இடதுசாரிகள் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தனமும் சந்தர்ப்பவாதமும்
தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிக் கட்சிகள் நேர்மையாக நடந்திருந்தால் தமிழ் மக்கள் மத்தியிலாவது தங்கள் தளத்தினை கைப்பற்றியிருக்க முடியும். இடதுசாரிகள் செய்த துரோகத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஜூலை 3 ஆம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது 66 ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடியிருந்தது. லங்கா சமசமாஜக்கட்சி இவ்வாறு ஆண்டு விழாக்கள் ஏதேனும் கொண்டாடியதாகத் தெரியவில்லை. விழாக்களைக் கொண்டாடும் நிலைக்கு அது இல்லைபோலவே தெரிகின்றது.
லங்கா சமசமாஜக்கட்சியின் தற்போதைய நிலையினை யூனியன் பிளேசிலுள்ள அதன் தலைமையகமே தெளிவாக வெளிப்படுத்தும். பிள்ளைகள் எவரும் அற்று அநாதையாக மரணத்தறுவாயில் இருக்கும் வயோதிபரைப் போலவே அது காட்சியளிக்கின்றது. ஒரு காலத்தில் அரசாங்கத்தையே ஒரு நாளில் கவிழ்த்தக்கூடிய அரசியல் பலத்தையும் தொழிலாளர் பலத்தையும் கொண்டிருந்த இடதுசாரிக்கட்சிகள் இன்று வெறும் பெயர் பலகைகளுடன் மகிந்தரின் தாழ்வாரத்தில் ஒதுங்கிக்கிடக்கின்றன. இவற்றைக் கணக்கில் எடுக்க இலங்கைதீவில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு அடுத்தடுத்து துரோகம் விளைவித்த இக்கட்சிகள், ஒரு காலத்தில் தமிழ்மக்கள் மத்தியில் வலுவான அடித்தளத்தினைக் கொண்டிருந்தன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களிடையேயும், படித்த மத்தியதர வர்க்க இளைஞர்களிடையேயும் வலுவான செல்வாக்குத் தளத்தினைக் கொண்டிருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமை ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை இவர்களே முன்னின்று நடத்தினர்.
உள்ளூராட்சி அமைப்புகளில் தமிழ் இடதுசாரிகள் முக்கிய தலைவர்களாக விளங்கினர். சுன்னாகம் பட்டினசபை போன்ற உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்ந்து இவர்களின் ஆக்கத்திலேயே இருந்தது. இலக்கிய அணியினர் மத்தியிலும் இவர்களை ஆதரித்த முற்போக்கு எழுத்தாளர் சங்கமே வலுவான அமைப்பாக இருந்தது. பேராசிரியர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோர் இடதுசாரி இயக்கத்திற்கு புலமைப் பின்புலத்தை வழங்கிக் கொண்டிருந்தனர். இனப்பிரச்சினை தமிழ்மக்கள் மத்தியில் இனரீதியான அமைப்புகளை வேண்டி நின்றதால் தேர்தலில் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறமுடியாதபோதும் தமிழ் இடதுசாரித் தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு இருந்தது.
தர்மகுலசிங்கம், சண்முகதாசன், வி.பொன்னம்பலம், கார்த்திகேயன், எஸ்.பி.வைத்தியலிங்கம், எம்.சி.சுப்பிரமணியம், சி.என்.நாகரட்ணம், நாகலிங்கம், விஸ்வநாதன் ஆகியோர் யாழ்ப்பாண மக்களால் நன்கு மதிக்கப்பட்டவர்களாக விளங்கினர். ஆனால், தமிழ்மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாக வளரத் தொடங்கியதன் பின்னர் பாரம்பரிய இடதுசாரிக்கட்சிகளுக்கு எந்தச் செல்வாக்குமே தமிழ் மக்கள் மத்தியில் இருக்கவில்லை. இடதுசாரிக்கட்சிகள் தொடர்ச்சியாக தேசிய இனப்பிரச்சினையில் துரோகத்தனத்துடன் நடந்து கொண்டமையே இதற்கு காரணமாகும். இடதுசாரிக்கட்சிகள் தேசிய இனப்பிரச்சினையில் இழைத்த துரோக வரலாற்றினை ஆராய்வதற்கு தமிழ்மக்கள் மத்தியில் அவர்களின் வரலாற்றினை 5 கட்டங்களாக பிரித்து ஆராய்வது உகந்ததாகும்.
1935 - 1949 காலகட்டம்:
1935 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜக் கட்சியும் 1943ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் தோற்றம் பெற்றபோதும் தமிழ்ப்பிரதேசங்களில் அதன் செயற்பாடுகள் 1940களில் நடுப்பகுதியிலேயே பெருகத்தொடங்கியிருந்தன. அதுவரை 1924 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வாலிப காங்கிரஸே இடது சாரி இயக்கத்தின் தேவையை நிறைவுசெய்திருந்தது. சமூகமாற்றத்திற்கான கருத்துகள் பலவற்றை பிரசாரம் செய்த அதேவேளை, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சிறிய போராட்டங்களையும் நடத்தியிருந்தது. அதேநேரம் காலனித்துவ ஆட்சிக்கெதிராக "பூரண சுதந்திரம்' என்ற கோசத்தையும் அது முன்வைத்திருந்தது. இதனை முன்வைத்தே 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் நடைபெற்ற தேர்தலையும் குடாநாட்டில் பகிஸ்கரித்திருந்தது.
ஒருவகையில் யாழ்ப்பாண வாலிப காங்கிரஸ் குடாநாட்டில் செல்வாக்கினை இழந்து அதன் தொடர்ச்சியாகவே இடது சாரிக்கட்சிகள் செல்வாக்கினைப் பெறத் தொடங்கின. அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் பெரியளவிற்கு செயற்படவில்லை. லங்கா சமசமாஜ கட்சியே செயல்பட்டது. தர்மகுலசிங்கமே யாழ்ப்பாணத்தில் இக்கட்சியினை வலுவாக அறிமுகப்படுத்தியவர் என்று கூறவேண்டும். அவர் தலைமையில் நடத்தப்பட்ட வில்லூன்றி மயானப் போராட்டம் கட்சியின் செல்வாக்கினை குடாநாட்டில் பதிக்கக் காரணமாகியது.
குடாநாட்டினைவிட ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் இடதுசாரிக்கட்சிகள் வலுவாகச் செயற்பட்டமைக்கு பெரிய ஆதாரங்கள் இல்லை. சண்முகதாசன் தலைமையில் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டபின் கிளிநொச்சி மாவட்டத்தில் அதன் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தது. கிளிநொச்சி ஒரு குடியேற்றப்பிரதேசமே. குடாநாட்டில் இருந்து குடியேறியவர்களே அங்கு வசித்திருந்தனர். முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலோ அல்லது கிழக்கு மாவட்டங்களிலோ இடதுசாரிக்கட்சிகள் பெரியளவிற்கு செயற்பட்டதாகத் தெரியவில்லை.
இக்காலத்தில் கட்சி முற்போக்கான சிந்தனையுடன் செயற்பட்டது எனக் கூறலாம். தமிழ்மக்கள் மத்தியில் தமிழரசுக்கட்சி தோற்றம் பெறாததினால் குடாநாட்டில் தமிழ் காங்கிரஸுக்கு பிரதான எதிர்க்கட்சியாக இதுவே விளங்கியிருந்தது. தமிழ்க் காங்கிரஸ் சைவ, வேளாளச் சிந்தனையில் ஊறியிருந்தமையினால் சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களையோ, முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்களையோ கவரக்கூடியதாக இருக்கவில்லை.
குடாநாட்டிற்கு புறம்பாக மலையகத்திலும் இடதுசாரிகள் வலுவான நிலையில் இருந்தனர். பல போராட்டங்களையும் நடத்தினர். ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மலையக மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்தபோது பாராளுமன்றத்தில் அதனை எதிர்த்து இடதுசாரிகள் உரையாற்றியபோது, எதிராகவும் வாக்களித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிர்த்துப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் கெனமன் ""இம் மசோதாவின் அடிப்படைத் தத்துவம் நேர்மையற்றது. வர்க்க நலன்கள் இச்சட்ட விதிகளில் சேர்ந்திருக்கிறது எனவே இதனை எதிர்க்கின்றோம்' என்றார்.
பிரசாவுரிமைச் சட்டம் தொடர்பாக சமசமஜாசகட்சியின் தலைவர் டாக்டர் என்.எம்.பெரேரா பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது பின்வருமாறு கூறினார். "இவ்வகையான இனவாதம் கிட்லர் போன்றோரின் இனவாதமாகவே முடியும். நாட்டுத்தலைவர் என்று தன்னைக் கூறும் ஒருவர் இத்தகைய சட்டத்திற்கு ஆதரவளிக்கும்படி கேட்பார் என நான் நினைக்க வில்லை. எவ்வேலையுமற்ற சிங்களவர் ஒருவர் பிரஜாவுரிமை பெறுவதற்கு தகுதியுடையவரானால், வருமானம் ஏதுவுமற்ற ஓர் இந்தியருக்கு ஏன் இந்த உரிமை விலக்கப்படவேண்டும்.'
கொல்வின் ஆர்.டி.சில்வா "இச்சட்டம் சர்வஜனவாக்குரிமையின் எதிர்காலச் சவக்குழியை தோண்ட பயன்படுவதாகும் எனக்குறிப்பிட்டார்.
1949 - 1963 காலகட்டம்:
1949 ஆம் ஆண்டு டிசம்பர் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இக்கட்டம் ஆரம்பமாகின்றது. 1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரியாப்பு எண்ணிக்கை ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆட்சி அதிகாரத்தை பெரும்பான்மை இனத்திடம் கையளித்தது. இதனால் இக்காலம் முழுவதும் அரச அதிகாரக் கட்டமைப்பினை சிங்களமயமாக்குவதிலேயே ஆட்சிக்கு வந்தவர்கள் கவனம் செலுத்தினர். இச்சிங்களமயமாக்கம் என்பது பிரஜாவுரிமைச் சட்டத்திலிருந்து ஆரம்பித்து வாக்குரிமைச்சட்டம் சிங்கள அடையாளங்களைத் திணிக்கும் தேசியக்கொடி, தனிச்சிங்களச்சட்டம் என வளர்ந்தது.
இடதுசாரிக்கட்சிகள் இக்காலத்தில் தான் பாராளுமன்றக் கதிரைகளுக்கான கொள்கைகளை கைவிட ஆரம்பித்தனர். அதேவேளை தமிழரசுக்கட்சி இக்காலத்தில் சமஷ்டிக் கோரிக்கையினை முன்வைத்தது. தமிழரசுக் கட்சியின் தோற்றத்துடன் இடதுசாரிக்கட்சிகளின் செல்வாக்கு வடக்கில் சரியத்தொடங்கியது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழரசு குரல் கொடுக்கத் தொடங்கியது. கட்சியின் முக்கிய கொள்கையாக சாதி ஒழிப்பினையும் சேர்த்துக்கொண்டது. தமிழரசுக்கட்சியின் இந்த வளர்ச்சியினால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழிரின் மகாசபையும் இரண்டாக உடைந்தது. அதன் ஒருபகுதி தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்துகொண்டது.
1956 ஆம் ஆண்டு தேர்தலின்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது இனவாதத்தினை மேடையேற்றத் தொடங்கியது. அது பேரினவாத சக்திகளின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இடதுசாரித் தலைவர்களின் ஒருவரான பிலிப் குணவர்த்தனா சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச்சேர்ந்து மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பினை உருவாக்குவதில் முன்னின்றார். அதேவேளை லங்கா சமசமாஜக்கட்சி தேர்தலில் பண்டாரநாயக்காவிடம் போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இடதுசாரிக்கட்சிகளின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்பட்டது.
பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றுவதற்காக ஒரு கட்சி இனவாதக்கட்சியுடன் கூட்டுச்சேர மற்றைய கட்சி தேர்தலில் ஒத்துழைத்தது. இவ்வளவிற்கும் தேர்தலுக்கு முன்னரேயே பண்டாரநாயக்கா தான் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்திய?லத்திற்குள் சிங்களமொழிச் சட்டத்தினைக் கொண்டுவருவேன் எனப்பிரசாரம் செய்தார். தேர்தல் வெற்றிக்காக மலிவான இனவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சி பிரஜாவுரிமைச் சட்டத்துடன் தொடக்கிவைக்க பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்துடன் அதன் தொடச்சியை முன்னெடுத்துச் சென்றார்.
லங்கா சமசமாஜக்கட்சி இச்சட்டத்தினை கடுமையாக எதிர்த்தது. இதனை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலமும் நகரமண்டபத்தில் நடைபெற்ற கூட்டமும் சிங்கள தீவிரவாதிகளால் குழப்பப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான டாக்டர். என்.எம்.பெரேரா "இன்று பிரபலமான கருத்தாகிய சிங்களம் மட்டும் என்பதை ஆதரிப்பது எனக்கும் எனது கட்சி அங்கத்தவர்களுக்கும் எளிதாக இருக்கும். மற்றவர்களைப்போல நாமும் வீரபுருசர்களாகப் போற்றப்பட்டிருப்போம். ஆனால் நாம் எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம். இவ்வாறு கூறுவதால் அரசியல் பதவியில் சில காலம் நாம் இல்லாமல் போகலாம் அதனையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.
வெஸ்லி குணவர்த்தன பேசுகையில் இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்து வர உள்ளது. தமிழ் மக்கள் தமக்கு அநியாயம் நடப்பதாக உணர்ந்தால், அவர்கள் நாட்டிலிருந்து பிரிந்து போகக்கூடத் தீர்மானிக்கலாம் என்றார். கொல்வின் ஆர்.டி.சில்வா இருமொழி ஒரு நாடுவேண்டுமா? அல்லது ஒருமொழி இருநாடு வேண்டுமா? எனக்கேட்டார். கம்யூனிஸ்ட் கட்சி பெரியளவிற்கு இச்சட்டத்தினை எதிர்த்து செயற்பட்டதாகத் தெரியவில்லை. தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்து காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தியது. காடையர்கள் சத்தியாக்கிரகத்தை தாக்கி காயமடையச் செய்தனர்.
இடதுசாரிகள் தனிச்சிங்களச் சட்டத்தினை எதிர்த்து பாராளுமன்றத்தில் உரையாற்றினர். ஆனால், தமிழரசுக்கட்சியின் போராட்டங்களில் பங்குபெறவில்லை. நகரமண்டப ஆர்ப்பாட்டங்களைத் தவிர வேறு போராட்டங்களையும் நடத்தவில்லை. தொடர்ந்து தமிழரசுக்கட்சி திருமலை யாத்திரை, ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம் எனப்பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், இடதுசாரிகள் பங்குபற்றவில்லை. இடதுசாரிகளின் வேண்டுதலின் பேரிலேயே 1960 மார்ச் தேர்தலின் பின்னர் தமிழரசு கட்சி ஐக்கிய தேசியக் கட்சியினை தோற்கடித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவளித்தது. எனினும் 1960 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் தமிழ்ப் பிரதேசங்களில் அமுலாக்கப்படுவதை எதிர்த்து தமிழரசுக் கட்சி வட கிழக்கு முழுவதும் சத்தியாக்கிரககப் போராட்டத்தினை நடத்தியபோது தமிழ் இடதுசாரிகள் கூட அவற்றில் பங்குபற்றவில்லை. இடதுசாரிக்கட்சிகளின் இந்த பாராமுகப் போக்கிலேயே லங்கா சமசமாஜக்கட்சியில் செயற்பட்ட மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி போன்றோர் அதிலிருந்து விலகி தமிழ்க் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். 1956 இல் தனிச்சிங்களச் சட்டத்திற்கு பின்னர் லங்கா சமசமாஜக்கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக பேசுவதையே நிறுத்தியிருந்தனர்.
1963 - 1983 காலகட்டம்:
1963 ஆம் ஆண்டு பிரதான இடதுசாரிக்கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இனவாதக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இதன் பின்னர் தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசிய கட்சியினை ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை. இரு பிரதான இடதுசாரிக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டினைக் கைவிட்டு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டினை எடுக்கத் தொடங்கினர். 1964 ஆம் ஆண்டு இக்கட்சிகளும் கூட்டு சேர்ந்த நிலையில்தான் மலையக மக்களை நாடு கடத்தும் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இடது சாரிக் கட்சிகளும் அதற்கு ஆதரவளித்து மலையக மக்களைக் காட்டிக் கொடுத்தது. 1966 ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட மசோதா பாராளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது இடதுசாரிக் கட்சிகள் அதனை எதிர்த்தன. கோசங்களை எழுப்பினர். கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "அத்த' பத்திரிகையும் லங்கா சமசமாஜக் கட்சியின் பத்திரிகையான "ஜனதின' பத்திரிகையும் பச்சை இனவாத்தை எழுப்பியது. "ஜனதின"இரத்தமலானையை தமிழ் நகர் ஆக்க இரகசிய முயற்சி', "சிங்கள பௌத்தர்களே எழுக', "வடக்கிலுள்ள சிங்களவர்களுக்கு ஆபத்து' என இனவாதம் தொனிக்கும் வகையில் தலையங்கமிட்டு செய்திகளை வெளியிட்டது.
தமிழ் மொழி விசேட மசோதா தொடர்பாக ஒப்பந்தத்தைக் கிழித்தெறி என்ற தலையங்கத்தில் "ஜனதின' பின்வருமாறு எழுதியது.
சிங்களவரின் பிறப்புரிமைக்குத் துரோகம் இழைக்கும் டட்லி சில்வா ஒப்பந்தத்திற்கு எதிராகப் பொதுசன எதிர்ப்பைத் திரட்டும் கூட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாட்டுப்பற்றுள்ள அமைப்புகள் விரிவாகச் செய்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "அத்த' சிங்களவரது பிறப்புரிமைகளை விட்டுக் "கொடுக்கும் டட்லி செல்வா ஒப்பந்தத்தை எதிர்ப்போம்' எனச் செய்தி வெளியிட்டது. தமிழ் மொழி விசேட மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்புக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை. இதில் கலந்து கொண்டமைக்காகவே ரோகண விஜேவீர கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
1970 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடதுசாரிகள் கூட்டரசாங்கம் மூலம் ஒரு ஆட்சியைக் கைப்பற்றியது. உடனேயே புதிய அரசியல் யாப்பினையும் உருவாக்கியது. கொல்வின் ஆர்.டி.சில்வா யாப்பினை உருவாக்கும் பொறுப்பினை ஏற்றார். இவ்யாப்பின் மூலம் தான் சிங்கள அடையாளங்களுக்கு அரசியல் யாப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டது. சிங்கள மொழி, பௌத்த மதம், சிங்கள அடையாளத் தேசியக் கொடி என்பவற்றிற்கு அரசியல் யாப்பு அந்தஸ்த்து கொடுக்கப்பட்டது. அதேவேளை, தமிழ் மக்களுக்கு பெரளவு பாதுகாப்பாக சோல்பரியல் இருந்த 29 ஆவது பிரிவு உட்பட அனைத்து பாதுகாப்புகளும் நீக்கப்பட்டன. அதாவது தமிழ் மக்கள் இலங்கையின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பில் பெயரளவு இடம் கூட இல்லாமல் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனைச் செய்தவர் வேறுயாருமல்ல கொல்வின் ஆர்.டி.சில்வா தான். இதன் பினனர் தமிழ் மக்களுக்கு இப்பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளில் எந்தவித நம்பிக்கையும் இருக்கவில்லை. வீரகேசரி பத்திரிகை யாப்பு அமுலுக்கு வந்தபோது "பண்டார நாயக்க தொடக்கி வைத்ததை கொல்வின் முடித்து வைத்தார்' என ஆசிரியர் தலையங்கம் தீட்டியது.
1972 ஆம் ஆண்டு யாப்பின் பின்னர் இலங்கை என்ற அரச கட்டமைப்புக்குள் தீர்வு வரும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்தனர். தனிநாட்டுப் போராட்டத்தைப் பறிக்கும் போராட்டம் என்பதற்கிணங்க ஆயுதப் போராட்டமும் உருவாகியது. 1983 ஆம் ஆண்டு இனக்கலவரமும் இந்தப் போக்கின் பிரிநிலையைக் கோடாக இருந்தது.
1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர்
1983க்குப் பின்னர் இடதுசாரிக் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை இழந்தது. இடதுசாரிக் கட்சிகளில் செயற்பட்ட பலர் விடுதலை அமைப்புகளில் இணைந்து கொண்டனர். ஏனைய பலர் அரசியலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இலக்கியவாதிகள் மட்டும் இலக்கிய செயற்பாடுகளுடன் தம்மை சுருக்கிக் கொண்டனர்.
தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிக் கட்சிகள் நேர்மையாக நடந்திருந்தால் தமிழ் மக்கள் மத்தியிலாவது தங்கள் தளத்தினை கைப்பற்றியிருக்க முடியும். இடதுசாரிகள் தமிழ் மக்களுக்குச் செய்த துரோகத்தை தமிழ் மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.
-சுப்பிரமணியம்-
0 விமர்சனங்கள்:
Post a Comment