அரசியல் தீர்வு பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடு
சென்னை "இந்து' வின் பிரதம ஆசிரியர் நரசிம்மன் ராம் கடந்த வாரம் கொழும்புக்கு வருகை தந்தபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு இரவு விருந்துபசாரம் சகிதம் அளித்த விரிவான பேட்டியொன்று இன்றுடன் சேர்த்து மூன்று நாட்களாக அந்தப் பத்திரிகையில் பிரசுரமாகியிருக்கிறது.
வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியிருக்கும் சுமார் 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றத்திற்கு இலங்கை அரசாங்கத்திடம் முறையான திட்டங்கள் இல்லை என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் செய்தியாளர்களிடம் தெரிவித்த சில தினங்களில் ராமின் இலங்கை விஜயம் இடம்பெற்றிருந்தது. சிதம்பரம் தெரிவித்த கருத்துகள் இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பான விவகாரங்களை இலங்கை அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடர்பில் இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவே பரவலாக நோக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஏற்பாட்டில் விசேட ஹெலிகொப்டரில் வவுனியாவுக்கு சென்ற ராம் அங்குள்ள முகாம்களில் மக்கள் முறையாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று வெகுவாகப்பாராட்டி தனது பத்திரிகையில் வர்ணனை செய்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இடம் பெயர்ந்த மக்களின் விவகாரங்கள் தொடர்பில் சிதம்பரத்தினால் வெளியிடப்பட்ட கருத்துகளுக்கான பிரதிபலிப்பை இந்து மூலமாக வெளிக்காட்டுவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ ராமைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.
ஜனாதிபதியின் பேட்டியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியான முதற்பகுதியில் இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் முக்கிய கவனத்தைப் பெற வேண்டியவையாக இருக்கின்றன. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான சூழ்நிலையில் தமிழ்மக்களுக்கு எத்தகைய அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதை துணிவாற்றலுடன் சொல்ல முடியாத ஒரு அரசியல் வெற்றிடத்தில் தமிழ்க் கட்சிகள் இருக்கின்ற நிலைமையில் தென்னிலங்கையில் அரசியல் தீர்வு குறித்து மிகவும் அமர்க்களமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசியல் தீர்வெதையுமே காண வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகின்ற குரல்களே தென்னிலங்கையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து தெளிவான அறிவிப்பு வெளியாக வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது இந்து பேட்டியின் ஊடாக தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகுதான் அரசியல் தீர்வு சமர்ப்பிக்கப்படும் என்றும் மக்களின் ஆணையைப் பெறுவதற்காக தீர்வு யோசனைகள் அந்தத் தேர்தலில் மக்கள் முன் வைக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு இடமேயில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் அவர் தேசிய மீள் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு இனங்கள் கலந்து வாழவேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஜனாதிபதி ராஜபக்ஷவின் முதலாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் இருவருடங்கள் இருக்கின்றன. இடைக்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதானால் அவரது முதல் பதவிக்காலத்தின் 4 ஆண்டுகள் பூர்த்தியானதன் பின்னர் அதாவது எதிர்வரும் நவம்பருக்குப் பின்னர் அதைச் செய்ய முடியும். இரு வருடங்கள் கழித்து 2011 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெறவிரும்புகிறாரா அல்லது இன்னும் 6 மாதங்களில் தேர்தலைச் சந்திக்க அவர் தயாராகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், அடுத்த வருட முற்பகுதியில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் திட்டம் ஜனாதிபதிக்கு இருப்பதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் அடிக்கடி பகிரங்கமாகக் கூறுகிறார்கள்.
ஒருவிடயம் மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது. அரசியல் தீர்வு என்ற விடயத்தில் ஜனாதிபதி அவசரப்படத் தயாராயில்லை. சில அமைச்சர்கள் கூறுவதைப் போன்று அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக இருந்தால் கூட அடுத்த ஏப்ரலுக்குப் பிறகு நிச்சயம் நடத்தப் படவேண்டியிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சிங்கள வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தைத் தோற்றுவிக்கக் கூடியதாக அரசியல் தீர்வு யோசனைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி முன்வருவாரா? ஜனாதிபதி ராஜபக்ஷ இன்று தென்னிலங்கை மக்கள் மத்தியில் மகத்தான செல்வாக்கு நிலையில் இருக்கிறார்.இதற்குப் பிரதான காரணம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரேயாகும். போரின் முடிவுக்குப் பிறகு வெற்றிக்களிப்பில் மிதக்கவிடப்பட்டிருக்கும் தென்னிலங்கையில் அரசியல் தீர்வுக்கான யோசனைகளை முன்வைத்து தனது செல்வாக்கை சீர்குலைப்பதற்கு ஜனாதிபதி ஒருபோதும் தயாராகமாட்டார் என்பது நிச்சயம். போரை வென்றதற்காக ஜனாதிபதியைப் புகழும் தென்னிலங்கை மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான யோசனைகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதும் சாத்தியமில்லை. அதேபோன்றே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அரசியல் தீர்வு யோசனைகள் மீதான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றக்கூடிய அளவுக்கு தென்னிலங்கை அரசியல் தலைமைத்துவத்தில் எந்தப்பிரிவினரிடமும் துணிவாற்றல் இல்லை என்பதே எமது அபிப்பிராயம்.
ஜனாதிபதி யின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அண்மைய எதிர்காலத்தில் அரசியல் தீர்வு தொடர்பில் முன்னேற்றம் எதையும் காண்பதற்கில்லை. அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பங்கேற்கவேண்டும் என்றும் அவர்கள் வராததாலேயே தாமதிக்க வேண்டியிருக்கிறது என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டிய போது இதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை. இப்போது அவர்களை அழைக்கின்ற சந்தர்ப்பத்தில் கூட "எதைக் கொடுக்கவேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் விரும்புகிற எல்லாவற்றையும் பெறமுடியாது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி கூறுகிறார். இதன் உண்மையான அர்த்தம் அரசியல் தீர்வு என்பது இனிமேல் அரசாங்கத்தின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?
0 விமர்சனங்கள்:
Post a Comment