கேட்பாரற்ற நிலையில் கொழும்புத் துறைமுகத்தில் `வணங்கா மண்` நிவாரணப் பொருட்கள்
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவென ஐரோப்பிய வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை, பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட தாமதத்தையடுத்து இந்தியாவின் கொலராடோ கப்பல் சுமந்து வந்தது.
தற்போது அப்பொருட்களை மீட்டு உரிய மக்களைச் சென்றடையச் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தையடுத்து அவை கொழும்பு துறைமுக விதிமுறைகளின்படி ஏலத்தில் விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய தமிழர்கள் இலங்கை மக்களுக்காக உணவு, உடை, மருந்து என 884 தொன் நிவாரணப் பொருட்களை `வணங்காமண்` கப்பலில் அனுப்பி வைத்தனர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் `வணங்கா மண்` கப்பல் தத்தளித்தது.
முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, அக்கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் 27 கொள்கலன்களுக்கு மாற்றப்பட்டு, சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். நிறுவனத்தின் மூலம் `கொலராடோ` என்ற சரக்கு கப்பலுக்கு மாற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தக் கப்பல் கடந்த 9ஆம் திகதி கொழும்பு துறைமுகம் வந்தடைந்த பின்னரும், நிவாரணப் பொருட்களை இதுவரை செஞ்சிலுவை சங்கத்தினர் பொறுப்பேற்கவில்லை. இதனால் இந்நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கடந்த 19 நாட்களாகக் கேட்பாரற்று கிடக்கின்றன.
இது குறித்து தமிழகத்தில் உள்ள மனித உரிமை அமைப்பின் செயல் இயக்குநர் மற்றும் லண்டன் `மெர்ஸி மிஷனி`ன் இந்திய தொடர்பு அலுவலர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,
"நிவாரணப் பொருட்களை எடுத்து விநியோகிக்க இலங்கைப் பணத்தில் ரூ.76 லட்சம் செலவாகும் என்று தமிழகத்தில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லண்டனில் உள்ள `மெர்ஸி மிஷன்` (கருணை தூதுவன்) அமைப்பிடம் கூறினோம்.
எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிவாரணப் பொருட்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகின்றன. நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment