ராஜபக்சேவின் குசும்புப் பேச்சு!
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அப்படியே அகதிகளாக ஏற்றுக் கொண்டால் மகிழச்சி அடைவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கனடாவும், ஐரோப்பிய நாடுகளும், இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தால் தாராளமாக நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
எத்தனை பேர் அகதிகளாக வந்தாலும் ஏற்கத் தயார் என கனடா கூறியுள்ளது. எனவே இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ளவர்களை அவர்கள் ஏற்பதாக இருந்தால் அதை நாங்கள் வரவேற்போம்.
இதற்காக இடம் பெயர்ந்தோர் முகாம்களில் சிறப்பு விசா கவுண்ட்டர்களைத் திறக்கவும் நாங்கள் தயார் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
அதாவது, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களை ஒட்டுமொத்தமாக பேக்கப் செய்து விட்டால் ஒட்டுமொத்த தமிழர் பகுதிகளையும் அப்படியே சிங்களமயமாக்கி விடலாம் என்ற திட்டம் இது.
கனடா நாட்டவர் சிறை பிடிப்பு:
கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரை வன்னிப் போரின் இறுதி நாட்களில் பிடித்துள்ளதாகவும், அவர் ஒரு போராளி எனவும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இந்தத் தகவலை கொழும்பு வந்த கனடா நாட்டு நாடாளுமன்ற வெளியுறவுப் பிரிவு செயலாளரும், எம்.பியுமான தீபக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட போராளிகள் வைக்கப்பட்டுள்ள முகாமில் அந்த கனடா நாட்டவர் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக ஓபராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை அரசின் கூற்றுப்படி அவர் ஒரு போராளி. கைது குறித்து எங்களுக்கு இலங்கை தெரிவித்துள்ளது. பிடிபட்டுள்ள நபர் யார் என்பது எங்களுக்குத் தெரியும். போராளிகளுக்கான முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் கடைசி நாட்களில் ஏராளமான போராளிகளை கொன்ற இலங்கை ராணுவம், பலரை உயிருடனும் பிடித்துள்ளது. பலர் சரணடைந்துள்ளனர். அனைவரும் தற்போது தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கனடா தமிழ் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாளப் பிள்ளை கூறுகையில், கனடா நாட்டைச் சேர்ந்த அந்த நபர் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் அபாயம் உள்ளது.
இலங்கை அரசு கூறும் எதையும் கவனத்துடன்தான் கொள்ள வேண்டும்.
கனடா நாட்டுக் குடிமகனை முகாமில் அடைத்து வைத்திருப்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறும் செயலாகும். அவரை விடுவிக்க எம்.பி. ஓபராய் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
முகாம்களில் கனடா நாட்டவர் தவிர 3 ஆஸ்திரேலியர்கள், இங்கிலாந்து, நார்வே, நெதர்லாந்தைச் சேர்ந்த தலா ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.
இதற்கிடையே, இலங்கை முகாம்களில் மொத்தம் நான்கு கனடியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக டோரன்டோவைச் சேர்ந்த வழக்கறிஞர் கேரி அனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர்களி்ல் ஒருவரின் குடும்பத்தினருக்கு தான் உதவி செய்து வருவதாகவும் கூறியுள்ள அவர் பிடிபட்ட நால்வருமே போராளிகளாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய அவர் நான்கு கனடியர்களுக்கும் தூதரக உதவிகள் கிடைக்க இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தீபக் ஓபராய் இதுகுறித்துக் கூறுகையில், எனக்குத் தெரிந்து இரண்டு கனடியர்கள் இருப்பதாக அறிகிறேன். அவர்களில் ஒருவரை, நான் முகாமுக்குச் சென்றபோது பார்க்க முடிந்தது. அவருடன் கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் தற்போது தொடர்பு கொண்டுள்ளனர். அவரை விரைவில் கனடாவுக்கு திரும்ப அழைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார்.
கொழும்பு வந்த ஓபராய், வன்னிப் பகுதியில் உள்ள 3 இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்றார்.
முகாம்களில் உள்ள நிலை குறித்து ஓபராய் கூறுகையில், பெரும் மனிதாபிமான நெருக்கடி இன்னும் நிலவுகிறது. முகாம்களில் மருத்துவ வசதி உள்ளிட்டவை இருக்கிறது. ஆனால் போதுமானதாக இல்லை.
இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு நிரந்தர தீர்வு, இங்குள்ள மக்களை விரைவில் அவர்களது பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது மட்டுமே. அது விரைவில் நடைபெறும் என இலங்கை கூறியுள்ளது. ஆனால் கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர்தான் அது சாத்தியம் என்கிறார்கள் இலங்கை அதிகாரிகள்.
எப்படியிருப்பினும் 180 நாட்ளில் 80 சதவீத அகதிகளை அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பி விடுவோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
கடந்த மாதம் கனடாவைச் சேர்ந்த எம்.பி. பாப் ரேவை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்காமல் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி அவமானப்படுத்தியது இலங்கை. அவர் லிபரல் கட்சியைச் சேர்ந்தவர். தற்போது வந்துள்ள தீபக் ஓபராய், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment