வலி சுமந்த தமிழ் இனத்துக்கு இந்தியா வழி அமைக்குமா?
புதிய பரிணாமத்துடன் பயணிக்கின்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்காளியாகி இருக்கின்ற ஒவ்வொரு தமிழனும் இன்று ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய கட்டாய பாடமாகவும் தேவையாகவும் ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமான உறவு என்ற கரு வியாபித்திருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆதார சக்தியாக தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களில் எத்தனையோ கசப்புமிக்க பாடங்களை இரு தரப்புக்களும் சந்தித்துள்ள இன்றைய நிலையில் -
பாரத மாதாவின் அரவணைப்பில் 'ஈழம்' மலர வேண்டும் என அன்று ஊற்றெடுத்த அதே நம்பிக்கையுடனும் - எதிர்பார்ப்புடனும் - ஈழத் தமிழ் இனம் இன்றும் இந்தியாவை நோக்கி கை நீட்டி நிற்கின்றது.
இந்தியாதான் ஈழத் தமிழிருக்கு எல்லாமே என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது. தமிழர்களின் போராட்டம் தொடங்கிய நாள் தொடக்கம் இன்றுவரை நடந்து முடிந்த சாதக, பாதக விவகாரங்கள் அனைத்துக்கும் இந்தியாதான் முழுமுதற் காரணியாக இருந்து வந்துள்ளது.
அடக்குமுறைக்கு எதிரான கடைசி காண்டீபமாக ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் முன்னோடிகளாக இருந்தவர்களான இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங்காக இருக்கட்டும் -
ஈழத்தில் பெண்களின் விடுதலைக்காக - அவர்களின் வீரத்தை வெளிக்கொணர்வதற்காக - விடுதலைப் புலிகளின் மகளிர் படையணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வித்திட்ட - சுபாஸ் சந்திரபோஸ் தொடக்கிய - ஜான்சி ராணி மகளிர் சுதந்திர படையணியாக இருக்கட்டும் -
ஈழத் தமிழ்மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழி ரீதியில் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி திலீபன், அன்னை பூபதி ஆகியோருக்கு முன்னோடியாக இருந்த இந்தியாவின் சுதந்திரத் தந்தை மகாத்மா காந்தியின் போராட்டமாக இருக்கட்டும் -
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் மற்றும் பயிற்சி என அனைத்து தேவைகளையும் வழங்கியதாக இருக்கட்டும் -
அனைத்துமே ஈழத் தமிழருக்கு இந்தியாவாகவே இருந்து வந்திருக்கின்றது.
இதேபோல பிந்திய சம்பவங்களை பார்க்கப்போனாலும் ராஜீவ் படுகொலைக்குப் பின்னர் ஈழத் தமிழ் இனத்துக்கு சகல வழிகளிலும் வலிகளைக்கொடுத்ததும் இந்தியாதான். இன்று ஈழத் தமிழ் இனம் இவ்வாறான ஒரு நிலைக்கு வந்திருக்கின்றது என்றால் அதற்கு காரணமும் இந்தியாதான்.
சுருக்கமாகச் சொன்னால் ஈழத் தமிழன் ஒவ்வொருவனினதும் பிறப்பிலும் இறப்பிலும் பாரதத்தின் பார்வை ஏதோ ஒருவிதத்தில் விழுந்திருக்கின்றது. அந்தப் பார்வைகள் சில தடவை தழுவல்களாக இருக்கின்றன. பல தடவை தழும்புகளாகி இருக்கின்றன.
இருப்பினும் - இவ்வளவு நடந்த பின்னரும்கூட - ஈழத் தமிழ் இனம் இந்தியாவையே தமது ஒரே நட்பு சக்தியாக - நேச சக்தியாக - ஆதார சக்தியாக - ஆதரவு தரும் சக்தியாக - கை நீட்டி நிற்கின்றது. இதுதான் காலத்தின் தேவை என்பதையும் தமிழ் இனம் உணர்ந்து நிற்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு எவ்வளவு பலம் வாய்ந்தது என்பது எழுத்தில் வடிக்க முடியாதது. "ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்திக்கொடுங்கள்" - என்று தமது அரசை கேட்டுக்கேட்டு, எந்தக் கோரிக்கைகளையும் செவிசாய்க்காத இந்தியாவின் மனசாட்சியை உலுப்புவதற்கு ஈற்றில் தமது உடலையே எரித்து உயிரை மாய்த்த தமிழகத்தின் உத்தமர்களது தியாகத்துக்கு மேலாக ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள பிணைப்பை விவரிக்க வேறு விளக்கம் தேவையில்லை.
இந்தப் பிணைப்பு - இந்த இறுக்கம் - இந்த உறவு ஆகியவற்றின் அடிப்படையில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இனிமேல் எவ்வாறு அமையப் போகின்றது?
அதற்கு ஏதுவான களம் எந்த அரசியல் வியூகத்தின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும்?
ஆகியவை காலத்தின் தேவையாக கருதப்படுகின்ற கட்டாய கேள்விகள்.
காலத்தின் கட்டாய தேவைகள்
இதனை இன்றைய புவிசார் ஒழுங்கு நிலைகளின் ஊடாகவும் அதன் வழி ஒத்துப்போகும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஊடாகவும் விளங்கிக்கொள்ளலாம்.
தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை அடியோடு அழிப்பதற்காக கங்கணம் கட்டி நின்ற காலப்பகுதியில் சிங்கள தேசம், மேற்குலகத்தை முற்று முழுதாகவே ஓரங்கட்டிவிட்டது. அந்த அடிப்படையில், மேற்குலகின் முகத்தில் ஓங்கி அறைந்தது போல பல்வேறு காரியங்களை சீனாவின் கைப்பொம்மையாக நின்று செய்து முடித்திருக்கின்றது. இன்றும் சிங்கள தேசம் அதே திமிருடனும் இறுமாப்புடனும்தான் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமக்கு இடையில் எவ்வளவோ முறுகல்கள் இருந்தாலும் சிங்கள தேசத்தின் சீன ஆதரவுப்போக்கை அறுத்துவிடவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட வல்லரசுகள் இரண்டு. அவற்றில் ஒன்று இந்தியா. மற்றையது அமெரிக்கா.
ஆகவே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தில் தாம் கோலோச்சுவதற்காக சிங்கள தேசத்தை சீனாவிடம் இருந்து பிரித்தெடுப்பதற்கு இந்தியாவுக்கு அமெரிக்காவும் அமெரிக்காவுக்கு இந்தியாவும் தேவைப்படுகின்றது.
இந்த இருதரப்பு தேவையை கடந்த கால அரசியல் நகர்வுகளில் நாம் தெளிவாக கண்டிருக்கின்றோம்.
2002 ஆம் ஆண்டில் சிறிலங்காவுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் விடுதலைப் புலிகள் மேற்குலகம் சார்ந்து போய்விட்டனர் என்று இடி விழுந்தாற்போல் இருந்த இந்தியா -
விடுதலைப் புலிகள் சகலதுக்கும் தம்மை நோக்கியே இருக்கவேண்டும் என்பதற்காக திடீரென எடுத்துக்கொண்ட அரசியல் நிலைப்பாடுதான் அமெரிக்க ஆதரவுப்போக்கு.
இந்தியா தனது ஏக சொத்தாக எண்ணிக்கொண்டிருந்த ஈழத் தமிழர் விவகாரத்தை மையமாக வைத்து, அமெரிக்கா தனது அக்குளுக்குள் புகுந்துவிட்டதை சற்றும் எதிர்பாராத இந்தியா, வேறு வழி இல்லாமல் மேற்கொண்ட திடீர் இராஜதந்திர நகர்வு இந்த அமெரிக்க ஆதரவு போக்கு என்று குறிப்பிடலாம்.
அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்த கைச்சாத்து உட்பட பல விடயங்களில் அமெரிக்காவுடன் நெகிழ்வுப் போக்கை காண்பித்த இந்தியா, "நாம் இருவரும் சேர்ந்து இந்து சமுத்திரத்தை ஆளலாம் வாருங்கள். ஆனால், சீனாவை இங்கு விட்டுவிடக்கூடாது" - என்ற கொள்கையை வகுத்து -
நேர இருந்த ஆபத்தை win - win சமரச கோட்பாட்டின் ஊடாக சாமர்த்தியமாக சமாளித்துக்கொண்டது.
இந்த விடயத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மிகச் சாதுரியமாக காய்களை நகர்த்தினார் என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
இந்து சமுத்திர ஆளுமை கனவு, அங்கு கடல் பாதைகளுக்கான தேவை மற்றும் இந்தியா எனப்படுகின்ற பல கோடி டொலர்கள் மதிப்புள்ள இராஜ சந்தை ஆகியவற்றுக்கு கணக்கு போட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவுக்கு வலிய வந்த இந்தியாவின் இந்த அரவணைப்பு சாதகமாகவே இருந்தது.
இரு வல்லரசுகளும் ஒருவித எச்சரிக்கையுடன் கூடிய தோழமை உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளன.
ஆனால், இந்தியா என்னதான் அமெரிக்காவுடன் தோளில் கை போட்டுக்கொண்டாலும் அமெரிக்காவின் பாகிஸ்தான் சார்பு நிலைப்பாடு உட்பட பல விடயங்கள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சந்தர்ப்பவாத உறவினையே பேணிவைத்திருப்பது ஏதோ உண்மைதான்.
இந்தியா - அமெரிக்கா - ஈழத் தமிழர்
தற்போது விரிந்துள்ள இந்தக் களத்தில், இந்தியா சரி- அமெரிக்கா சரி இரண்டுமே ஈழத் தமிழர்கள் விடயத்தில் என்ன விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றன என்பதை சற்று ஆழமாக நோக்கினால் -
அதுவே ஈழத் தமிழர்களின் எதிர்கால பயணத்துக்கான தெளிவான விடுதலைப் பாதையாக அமையும். அதனை ஆராய்ந்தறிவதே எமது நோக்கமும்கூட.
இந்த இரண்டு வல்லரசுகளும் ஈழத் தமிழரின் விடிவுக்கு அனுசரணை வழங்கிய அல்லது ஆசீர்வாதமளித்த அல்லது நேரடியாக சம்மந்தப்பட்ட சம்பவங்கள் யாவை?
1987 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக அன்று சிறிலங்காவுடன் இந்தியா செய்துகொண்டது இந்திய - சிறிலங்கா உடன்படிக்கை.
2002 ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் மேற்குலகத்தின் ஆசீர்வாதத்துடன் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அதனைத்தொடர்ந்து இணைத்தலைமை நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட தீர்வு வரைவுகள்.
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் முக்கிய சாராம்சம் எனப்படுவது 13 ஆவது அரசமைப்பு சட்ட சீர்திருத்தம். அதாவது தமிழர்களின் பூர்வீக நிலமாகிய வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான சபைகளுக்கு காணி, காவல்துறை உட்பட சகல அதிகாரங்களும் வழங்குவது.
2002 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை சட்ட ரீதியாக பார்த்தால் அது தமிழீழத்தை எழுதி அனைத்துலக சமூகத்தின் அனுசரணையுடன் தமிழர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்றே குறிப்பிடலாம்.
2002 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் போராளிகள், தமிழர் தாயத்தின் எந்தப்பகுதிக்கும் சென்று - அந்த நிலங்கள் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும்கூட - அரசியல் பணிகளில் ஈடுபடலாம் என்பதில் இருந்து -
தமிழீழத்தின் நிலம் வரையறுக்கப்பட்டு அங்கு தமிழர்களின் ஆளுமை அங்கீகரிக்கப்பட்டு, அது அனைத்துலகத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டாயிற்று.
ஒப்பந்தத்தின் உட்பொருளை பின்னர் நடைமுறையில் தெரிந்துகொண்ட சிங்கள தேசம், அதனை நடைமுறைப்படுத்த வெருண்டுகொண்ட காரணம் இதுதான். ஆனால், இணைத்தலைமை நாடுகள் ஒப்பந்தத்தை தெளிவாக தெரிந்து - அதன் தாற்பரியத்தை விளங்கியே - அதற்கு ஆதரவு வழங்கின.
இவை முன்னர் நடந்த சம்பவங்கள்.
இன்றைய நிலையில், இந்த இரண்டு வல்லரசுகளும் தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன என்பதை நோக்கினால் -
தமது அரசினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்று இந்தியா விடாப்பிடியாக நிற்கிறது.
தனது அனுசரணையுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் சீனச் சார்பு சிறிலங்கா அரசினால் தூக்கியெறிப்பட்டு தாமும் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மேற்குலகம் -
ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படவேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் இந்தியாவுடன் சாதுவான பேச்சுக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளது.
13 ஆவது அரசமைப்பு சட்ட தீர்திருத்தம்
இந்த 13 ஆவது அரசமைப்பு சீர்திருத்தம் அடங்கிய இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதும், அதனை அன்று சிங்கள தேசம் நடைமுறைப்படுத்தவில்லை. (அந்த காலப்பகுதியில் தமிழர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்குமாறு ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அண்ணா உண்ணாநிலை இருந்து, கடைசிவரை அவை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் அவர் உயிர் துறந்தார்.)
மாறாக, ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்புக்கு சென்றபோது, அவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்த சிங்களப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கிப் பிடியால் தலையில் அடித்து, அந்த ஒப்பந்தத்தின் மீது சிங்கள தேசம் கொண்டிருந்த கடும் சீற்றத்தையும் - தமிழர்களுக்கு ஒரு சொட்டு உரிமை கூட கொடுப்பதிலும் தமக்கு உடன்பாடில்லை என்ற நிலைப்பாட்டையும் - 'அடித்து' கூறினான்.
அவ்வாறு இந்தியப் பிரதமரை அடித்த கடற்படையைச் சேர்ந்தவர் பின்னர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுக்கும்போது -
ராஜீவ் காந்திக்கு மரியாதை வழங்கியது போல நாளை பிரபாகரனுக்கும் நான் அணிவகுப்பு மரியாதை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் வழிவகுத்துவிடும். அதனாலேயே அதில் கைச்சாத்திட்ட ராஜீவை அடித்தேன் என்று கூறினான்.
இதுதான் சிங்கள தேசத்தின் மனநிலை. அன்றல்ல. இன்றல்ல. என்றுமே இதுவாகத்தான் இருக்கப்போகிறது.
இந்த ஒரு நிலையில், தமிழர்களுக்கு வழங்கும்படி இந்தியா பணிக்கும் எந்த தீர்வுக்கும் சிறிலங்கா இணங்கப்போவதில்லை. 13 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தம் ஊடான மகாண சபை அல்ல; மாவட்ட சபை அதிகாரம் கூட தமிழர்களுக்கு வழங்க சிறிலங்கா முன்வரப்போவதில்லை.
அது இந்தியாவுக்கும் தெரியும். சிங்கள தேசத்தின் விருப்பம் இன்மையை - தமிழர் மீதான அந்த வெறுப்பை - வெளிப்படையாக தோலுரித்துக்காட்டுவதற்கு இந்தியாவின் இந்த அழுத்தம் ஏதோ ஒரு வகையில் உதவத்தான் போகிறது.
இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வைத்திருக்கும் அடுத்த அடுத்த அரசியல் காண்டீபங்கள்; சிறிலங்காவை சிக்கலுக்குள் மாட்டுபவையாக இருக்கப்போகின்றன என்பது அடுத்த விடயம்.
இந்தியா - ஈழத்தமிழர் - மேற்குலகம்
ஆகவே, தற்போதைய நிலையில், இந்தியா வழிமொழிவதை அனுசரித்து அதன்மூலம் இந்தியாவை அனுசரித்து அதன் வழியாக இந்தியாவை தமிழ்மக்களின் வசப்படுத்தும் ஒரு படிமுறைக்குள் ஈழத் தமிழ் இனம் சென்று கொண்டால் மாத்திரமே எதிர்கால நடவடிக்கைகளுக்கும் -
சிங்களம் என்றைக்குமே எதிரியாக பார்க்கும் இந்தியாவை தமிழ் இனத்தின் நிரந்தர நட்பு சக்தியாக இணைத்துக்கொள்ளவும் -
பெருந்துணையாக அமையும்.
இதேவேளையில் மறுமுனையில் உள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுடன் நாம் மேற்கொள்ளவேண்டிய இராஜதந்திர நகர்வுகள் தமிழ்மக்களுக்கு முன்னுள்ள இரண்டாவது அரசியல் பணி.
இந்தியாவின் இந்த முயற்சிகளுடன் மேற்குலகம் சேர்ந்து செயற்படுவதற்கான களத்தினை தமிழ்மக்கள் - முக்கியமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் - ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
சுருக்கமாக சொல்லப்போனால், மேற்குலகத்தையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமாக தமிழ்மக்கள் இருப்பார்களேயானால், அது தமிழீழ அங்கீகாரத்துக்கு உலகத் தமிழினம் செய்து முடித்துவிட்ட பெரும்பணியாக அமையும்.
ஆகவே, சிறிலங்காவில் இந்தியா மேற்கொள்ளும் தீர்வு முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதையும் மேற்குலகத்தை நோக்கிய இராஜதந்திர முயற்சிகளையும் சமாந்தரமாக மேற்கொள்ளவதில் தமிழினம் காண்பிக்கப்போகும் வேகமே, தமிழ் மக்களின் விடிவுக்கான தூரத்தை நிர்ணயிக்கப்போகின்றது.
இது சவாலான பணி. பல இடர்கள் நிறைந்தது. பல அனைத்துலக சதிகள் நிறைந்தது. ஆனால், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தி என்பதற்கு முன்னால் அது பெரிய விடயமே அல்ல.
இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சக்தியை தனிப்பெரும் சக்தியாக மேற்குலகம் அங்கீகரித்திருக்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் செவிசாய்க்கின்றது. அந்த மக்கள் சக்தியை மேற்குலகம் மதிக்கின்றது.
ஆகவே, தெளிவாக வரையறுக்கப்பட்ட இராஜதந்திர வேலைத்திட்டங்கள் மூலம் இந்த இலக்கினை அடைவது என்பது தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு புலம்பெயர்ந்த மக்கள் செய்யும் மிகப்பெரும் அரசியல் பணியாக அமையும்.
அடக்கப்பட்ட இனத்தின் கோரிக்கைகளை வீரத்தின் ஊடாக எடுத்துக்கூறினாலும் கூட மனிதாபிமான ரீதியான கோரிக்கைகள் மற்றும் இராஜதந்திர ரீதியிலான வழிமுறைகள் ஊடாக எடுத்துக்கூறினால் மாத்திரமே இன்றைய உலகம் செவிசாய்த்து செயலில் இறங்குகின்றது. அதற்கு போதிய வரலாற்று உதாரணங்கள் உள்ளன.
தமிழ் இனம் தனது தேசியத் தலைவனது தலைமையின் கீழ் தனது வீரத்தை பார் எங்கும் பறைசாற்றி விட்டது. 30 ஆயிரம் மாவீரர்களை இழந்து 30 வருடங்களுக்கு மேலாக தமிழர் சேனை மேற்கொண்ட போராட்டம் உலகுக்கே சிம்ம சொப்பனமாக அமைந்தது. பிரபாகரன் என்ற ஒரு தலைவனாலும் அந்த தலைமையின் கீழ் போராடிய மக்களாலும்தான் இன்று பார் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை என்பது ஒவ்வொரு தமிழனதும் வீரத்தின் குறியீடு.
ஆகவே, தற்போது உலகின் அனுதாபத்தையும் இந்தியாவின் இரக்கத்தையும் ஆழத்தொட்டுச் செல்லும் வகையில் தமிழர்களின் கோரிக்கைகள் நகர்த்தப்படும்போது, அவற்றின் தாற்பரியத்தை அனைத்துலக சமூகம் நிச்சயம் பதிந்துகொள்ளும்.
அந்தப் பாதையின் ஓரத்தில் தாயக உறவுகள் இன்று கண்ணீரும் கம்பலையுமாய் நின்று கொண்டிருக்கும் இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது பணிகளை சரியான நெறிப்படுத்தலுடன் - ஒருமைப்பாட்டுடன் - தெளிவான சிந்தனையுடன் - பரந்த மனதுடன் மேற்கொள்ளவேண்டும்.
இந்த கருத்துக்களம் 'புதினம்' இணையத்தளத்துக்காக எழுதப்பட்டதாகும். உங்கள் கருத்துக்களை அனுப்ப: theiveekan2009@gmail.com
புதினம்
0 விமர்சனங்கள்:
Post a Comment