சுவிஸ் புலி தலைவர்களுக்கு எதிராக சுவிஸ் புலிகள் காவல்துறை ஊடாக நடவடிக்கை!
கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தினரும் இயக்கப் பிரதிநிதிகள் ஆதரவாளர்களும் நிதிவைப்புகள், ஆயுதக் கொள்வனவு மற்றும் வர்த்தகம் போன்ற பணம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரமாகவும் திட்டமிட்ட முறையிலும் செயற்பட்டு வந்த சுவிற்ஸர்லாந்தில் தற்போது புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகப் புலிகள் இயக்க ஆதரவாளர்களாக முன்னர் செயற்பட்ட பிரமுகர்களே பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூலமாக சுவிற்ஸர்லாந்தில் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்கள் பெருந்தொகையான பணத்தைக் காலத்துக் காலம் சேகரித்தும் வசூலித்தும் வந்துள்ளனர்.
இவ்வாறு முன்னர் சுவிற்ஸர்லாந்தில் புலிகள் இயக்கத்துக்குப் பல்வேறு வழிகளிலும் நிதியுதவி செய்து வந்த தமிழ்ப் பிரமுகர்கள் உட்பட புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் அடங்கிய குழுவொன்றினால் தற்போது புலிகள் இயக்கத்துக்கெதிராக முறைப்பாடுகள் சுவிஸ் பொலிஸ் அதிகாரிகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேற்படி குழுவினர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுவிற்ஸர்லாந்து வங்கிகள் மூலமாகவும் நேரடியாகவும் “குலம்’ எனப்படும் பிரபல புலிகள் இயக்கப் பிரதிநிதிக்கு இலட்சக்கணக்கான பிராங்க் பணம் வழங்கப்பட்டிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்ட சில சுவிஸ் வங்கிகளிலிருந்து மேற்படி குழுவினர் “குலம்’ எனப்படும் மேற்படி இயக்கப் பிரதிநிதிக்கு 30,000 பிராங்க் வரை கடன்களைப் பெற்றுக்கொடுத்திருந்தனர். தற்போது புலிகள் இயக்கம் ஸ்ரீலங்காவில் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி “குலம்’ எனப்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதி தலை மறைவாகிவிட்டார்.
சுவிஸ் வங்கிகளில் மேற்படி புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மூலமாகப் பெற்ற பணத்தை மீளப் பெறுவதற்காக பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தலைமறைவாகிவிட்டார்.
குறித்த குலம் மேற்படி சுவிஸ் தமிழர்கள் அடங்கிய குழுவினரிடம் முன்னர் தெரிவித்த தகவல்களில் யுத்தத்தில் அரச படையினரை புலிகள் இயக்கத்தினர் தோற்கடித்து தமிழ் ஈழம் அரசை அமைக்கப் போகிறார்கள் எனவும் ஆதரவாளர்கள் மூலமாக சுவிஸ் வங்கிகளிலிருந்து பெற்ற அனைத்துக் கடன்களையும் தமிழ் ஈழம் அரசு நிறுவப்பட்ட பின்னர் திருப்பித் தருவதாகவும் தெரிவித்திருந்தார். குறித்த தமிழர்களின் பேரில் கடன்கள் வழங்கிய சுவிற்ஸர்லாந்து வங்கிகள் தற்போது அவற்றை உடனே மீளச் செலுத்தும்படி அறிவித்துள்ளன.
இதனால், பெரும் குழப்பத்துக்குள்ளாகியிருக்கும் மேற்படி புலிகள் இயக்க ஆதரவாளர்களாகிய தமிழர்கள் அனைவரும் தற்போது குலத்துக்கு எதிராக முறைப்பாடுகளை சுவிஸ் பொலிஸ் அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளனர். சுவிஸ் புலனாய்வு பொலிஸ் பிரிவினர் “குலம்’ எனப்படும் மேற்படி பிரபல புலிகள் இயக்க பிரதிநிதிகளைத் தேடிப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு குறிப்பிட்ட சில சுவிஸ் வங்கிகளிலிருந்து மட்டுமன்றி ஏனைய பல வங்கிகளிலிருந்தும் குறித்த புலிகள் இயக்க ஆதரவுப் பிரமுகர்கள் மூலமாக “குலம்’ இலட்சக்கணக்கான பிராங்க் பணத்தைக் கடன் தொகையாகப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பெற்றுள்ளார். தற்போது புலிகள் இயக்கத்துக்கு எதிராகப் பொலிஸ் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மேற்படி முன்னாள் புலிகள் இயக்க ஆதரவாளர்களே மேற்படி அனைத்துத் தகவல்களையும் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ஸ்ரீலங்காவில் பயங்கரவாத புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் அதை ஆதரித்துச் செயற்பட்ட தமிழர்கள் இனிமேல் அந்த நாடுகளில் செயற்படும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் நிலை உருவாகி வருவதையே மேற்படி சுவிற்ஸர்லாந்து சம்பவங்களில் எடுத்துகாட்டுவதாக உள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment