பாகிஸ்தான் சர்வதேச விமானத்தில் எலிகளுடன் பயணிகள் பிரயாணம்!
பாகிஸ்தான் சர்வதேச விமானத்தில் (பி.ஐ.ஏ.) பயணம் செய்த பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு இயக்கப்படும் விமானத்தில், அழையா விருந்தாளிகளாகப் புகுந்த ஒரு டசின் எலிகளுடன் பயணிகள் பயணம் செய்தனர்.
பி.கே. 792 என்ற அந்த விமானம் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் நகரிலிருந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்துக்கு திங்கட்கிழமை இயக்கப்பட்டது. அந்த விமானத்தில் அங்குமிங்கும் வட்டமிட்ட பெருச்சாளி போன்ற பெரிய வகை எலிகளால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, அந்த விமானம் கடந்த திங்கட் கிழமை அதிகாலை ராவல்பிண்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அதன்பிறகே, இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
எலிகளின் தொந்தரவால் அன்று முற்பகல் 11.30 மணிக்கு லண்டன் புறப்பட்டுச் செல்ல வேண்டிய அந்த விமானம் ராவல்பிண்டியிலேயே நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த விமானத்தில் இருந்த எலிகளைப் பிடிக்க லாகூரிலிருந்து 50 எலிப் பொறி சாதனங்கள் வரவழைக்கப்பட்டன. இருப்பினும், திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி வரை எலிகள் அனைத்தையும் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, அந்த விமானத்தில் லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் வேறொரு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
லண்டன் விமான நிலையத்தின் சரக்குகள் ஏற்றி அனுப்பும் மையத்திலிருந்து இந்த எலிகள் தங்களது விமானத்துக்குள் நுழைந்திருக்கலாம் என பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன துணை இயக்குநர் முகம்மது லத்தீப் கூறினார்.
விமானத்தில் பயணிகளுடன் எலிகளும் பயணித்தது குறித்து பாகிஸ்தான் வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் அரங்கேறின.
0 விமர்சனங்கள்:
Post a Comment