புல்மோட்டை முகாமிலுள்ள பெண்கள் மீது முறைகேடு இடம்பெறுவதாக தகவல்
புல்மோட்டை முகாம்களிலுள்ள பெண்களை சிலர் விசாரணைக்கென அழைத்துச் சென்று முறைகேடாகப் பயன்படுத்துவதாக தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இது தொடர்பில் அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களிலுள்ள மக்களை அரசு மீளக் குடியேற்ற வேண்டும். அதற்கு முன் அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள், கர்ப்பிணிப்பெண்களை வெளியே சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
புல்மோட்டையிலுள்ள முகாம்களிலுள்ள பெண்களை சிலர் விசாரணைக்கென அழைத்துச் சென்று முறைகேடாகப் பயன்படுத்துவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக கிராமசேவையாளர் ஒருவர் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இந்த விடயம் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இந்தியாவிலிருந்து கண்ணிவெடியகற்றும் குழுவினர் வரவுள்ளதாக அறிந்தோம். அவர்களை நாம் வரவேற்கிறோம். அவர்கள் விரைவாக கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றி எமது மக்கள் மீளக் குடியேற உதவி புரிய வேண்டும்.
யுத்தம் இடம்பெறாத முசலிப் பகுதியில் மக்களை மீள் குடியேற்றவே இரு வருடங்கள் சென்றன. அப்படியானால் யுத்தம் இடம்பெற்ற இப்பகுதிகளில் மக்களை குடியேற்ற 3 வருடங்களாவது எடுக்கும்.
வவுனியாவிலிருந்து கொழும்பு ரயிலில் வரும் பயணிகள் வவுனியா ரயில் நிலையத்தில் வைத்து கடுமையாக சோதனையிடப்பட்டு, நாய்களை விட்டு மோப்பம் பிடிக்க வைத்து அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டு, பொதிகள் துருவித் துருவி சோதனையிடப்பட்ட பின்பே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் இதேயளவு சோதனைகள் மதவாச்சியிலும் இடம்பெறுகின்றன.
இவ்வாறான சோதனைகளால் இரவு 8.30 மணிக்கு கொழும்பை சென்றடைய வேண்டிய மக்கள் இரவு 11 மணியளவிலேயே கொழும்பு போய்ச் சேருகின்றனர். வவுனியா பொலிஸில் உங்களுக்கு நம்பிக்கையில்லாது விட்டால் மதவாச்சி பொலிஸை வவுனியாவுக்குக் கொண்டுவந்து சோதனையிடுங்கள். பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள்.
யுத்தத்தை வென்ற உங்களினால் தமிழ் மக்களின் மனதை வெற்றிபெற முடியவில்லை. அவர்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையில் செயற்படுங்கள். யுத்தத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனாலும் எங்கள் ஜனநாயக வழிப் போராட்டங்கள், எமது உரிமைகள் கிடைக்கும் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
பசில் ராஜபக்ஷ தலைமையில் வடமாகாணத்திற்கென விசேட செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தமிழ் அமைச்சர் கூட இடம்பெறவில்லை. எமது ஆலோசனைகளைக் கூட அச்செயலணி பெறவில்லை.
சிறுபான்மைக் கட்சிகள், அமைச்சர்களை இந்த அரசு எப்படி பாகுபாடு காட்டி நடத்துகின்றதென்பதற்கு இது சிறந்த உதாரணம்.
கே.பாலசுப்பிரமணியம், டிட்டோகுகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment