3 TNA நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதாவர்
அவசரகாலச் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 பேரை ரகசிய காவற்துறையினர் கைதுசெய்வதற்கான முனைப்புகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதுடன் ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக சந்தர்ப்பம் கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மற்றும் அதனை அமைப்பின் ஏனைய தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருந்த தொடர்புகள், இலங்கையின் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆற்றிய உரைகள் அவசரகாலச் சட்டத்தை மீறியமைக்கான சிறந்த ஆதாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர், தற்போது வெளிநாட்டில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் செய்மதி தொலைபேசியில் உரையாடி உள்ளதகாவும் இது குறித்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைத்துள்ளதாகவும் இதனடிப்படையில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் இலங்கையின் சட்டத்திற்கு மறைவாக அவர்கள் நீண்டகாலத்திற்கு வெளிநாட்டில் இருக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தேவை ஏற்பட்டால், இவர்கள் தற்போது தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள நாடுகளுடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அரசாங்கத்தின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment