புலிகளின் இராணுவத் தோல்வியும் அரசியல் தீர்வின் நிலையும்...?
உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகு தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான சிந்தனை தோன்றுவதற்குப் பதிலாக மேலும் குழப்பகரமான கருத்துகள் வெளிக்கிளம்புவதையே காணக்கூடியதாக இருக்கிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அரசாங்க உயர்மட்டத்தில் உள்ளவர்கள் ஒருபுறத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அத்திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்தும் பேசுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் உள்நாட்டில் உருவகிக்கப்படுகின்ற தீர்வு பற்றியும் அடிக்கடி அபிப்பிராயம் வெளியிடுகிறார்கள். அரசாங்கத்திற்குள் இருக்கின்ற சில சக்திகள் குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை கடுமையாக எதிர்த்து நிற்கின்றன. பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்ட இக்கட்சிகள் அதிகாரப்பரவலாக்கலின் அடிப்படையில் அரசியல் தீர்வெதையும் காண வேண்டிய அவசியமேயில்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றன. எதிரணியில் இருக்கக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யும் அதே நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தக்கூடிய சக்திகள் வலுவிழந்தவையாகவே இருக்கின்றன. குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அரசியல் தீர்வு பற்றி பேசுகின்றபோதிலும், தங்களது நிலைப்பாடுகளை உரத்துப்பேசி வலியுறுத்தக்கூடிய அரசியல் வல்லமையைக் கொண்டவையாக இல்லை. ஆனால், தங்களது விரலுக்கு ஒவ்வாத வீக்கத்தைக் கொண்ட ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரிக்கை செய்யக்கூடிய அளவுக்கு துணிச்சலைக் கொண்டிருக்கின்றன. 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்று தங்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதாகக் கூறியிருக்கும் விமல் வீரவன்ச, அந்தத் திருத்தத்துக்கு ஆதரவாகப் பேசுகின்ற அமைச்சர்களின் வாயை அடைக்க வேண்டுமென்று ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார்.
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பது அவசியம் என்று கருதுகின்ற அதேவேளை, தங்களது நிலைப்பாட்டை அரசாங்க உயர்பீடம் ஏற்கக்கூடிய அளவுக்கு அரசியல் செல்வாக்கை செலுத்த முடியாத பலவீனமான நிலையில் உள்ள சக்திகளையும் அரசியல் தீர்வு குறித்தோ அதிகாரப்பரவலாக்கம் குறித்தோ எந்தவித நடவடிக்கையையும் எடுக்கத்தேவையில்லை என்று அரசாங்கத்துக்கு உரத்துச் சொல்லக்கூடிய அரசியல் துணிச்சலைக் கொண்ட பேரினவாத சக்திகளையும் உள்ளடக்கியதாக இன்றைய ஆட்சிக்கட்டமைப்பு இருக்கிறது. இத்தகையதொரு பின்புலத்திலே சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் குழுவின் தலைவரான விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் விமல் வீரவன்சவும் செய்தியாளர்களுக்குத் தெரிவித்ததாக நேற்றைய தினம் பத்திரிகைகளில் வெளியான முரண்பட்ட இரு கருத்துக்கள் எமது கவனத்தை ஈர்த்திருக்கின்றன.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இராணுவத்தினரால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு இருந்தமிகப்பெரிய முட்டுக்கட்டை அகற்றப்பட்டுவிட்டது. நாட்டின் அதிகப் பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்புடையதான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு கூட்டாகப் பாடுபடுவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று பேராசிரியர் விதாரண கூறியிருக்கிறார். அதேவேளை, செய்தியாளர் மகாநாடொன்றில் உரையாற்றிய வீரவன்ச அரசியல் தீர்வு பற்றியோ அதிகாரப் பரவலாக்கல் பற்றியோ பேசி நேரத்தை விரயமாக்குவதில் அர்த்தம் ஏதுமில்லை. ஏனென்றால், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததன் மூலமாக சமாதானத்தைக் காண்பதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார். மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்கு வந்தபோது விடுதலைப் புலிகளை முல்லைத்தீவு கடற்கரையோரமாகத் தோற்கடித்த இராணுவத்தினர் அரசியல் தீர்வையும் அதிகாரப் பரவலாக்கலையும் சேர்த்தே புதைத்துவிட்டனர் என்று வீரவன்ச கூறியிருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.
விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டதா? விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியுடன் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லாமல் போய்விட்டதா? அல்லது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான ஒரேயொரு முட்டுக்கட்டையாக விடுதலைப் புலிகள் தான் விளங்கினார்களா? பேராசிரியர் விதாரணவும் வீரவன்சவும் தெரிவித்திருக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், போருக்குப் பின்னரான அரசியல் சூழ்நிலையில் எழுகின்ற முக்கியமான கேள்விகள் இவை. மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரினால் சொல்லொணா அவலங்களுக்குள்ளாகி இறுதியில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் விடப்பட்டிருக்கும் தமிழ் மக்களிடமிருந்து அல்ல, அவர்களை நோக்கி தேசிய நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற தென்னிலங்கை அரசியல் சக்திகளிடம் இருந்தே இக் கேள்விகளுக்குப் பதில்கள் வரவேண்டும்!
0 விமர்சனங்கள்:
Post a Comment