தமிழ் மக்களை வென்றெடுக்க வேண்டுமானால் ஜனாதிபதி ராஜபக்ஷ முதலில் செய்ய வேண்டிய பணி
ஆனந்தசங்கரி கடிதமூலம் விளக்கம்
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள காயமடைந்தோர், முதியோர், கர்ப்பிணித் தாய்மார், ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அத்துடன், பல்வேறு முகாம்களிலுள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்றுசேர வைத்து அவர்களை அவர்களின் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்கள், அவர்களை அங்கிருந்து விடுவிக்க வேண்டிய அவசியங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே ஆனந்தசங்கரி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இந்நாடு தனது கௌரவத்தையும் மதிப்பையும் பேணிக் காக்க வேண்டுமாயின் தங்களின் தலையீடு இக்கட்டத்தில் இன்றியமையாதது என்பதை தங்களை நம்பவைக்கவே இக் கடிதத்தை நம்பிக்கை இழந்த நிலையில் எழுதுகிறேன்.
இந்த நாட்டின் நாணயம் இடம்பெயர்ந்த மக்களில் சில வகையினரை உடனடியாக விடுவிக்க தாங்கள் மேற்கொள்ளும் முடிவிலும் ஏனையவர்களின் விடுதலை பற்றி மறுபரிசீலனை செய்வதிலுமே தங்கியுள்ளது. தாம் மிகவும் கட்டுப்பாடுடைய ஓர் திறந்தவெளி சிறைச்சாலையிலே அன்றி ஓர், நலன்புரி நிலையத்தில் அல்ல என்ற உணர்வுடனேயே நியாயமற்ற முறையில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இம் மக்கள் உணர்கிறார்கள்.
இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடைபெறும் சில விடயங்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்ற ஊகத்திலேயே நான் செயற்படுகின்றேன். நேரில் காண்பதே நம்பிக்கை தரும் என்பதால் "மெனிக்பார்ம்' இலுள்ள முகாம்களை தவிர்ந்த வேறு முகாம்களுக்கு நீங்கள் என்றோ விஜயம் மேற்கொண்டிருந்திருக்க வேண்டும். தாங்கள் தலைவராக இருக்கும் ஓர் நாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடக்கவும் கூடாது, நடக்க விடவும் கூடாது. தாம் செய்யாத குற்றத்திற்காக துன்புறும் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுடைய உயிருடன் விளையாட நினைப்பவர்களின் கண்களை தங்களுடைய தீர்வு திறக்க வைக்கும்.
புல்மோட்டையில் இடம்பெயர்ந்தோர் முகாமில் வாழும் ஒரு வயது குழந்தையையும் அவருடைய பேத்தியாரையும் விடுவிக்க மறுக்கப்பட்ட சம்பவமே இக் கடிதத்தை தங்களுக்கு எழுதுவதற்கு என்னைத் தூண்டியது. வலது கால் துண்டிக்கப்பட்டு ஓர் முகாமில் உள்ள இளைஞன் ஒருவனின் குழந்தை அவனுடைய தாயின் அரவணைப்பில் இருக்கிறது. வலது கால் துண்டிக்கப்பட்டு இடது கால் முறிந்து பிணைக்கப்பட்ட நிலையில் வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியுள்ளவரே இக் குழந்தையின் தாயாவார். இது போன்ற சம்பவங்கள் உலகின் எப்பகுதியிலும் நடந்ததில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் பல்வேறு முகாம்களில் வாழும் இந்த மூன்று இலட்சம் மக்கள் மத்தியில் நிறையவே நடக்கின்றன.
வன்னியில் அவர்களாக துணிந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழைவார்ளேயானால் அவர்களை நன்றாக உபசரித்து பாதுகாப்பு கொடுப்பதாக தாங்கள் உத்தரவாதமளித்துள்ளீர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நன்றாக கவனிக்கப்படவில்லை. அதற்கு முரணாக அவர்களின் உடலும் உள்ளமும் அங்கே நடக்கின்ற சம்பவங்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறான அவலங்கள் தம்மீது திணிக்கப்படும் என்று அவர்கள் நினைத்திருந்தால் இந்த அபாயகரமான நடவடிக்கையில் ஈடுபடாது இரு பகுதியினரிடையே நடந்த செல் தாக்குதலில் இறந்த தமது பல உற்றார், உறவினர்கள், அன்புக்குரியவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் மடிந்திருப்பர். ஒரு நாளைக்கு மட்டும் இம் முகாம்களின் கதவுகளை திறந்து வைப்பீர்களேயானால் முகாம்களில் ஒருவரேனும் மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்பதை தாங்கள் நேரில் காண்பீர்கள்.
என் நிலையில் நீங்கள் இருந்தால், என்னுடைய உணர்வுகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும். எனது தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து முகாம்களுக்கு வந்துள்ளனர். அவர்களுடன் பலகாலம் நான் வாழ்ந்தது பற்றியும் நீண்டகாலம் அவர்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தியதும் நீங்கள் அறிந்ததே. ஒருவர் தப்பாமல் ஒவ்வொருவரும் எனக்கு தெரிவிக்கின்ற கதைகள் மிக சோகமானவை. பலர் மனைவியை இழந்தும், வேறு சிலர் கணவன் பிள்ளைகளை இழந்தும் உள்ளனர். அநேகர் தமது பெற்றோரை இழந்துள்ளனர். அப் பெற்றோர் யுத்த முனையில் போராளிகளாக அல்லாமல் அப்பாவி மக்களாக துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளனர். அநேகர் பதுங்கு குழிகளுக்குள் உயிரோடு புதைக்கப்பட்டனர். அநேகர் பட்டினியாலும் குழந்தைகள் பல பாலின்றியும் மரணித்திருக்கிறார்கள். பலர் தமது உற்றார் உறவினர்களை இன்றும் தேடி அலைகின்றனர்.
முகாம்களில் உள்ளவர்கள் தமது காணாமல்போன உறவினர்களையும் வெளிநாடுகளிலும் வெளியிலும் உள்ளவர்கள் தமது உறவினர்கள் தமக்கு வேண்டியவர்கள் பற்றிய தகவல்களை பெறக்கூடியதாகவும் முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரத்தை வெளியிடும்படி ஆரம்பத்திலேயே கேட்டிருந்தேன். முல்லைத்தீவு சுகாதார இலாகாவை சேர்ந்த தர்மகுலசிங்கம் என்ற அதிகாரி இறந்தவர்கள், காயமுற்றவர்கள் பற்றிய விபரத்தை திரட்டிக்கொண்டிருந்த வேளை அவரே செல் தாக்குதலில் பலியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன், அப்பணியும் நின்றுவிட்டது. காணாமல் போன ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைக்கூட அறிய முடியாமல் உள்ளது.
இனங்காணாத பலரின் உடல்கள் பழுதடைந்த நிலையில் ஒரே குழியில் புதைக்கும் சம்பவம் அடிக்கடி நடப்பதுண்டு. நெருங்கிய உறவினர்கள் கூட அவர்களை அடக்கம் செய்யும் வேளையில் பிரசன்னமாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஓர் இறந்தவருக்கு கிரியைகளை செய்யவேண்டிய கடமைப்பாடு உண்டு. அவற்றில் சில முக்கியமானதும் கண்டிப்பானதுமாக இருப்பது ஓர் ஆத்மசாந்திக்கு ஏதுவானது என மக்கள் நம்புகிறார்கள். நான் கூறுவது முட்டாள்த்தனமாக இருக்கலாம். ஆனால், முறைப்படி சில கிரியைகள் செய்யாதமை ஆத்மாக்களை அந்தரிக்க வைக்கும் என்று உலகம் பூராகவும் உள்ள மக்கள் நம்புகிறார்கள். இது சாதாரண விடயம் என்று நாம் தட்டிக்கழித்துவிட முடியாது. குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மக்கள் இதை வெளியில் கூறாவிட்டாலும் அவர்கள் மௌனமாக மனதுக்குள்ளேயே அழுகின்றனர்.
நான் இதை முழுக்க முழுக்க நம்புகின்றேன். நல்லதொரு சிறந்த பௌத்தர் என்ற வகையில் நீங்களும் இதில் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்பதை அறிவேன். நிச்சயமாக எவருக்கும் ஓர் எதிரிக்கு கூட இவ்வாறு நடப்பதை நான் விரும்பமாட்டேன்.
நான் கேட்டவை, கேட்டுக் கொண்டு இருக்கின்ற பலவற்றில் சில கண்களை கலங்க வைக்கும் சம்பவங்களாகும். காயமுற்றோரும் கர்ப்பிணிகளுமே மிகக் கூடுதலாக துன்பத்தை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு வேண்டிய உடனடித் தேவையோ முறையான கவனிப்போ கிடைப்பதில்லை. முறையான வைத்தியம் இன்றி பலர் இறந்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கும் சரீர வேதனையிலும் பார்க்க உள்ளத்தால் படும் வேதனைகள் அவர்களை பெருமளவு பாதிக்கின்றன. பல ஆயிரக்கணக்கான சம்பவங்கள் இருப்பினும் ஓரிரு சம்பவங்களை மட்டும் தான் இங்கே குறிப்பிடுகின்றேன்.
முதலாவது சம்பவம் நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல புல்மோட்டையில் ஒரு காலை இழந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரை பற்றியதாகும். சம்பந்தப்பட்ட நால்வரின் எவரிடமிருந்தாவது இந்நாட்டுக்கு எத்தகைய அச்சுறுத்தல் இருக்க முடியும்? இவர்களை மாதக்கணக்கில் மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
இன்னொரு சம்பவத்தில் வன்னியில் ஓர் தலைமை ஆசிரியர் செல் தாக்குதலில் அதே இடத்தில் மரணமானதோடு மகள் படுகாயமுற்றார். யாழ்ப்பாணத்தில் அவர்களை பராமரிப்பதற்கோ, அல்லது அவர்களுக்காக அழுவதற்கோ நிறைய உறவினர் உள்ளனர். ஆனால், ஒரு உறவினரோ, நண்பரோ இல்லாத மன்னாரில் தாயார் பிள்ளையுடன் வைத்தியசாலையில் இருக்கின்றார். இக் குற்றத்திற்கு யார் பொறுப்பாளி? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருந்தால் அவர்களை கவனிப்பதற்கும் இறந்த கணவருக்குரிய கடமைகளை செய்வதற்கும் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள்.
ஏறக்குறைய கால் நூற்றாண்டுகளுக்கு மேல் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து நித்திய பயபீதியுடன் வாழ்ந்த மக்களுக்கு இத்தகைய தொந்தரவு கொடுப்பது ஏற்கக்கூடிய விடயமல்ல. தங்கள் உயிரை பணயம் வைத்து படுகாயமடைந்த நிலையில் இறந்துபோன உறவினர்கள் அத்தனை பேரையும் விட்டுவிட்டு ஜனாதிபதி என்ற முறையில் தங்களிடம் ஆறுதல் கோரி வந்த மக்கள் இதுவரை பட்ட வேதனை போதாதா? நான் ஒருபோதும் தங்களுக்கு தப்பான வழி காட்டியவனல்ல. நான் கூறும் ஆலோசனைகள் நல்லெண்ணத்தோடு ஒரு பௌத்த நாட்டின் நாணயத்தை காப்பாற்ற கொடுக்கப்படுகின்றவொன்றாகும். முன்பு ஒரு தடவை உலகம் எமது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருக்கிறது என்றும் நான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந்நாட்டிலும் வெளியிலும் யாரோ எவராலோ பதியப்பட்டுக் கொண்டிருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தேன். எதிர்காலத்தில் ஒருநாள் நானும் நீங்களும் இந்த உலகத்தில் இல்லாதவேளை அல்லது சிலசமயம், நீங்கள் இருக்கின்ற காலத்திலேயே எழுந்து பார்க்கின்றபோது பல உண்மைகள் தெரியவந்து முழு உலகும் இலங்கையை குற்றவாளியென தீர்மானிக்கும்.
நான் மிக வன்மையாக தங்களிடம் வேண்டுவது எதுவித தாமதமுமின்றி உடனடியாக இடம்பெயர்ந்தோர் முகாமில் காயமுற்றோர், முதியோர், நலிந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுடன் கூடிய தாய்மார்கள், நடமாட முடியாதவர்கள், புத்தி சுயாதீனமற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர், அநாதைகள், ஆதரவற்றோர் ஆகியோரை உடன் விடுவிக்கவும் அத்துடன், பல்வேறு முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்களை ஒன்றுசேர வைத்து மக்களை தத்தம் மாவட்டங்களுக்கு அனுப்பிவையுங்கள்.
தமிழ் மக்களை தாங்கள் வென்றெடுக்க வேண்டுமானால் இதனை முதலில் செய்து அதனைத் தொடர்ந்து மீள் குடியேற்றத்தை செய்ததன் பின்பே அபிவிருத்தியை பற்றி யோசியுங்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment