சின்ராசு மாமா என்கின்ற துரோகி - சயந்தன்
சின்ராசு மாமாவின் சேட்டுப் பொக்கற்றுக்குள் பீடி, சுருட்டு, சிகரெட், சிகரெட் பெட்டி என்பவற்றைப் பார்த்து அவருக்கு இப்ப தொழில் அந்த மாதிரியா, அல்லது நொந்தமாதிரியா என்று நான் சொல்வேன். “என்ன மாமா இண்டைக்கு உங்கடை கடலம்மா பாத்துப்பாராமல் தந்திருக்கிறா போலை” என்று நான் சொன்னால் அவர் சிகரெட்டை பெட்டியாகவே வைத்திருக்கிறார் என்றும் மணிக்கொரு தடவை ஊதித்தள்ளுகிறார் என்றும் அர்த்தம்.
அவரிடம் சிகரெட், பீடி, சுருட்டு என்பன போலவே கட்டுமரம், கரைவலை, மீன்பிடி வள்ளம், ரோலர் என்ற சாமான்களும் மாறி மாறி வந்து போயின. எப்பவாவது சமாதானம் வாறநேரம் அவர் அங்கையிங்கை கடன்பட்டு நல்ல மீன்பிடிப் படகாக வாங்குவார். பிறகு எல்லாம் முடிந்து வழமைபோல நேவி கடலுக்கை அடிக்கத்தொடங்க ஆழக்கடல் போகாட்டில் வள்ளமெதுக்கு என அதை வித்துப்போட்டு கடனை அடைப்பார். வட்டி கட்ட மனிசியின்ரை சங்கிலி காப்பையும் விற்பார். ஆனா சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல அவர் வலைகளோடை காத்திருந்தார். “பொறு பொறு பிரேமதாசா எல்லாம் சரிப்பண்ணுவான்” “என்ன இருந்தாலும் சந்திரிக்கா ஒரு பொம்பிளை. அவள் எங்கடை கஸ்ரங்களைத் தீர்ப்பாள்” “ரணில் செய்வான்போலதான் கிடக்கு” என அவர் காலாகாலத்துக்கும் காத்திருந்தார். ஒரு கட்டத்தில் “உவங்கள் பூழல்மக்கள் ஒன்றும் புடுங்கமாட்டாங்கள். எங்கடை சொந்தக் கடலம்மா என்ற காலம் வராட்டி நாங்கள் உப்பிடியே கரையில கிடக்கவேண்டியதுதான். அவனவன் வந்து அள்ளிக்கொண்டு போகட்டும்” என்றார். கடலுக்கை இயக்கம் நேவியை அடிக்கிற நேரமெல்லாம் அவர் பேப்பரை ரண்டுமூன்று தடவை படிப்பார். சிலநேரம் சத்தம் போட்டும் படிப்பார்.
சின்ராசு மாமா கடலை ஒருபோதும் கடல் என்றது கிடையாது. கடலம்மா அல்லது அம்மா அல்லது சீதேவி இப்படித்தான் சொல்லுவார். அவரது வீடு கடலோரத்தில் இருக்கவில்லை. ஆனா வீட்டுக்கை எப்பவும் ஒரு கடல் வாசம் வீசிக்கொண்டே இருக்கும். “உந்த வலையளை வேறை எங்கயாவது கொண்டுபோய் பொத்தலாம் தானே” என்றால் அவர் சிரிப்பார். “எடேய்.. இதென்ன வலையில இருந்து வாற வாசம் எண்டு நினைக்கிறியே ? இது இந்த வீட்டின்ரை ஒரிஜினல் வாசம். இது கடலம்மா தந்த வீடு. கடலம்மா தன்ர மடியைச் சுரந்து சுரந்து தந்த செல்வத்தில கட்டின வீடு எண்டபடியால இந்த வாசம் எப்பவும் இருக்கும். இதில்லாட்டி எனக்கு நித்திரை வராது”
என்னை முதலில் கடலுக்குள் கொண்டுபோனவர் சின்ராசு மாமா. ஆழமொண்டும் இல்லை. கரை தெரிகிற தூரம்தான். கட்டுமரத்தில் களங்கண்ணி வலிக்க அவர் கூட்டிக்கொண்டு போனார். அது உலாஞ்சி உலாஞ்சிக்கொண்டு போனது. கடலுக்குள் இரண்டு பேர் குதித்து ஒவ்வொன்றாக வலைத்தடியைப்பிடுங்கி தடிகள் வலைகள் என்றெல்லாத்தையும் சுத்தி மரத்தில் ஏற்றினார்கள். வெள்ளி நிறத்தில் மீன்கள் துடித்துக்கொண்டிருந்தன. மரத்தில என்னைவிட்டு அவர்கள் கடலுக்கை இறங்கின நேரம் நான் கத்தத்தொடங்கியிருந்தேன். “நான் போப்போறன்.. கூட்டிக்கொண்டே விடுங்கோ..”
சின்ராசு மாமா கெக்கட்டம் போட்டுச் சிரிச்சார். “உன்ரை வயசில உசரப்போய் ஐஞ்சு நாள் கிடந்திட்டுவந்தனாங்கள். தெரியுமே.. ” பிறகு டக்கெண்டு அமைதியானார். “இப்ப.. இந்தா கரையைத்தடவிக்கொண்டு இருக்கிறம். இருந்துபார் ஒரு காலம் வருமடா..”
எனக்குக் கடல் பயமாயிருந்தது. கடலுக்கை சுழியெல்லாம் இருக்காம். அதுக்கை அம்பிட்டால்.. ஆளைச்சுழற்றியடித்து உள்ளை அமத்திப்போடுமாம். ஒருதரம் இதைச்சொல்லி “கடல் சனியன்” என்றபோது சின்ராசு மாமா ஓங்கியொரு குட்டு விட்டார். கடல் பரவாயில்லையென்று நான் நினைச்சன். “கடலம்மா ஆரையும் விழுங்கமாட்டாள்” என்றார் அவர். நீண்ட நெடுங்காலத்துக்குப்பிறகு 97 இல் வலைப்பாடு கிராமத்தில் இந்தியாக்கு வெளிக்கிட்ட நூற்றுஐம்பது பேரை கடலம்மா விழுங்கித்தள்ளியபோது நான் கரையில் நின்றேன். “சின்ராசு மாமா ஏன் பொய் சொன்னார்” என யோசித்துக்கொண்டு.
அப்ப அவர் அனலை தீவில வாடிபோட்டுத்தொழில் செய்த நேரம். என்னையும் அனலைதீவுக்கு கூட்டிக்கொண்டு போகச்சொல்லி நான் கேட்டேன். சின்ராசுமாமா என்னை கல்லுண்டாய் வெளியால கூட்டிக்கொண்டுபோனார். பொம்மை வெளி நாவாந்துறை கடல்களோரம் வந்து ரவுணுக்குள் ஏறி சுற்றிக்காட்டினார். “எட அனலைதீவு நல்லாத்தான் டெவலப் ஆகியிருக்கு. பிறகென்ன.. ” என்று நான் நினைத்தேன். இருந்தாலும் அனலைதீவுக்கு றோட்டு இருக்கா என்றது ஒரு டவுட் ஆகத்தான் இருந்தது. “மடையா காரைதீவுக்கே றோட்டிருக்கேக்கை அனலைதீவுக்கு இருக்காதா என்றார் அவர். அவர் சொன்னாச்சரி.
பிறகு எல்லாம் மாறியது. நேவியின்ரை கப்பல் கடலின்ரை அடியில அவ்வப்போது தெரியத்தொடங்கியது. இரவுகளில் கடலுக்கை வெடிச்சத்தங்கள் கேட்டன. எல்லா மீன்பிடி வள்ளங்களும் கரையில கவிண்டு கிடந்தன. நேவியை உச்சிப்போட்டு சிலர் போயிட்டு வந்தார்கள். அப்பிடிப்போன பரன் அண்ணா ஒருநாள் வராமலேயே போனார். ரண்டு மூண்டு நாள் கரையில சோறு தண்ணி இல்லாமல் அவரின்ரை மனிசி காத்திருந்தா பிள்ளைத்தாச்சி வயிற்றோடு..
சின்ராசுமாமா தன்ரை மூன்று வள்ளங்களையும் கொண்டு கிளாலிக்கு வெளிக்கிட்டார். “இனித் தொழில் சரிவராது. கிளாலி ஓட்டம் செய்வமெண்டு போறன்” என்றார் அவர். ஆனையிறவிலும் பூநகரியிலும் ஆமி இருக்க யாழ் குடாநாட்டுச் சனங்கள் கிளாலிக் கடலால வன்னிக்கும் வவுனியாக்கும் கொழும்புக்கும் போய்க்கொண்டிருந்தினம். அதுக்கையும் நேவிக்காரன் வந்து இடையில சனத்தை மறிச்சு வெட்டியும் சுட்டும் தன்ரை விளையாட்டைக்காட்டிக் கொண்டுதான் இருந்தான். சின்ராசு மாமாவின் மூன்று வள்ளங்களும் கிளாலிக் கடலில் இரவுகளில் ஓடின. ஒரு வள்ளத்தோடு மிச்ச இரண்டு வள்ளத்தையும் கயிற்றால் இணைத்து அவரே ஓட்டியாவும் இருந்தார். அந்தநேரம் அவரின்ரை பொக்கற்றுக்கை சிகரெட்டுகள் எட்டிப்பார்த்தன.
திடீரென்று ஒருநாள் சின்ராசு மாமா ஓடிவந்தார். “அவன் அங்கை கிளாலியெல்லாம் வந்து பிடிச்சிட்டான். வள்ளங்கள் கரையில நிக்குது. ” என்று பதைபதைத்தார். மூன்றோ நாலு நாளில் ஒபரேசன் யாழ்தேவியை புலிகள் முறியடித்து இராணுவத்தினரை விரட்டியடித்தனர் என்ற செய்தி வந்தபோது “கிளாலியும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். வள்ளங்களை இங்காலை கொண்டுவரும்” எனப் போனார். போனவர் 3 வள்ளங்களினதும் எரிந்த எலும்புக்கூடுகளைத்தான் கண்டார்.
அன்றிலிருந்து சின்ராசுமாமா ஒடுங்கிப்போனார். கரைவலை களங்கண்ணியென்று போறதையும் நிப்பாட்டினார். வருத்தங்களும் வந்து ஆளும் நல்லா கொட்டுண்டு போனார். “என்ரை சாம்பலை இந்தக்கடலுக்கை கொட்டுங்கோடா” என்றெல்லாம் புசத்தினார்.
பிறகு யாழ்ப்பாணத்தை ஆமி பிடிச்சு கடலுக்கை நேவிட்டை காட்ட ஸ்பெசல் ஐடென்ரி காட் எல்லாம் கொடுத்து இத்தனை மணிக்குப்போய் இத்தனை மணிக்கு வா என்று நேரத்தைக் கட்டுப்படுத்தி தீடீரென்று போகாதையென்று நிறுத்தி கடலில வந்து மீனைப்பறித்து என எல்லாவற்றையும் நடாத்திக்காட்டியது. பிள்ளைகளுக்காகவும் கடனுக்காகவும் இதெல்லாத்தையும் கடப்பதாய் அவர் சொன்னார்.
0 0 0
சின்ராசுமாமா கதைத்தார். “இப்ப நான் சிகரெட்டெல்லோ பிடிக்கிறன்” என்றார் அவர். இப்ப கொஞ்ச நாளைக்கு முதல்லை கடல் தடையெல்லாம் விலத்தி மீன்கள் கொழும்புக்கு போகுதாம் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவரும் அதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். அவரது கடலம்மா திரும்பவும் தன் மடியைச் சுரக்கத்தொடங்கியிருப்பாள்.
ஆனால்…
ஆனால்.. அதெப்படி ஆமிக்காரன் கொடுத்த அனுமதியில் அவர் மகிழ்வுறுகிறார்.. ? அது பச்சைத் துரோகமாயிற்றே.. சுதந்திரத்தை விட சோறு முக்கியமாகி விட்டதா அவருக்கு..?
சின்ராசு மாமா இந்தக் கேள்விகளை எல்லாப்பக்கமிருந்தும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்தேன். உப்புச்சப்பில்லாமல் “சந்தோசம் ” என்றேன்.
“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?
http://sajeek.com/archives/397
0 விமர்சனங்கள்:
Post a Comment