நிங்கும் ஒரு தூணாகவும் - ஒன்றுக்கொன்று துணையாக, ஒன்றோடொன்று இணையாக - ஒரே நேரத்தில் ஒரே திசையில் பயணிக்க வேண்டியவை.
இந்த இரண்டு வேலைத் திட்டங்களிலும் முடிந்த முடிவென்று எதுவும் இல்லை; இரண்டு திட்டங்களுமே கருத்தாடலுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளவை.
சூட்டப்பட்டுள்ள பெயர்கள் முதல் கூட்டப்பட்டுள்ள குழுக்கள், தீட்டப்பட்டுள்ள செயற்திட்டங்கள் வரை எல்லாமே - பொருத்தமான இறுதி வடிவத்தைப் பெறும் வரை தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகுபவை.
சாத்தியம் மற்றும் சாத்தியமின்மையைக் கலந்தாலோசித்து, நல்ல மற்றும் தீய விளைவுகளைக் கண்டறிந்து, ஆதரவு மற்றும் ஆதரவற்ற நிலைகளில் கருத்தொருமித்து - விடுவதை விட்டு, எடுப்பதை எடுத்து - ஒரு தேர்ந்த செயலிணக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
பாலா அண்ணை ஒருமுறை சொன்னார் - "ஒரு தலைமைத்துவத்தின் அழகு என்பது, செல்ல வேண்டிய இலக்குப் பற்றிய தெளிவில் சலனமின்றி, காலச்சூழலுக்கு எற்ப அது மேற்கொள்ளும் அசைவுகளிலேயே தங்கியுள்ளது."
தமிழ்த் தேசிய இனத்திற்கு ஓர் அழகான தலைமைத்துவத்தை வழங்கவேண்டிய பொறுப்பு அனைத்தலக தமிழ் சமூகத்தின் கைகளிலேயே இப்போது உள்ளது.
தி.வழுதி
உங்கள் கருத்துக்களை அனுப்ப: t.r.vazhuthi@gmail.com
முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!
Puthinam
0 விமர்சனங்கள்:
Post a Comment