பிள்ளைகளுக்காக முப்பது வருடங்கள் மூச்சைப் பிடித்தோம்
“முப்பது வருடங்களாக எங்களுக்கு மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை, ரெலிபோன் இல்லை, போக்குவரத்திற்கான பாதை இல்லை, போக்கிடம் இல்லாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் எங்கள் பிள்ளைகளுக்காக வாழ்ந்தோம்”
இப்போதுதான் உள்ளத்தைத் திறந்து தமது ஆதங்கங்களையெல்லாம் வெளியில் கொட்டுகிறார்கள் வன்னி மக்கள்.
எதிர்கால வாழ்க்கையில் இலட்சியங்களையும் எதிர்பார்ப்புகளையும் இதயத்தில் தாங்கியவர்களை மெனிக்பாம் நிவாரண இடைநிலை கிராமங்கள்தான் இப்போதைக்கு அரவணைத்திருக்கின்றன.
இடம்பெயர்வோரை உள்வாங்குவதற்கென்றே இத்தனை நாள் வெறுமையாய் இருந்ததோ என்னவோ மனிக்பாம்! இலட்சக் கணக்கானவர்களை வாரியணைத்து முழுமைபெற்றிருக்கிறது. மீண்டும் சொந்த வாழ்விடம் திரும்பும் மகிழ்ச்சியில் சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
பச்சை மண் தொட்டு பெரியோர், முதியோர் வரை ஆசிரியர் முதல் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என சமூகத்தில் பல தரப்பட்டோரையும் சமமாய்; சமரசமாய் வைத்திருக்கிறது இந்த மனிக்பாம்!
சுமார் மூன்று இலட்சம் மக்களில் 55 ஆயிரம் மாணவர்கள். 1969 ஆசிரியர்கள். கல்வியை உயிரினும் மேலாய் மதிக்கும் சமூகம் உடைமைகளை இழந்து, உயிர் தப்பியிருக்கிறது. பிச்சை எடுத்தாவது பிள்ளைகளைக் கல்வியில் கரைசேர்த்துவிடவேண்டும் என்கிற வேட்கை இன்னும் மேலோங்கியிருக்கிறது.
“பிள்ளைகளுக்காகத்தான் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டிருந்தோம். பிள்ளையின் பெருமை அப்பனுக்குத் தான் தெரியும். வெளிநாடுகளில் உள்ளவனுக்குத் தெரியாது” என்று உணர்ச்சி மேலீட்டால் தமது ஆதங்கத்தைக் கொட்டுகிறார் ஆசிரியர் கமலகாந்தன். இரு தசாப்தத்துக்கும் மேலாக ஆசிரிய தொழில்புரிந்த அவர் இன்று ஓர் அகதி ஆசிரியர்!
“2006 ஓகஸ்ட் 16ம் திகதிக்குப் பின்னர் புலிகளுக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்தது. கல்விச் சமூகமும் விரக்தியடைந்தது. மக்கள் ஏற்கனவே வெளியேறியிருந்தால் புலிகளை நேரத்தோடே முடிச்சிருப்பாங்கள். முப்பது வருஷமாக நாங்க எந்தச் சுதந்திரத்தையும் அனுபவிக்கவில்லை. ‘கரன்ற்’ ஒரு யுனிட் 150 ரூபா அடிப்படையிலை எடுத்தன். முடியாதவன் என்ன செய்வான்?
“மண்ணெண்ணெய் இல்லாமல் எத்தனை பிள்ளையர் படிக்காமல் விட்டது தெரியுமா? ரெலிபோன் கதைக்க வேணுமெண்டாலும் கட்டுப்பாடு. ஒட்டுக் கேட்டல்தான். வெளியிலை போக ஏலாது. என்ர எத்தினை புரமோஷனை இழந்திருப்பன்! இந்த நிலை இனியும் வரக்கூடாது. அரசாங்கம் பாதுகாப்பை உறுதிப்படுத்தி எங்களைச் சொந்த இடங்களில் வாழவிடோனும். எங்கட பிள்ளையள் படிக்க வேணும்” கண்கள் குளமாக, குழுமியிருக்கும் மாணவர்களை நோக்குகிறார் ஆசிரியர்.
“தலைமுறை தலைமுறையாக சிறுகச் சிறுகச் சேமித்து சேர்த்து வைத்த பொருட்களையெல்லாம், ஒவ்வோரு இடமாகக் கொண்டு திரிந்து சிதறிச்சுப் போட்டிட்டு, ஷொப்பிங் பேக்குடன் வந்திருக்கிறம். எல்லாத்தையும் இழந்து முடமாகி நிற்கிறோம்” என்கிறவர் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உன்னதமானவை எனப் பாராட்டுகிறார்.
இடைநிலை நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்காக கற்றல் உபகரணங்களையும், சீருடைகளையும் பெற்றுக் கொடுத்து, கல்விக்குப் புத்துயிர் அளித்திருக்கிறது கல்வி அமைச்சு. ஆறு நிவாரணக் கிராமங்களிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப, இரண்டாம் நிலை, உயர்கல்வி எனப் பிரித்து மூன்று வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், பிரதியமைச்சர் எம்.சச்சிதானந்தன், மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் நேரடியாக நிவாரணக் கிராமங்களுக்குச் சென்று இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். நிவாரணக் கிராமப் பாடசாலைகளின் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான ஐந்து கண்காணிப்பு அலுவலகங்களும் செட்டிக்குளத்தில் திறக்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் தங்குவதற்கான நலன்புரி நிலையங்களாக செயற்பட்ட வவுனியா வலய 18 பாடசாலைகளில் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இதில் வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ஒஸ்வல்ட் சுறுசுறுப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இடம்பெயர்ந்த மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விசேட மீட்டல் வகுப்புகளை நடத்த கொழும்பிலிருந்தும் ஆசிரியர்கள் செல்கிறார்கள்.
கல்வி அமைச்சின் பாடப்புத்தகங்களைக் கையில் வாங்குவதற்கு பிஞ்சுகள் ஆர்வத்தால் அவசரப்பட்டுக் குதிக்கிறார்கள். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் லெனின் மதிவாணன் பிள்ளைகளுக்குப் புத்தகப் பொதிகளை உற்சாகமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இடையில் ஓர் ஆஜானுபாகுவாய் ஒருவர் “ஐயா, சொல்லிக்கொடுங்கோ... புத்தகங்களைக் கொண்டு போய் கடலைக் கொட்டை சுத்திப்போடுவாங்கள்” என்று தனது மேலாண்மைத் தனத்தை வெளிப்படுத்தினார். “துன்பத்தால் துவண்டு, நாராய் இழைத்து போயிருக்கும் பிள்ளைகளைப் பார்த்து என்ன சொல்கிaர்கள்! அபத்தம்” என்று அவருக்கு அறிவுரை சொன்னார் லெனின்.
இத்துணை காலம் நாம் இவ்வாறு எண்ணிச் செயற்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் ஓர் உயர்ந்த மனநிலையில் பிள்ளைகளை உருவாக்க வேண்டும். அதற்கு ஒத்துழைக்க முடியாவிட்டால் உபத்திரவமாக இல்லாமல் ஒதுங்கிவிடுங்கள் என்பது லெனினின் கருத்து.
ஓர் இடத்தில் புத்தகங்களைப் பெறுவதற்காகக் குழுமியிருந்த மாணவர்களிடம் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மகிழ்ச்சியாக உரையாடினார்.
“நல்லா படிப்பீங்களா?”
“ஓ...ம்”
“எங்க இருந்து வந்தீங்க?”
“புதுமாத்தளனிலை”
“ஏன் வந்தீங்க?”
“அங்க ஷெல் அடிக்கிறாங்கள்!”
எங்கே இருக்கின்றோம், ஏன் இருக்கின்றோம், என்ன நடக்கின்றது என்பதைப் பற்றியெல்லாம் எதுவுமே புரியாத பாலகர்களின் முகத்தில் அப்பாவித்தனம் நம்மை ஒரு கணம் நெகிழவைக்கிறது. ‘என்ன நடந்தாலும் நாங்கள் படிப்போம், என்பதில் உறுதியாக கதிர்காமர் கிராமத்தில் 4450 மாணவர்களும், ஆனந்தகுமாரசாமி கிராமத்தில் 11 ஆயிரம் மாணவர்களும், இராமநாதனில் 12 ஆயிரம் மாணவர்களும், அருணாசலம் கிராமத்தில் 10850 மாணவர்களும் மற்றும் ஐந்தாம், ஆறாம் வலயங்களில் 16770 மாணவர்களும் கல்விக்காகக் காத்திருக்கிறார்கள்.
இந்த செட்டிக்குள பட்டாம்பூச்சிகள் பரீட்சை எழுதுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேரிற்சென்று மேற்கொண்டுள்ளதுடன், விசேட அப்பியாசப் பயிற்சிப் புத்தகங்களையும் கொடுத்துதவியுள்ளார்.
“வன்னி மாணவர்கள் வரலாற்றுப் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர். அதனால் நல்ல பெறுபேறுகளைப் பெறுவார்கள். போதுமான வளர்ச்சி அவசியம். ஆசிரியர்களும், மாணவர்களும் இந்த முகாம் வாழ்க்கையால் மன உலைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளார்கள், அவர்களுக்கு உளவளப் பயிற்சி வழங்க வேண்டும்”
துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளர் த. மேகநாதன் இப்படிச் சொல்கிறார்.
பிள்ளைகளின் கற்றல் சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. மரத்துக்குக் கீழ் பிள்ளைகள் படிக்க, பெற்றோர் சீட்டாடுகிறார்கள். இதற்கிடையில் உறவினர்கள் வருகிறார்கள். வாகனங்களின் உறுமல், பேய்க்காற்றின் இரைச்சல் வெட்டவெளிப் பிரதேசத்தில் புழுதியுடன் முகத்தில் அறைகிறது. இன்னும்... இன்னும்... எப்படியெல்லாமோ சொல்ல முடியும். இந்த நிலையைத் துரிதமாக மாற்றுவதற்கு மீள்குடியேற்றம்தான் ஒரே வழி. அது இப்போது வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பது இவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு.
0 விமர்சனங்கள்:
Post a Comment