முடிவுக்கு வந்து விட்ட "வணங்கா மண்' பிரச்சினை
தமிழக காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் அனுசரணையை நினைத்துக்கொண்டு போடும் எல்லா கணக்குகளுமே டில்லி தலைமைப் பீடத்தின் தலையீட்டில் தவிடுபொடியாகிவரும் சூழலில், நாட்களையும் நேரத்தையும் சரியாக எண்ணிப்பார்த்து சுமுகமாக கா நகர்த்துகின்றார் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி! தி.மு.க.வுடனான உறவில் உடும்புப்பிடியில் இருக்கும் டில்லியின் போக்கில் இனிமேல் எந்த மாறுதலும் ஏற்பட சந்தர்ப்பங்களே கிடையாது என்ற முடிவில், அமைச்சர்கள் பதவிக் கனவுகள் எல்லாமே கலைந்துவிட்ட நிலையில், ஒட்டி உறவாடி பணிந்து வேண்டுவது என்ற மந்திரத்தை இப்பொழுது உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றனர் தமிழக காங்கிரஸார்.
பதினைந்தாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்துமுடிந்து, ஆட்சிக் கட்டிலில் யார் தயவும் தேவைப்படாமல், ஓடிவந்த உறவுகளை வாரி அணைத்து உற்சாகமிகுதியில் காங்கிரஸ் அமர்ந்தபோது; எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா உட்பட இடதுசாரி கட்சிகள் புருவம் உயர்த்திக்கொண்டன. அதேநேரம் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.கழகம் அங்கம் வகித்தாலும் ஆட்சி அமைப்பில் தாங்கள் எதிர்பார்த்தபடி அமைச்சரவைப் பங்களிப்பு கிடைக்குமா என்பது கடைசிவரை நம்பிக்கை குறைவாகவே நீடித்து பெருமூச்சுவிட்டது. தி.மு.க. ஒரு மனக் கணக்குப் போடும் தமிழ்நாடு காங்கிரஸும் டில்லி தலைமைப்பீடமும் தனித்தனியாக கோடுகள் போட்டனர். கடைசியில் டில்லியே கீழே இறங்கி அமைச்சுத் துறையில் சில மாற்றங்களுடன் தி.மு.க.வின் தாகத்தைத் தீர்த்து வைத்தது. இதற்கு மேல் போனால் ஏற்படும் மனஸ்தாபம் இழுபறிகள் ஆட்சிக் கலைப்புக்கே வழிவகுத்துவிடும் என்ற சஞ்சலத்தில், கிடைத்தது லாபம் பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தி.மு.க. திருப்திப்பட்டுக் கொண்டது. இதில் முழுக்க முழுக்க ஏமாந்தது தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான். ஆனாலும் இவர்கள் சளைக்கவில்லை. டில்லியில் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றால், தமிழ்நாட்டில் அதே அளவு பங்கு எங்களுக்கும் வேண்டும் என்று கொடி ஏந்தத் தொடங்கிய காங்கிரஸார் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த எண்ணிய ராகுல் காந்தியின் தயவில் தமிழக அமைச்சரவைக்குள் நுழையத் திட்டமிட்டனர்.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுவடையச் செய வேண்டும் என்பது ராகுல் காந்தியின் இன்றைய கனவு. இதன் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியினரை ஊக்கப்படுத்த தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஏழு பதவிகளையாவது காங்கிரஸாருக்குப் பெற்றுக்கொடுப்பது ராகுல் காந்தியின் தீர்க்கமான யோசனை. இத்தகவல் சென்னையில் கசியத் தொடங்கியதும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு உற்சாக மிகுதியில் சில படிகள் உயரச் சென்று ""2011இல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி தான். ராகுல் காந்தி கனவு நனவாகும்' என்று குரல் கொடுத்தமை அவர் சார்பானவர்களைக் குளிரச்செதாலும் டில்லி, தலைமைப்பீடத்தை கொதிப்படைய வைத்தது! காங்கிரஸ்தி.மு.க. குறிப்பாக, கலைஞர் மனம் நோகடித்து விரிசல் வருவதை எக்கட்டத்திலும் விரும்பாத சோனியா காந்தி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். பாராளுமன்றத் தேர்தல் காலத்திலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் காங்கிரஸ் எதிர்ப்பு சுலோகங்கள் தொடர்பாக புகார்கள் டில்லி நோக்கிப் பறந்தபோது சோனியா காந்தி வெறுப்படைந்து அன்று உத்தரவிட்ட "அடக்கி வாசி' எச்சரிக்கை இன்று தாங்களாகவே அடங்கிப் போகும் நிலைக்கு கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலி; அதட்டுவதைக் கைவிட்டு ஒட்டி உறவாடி, வாவிட்டுக்கேட்பது எனும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் புரிந்துணர்வில், இரு கதவுகளையும் இப்பொழுது திறந்து வைத்திருக்கிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளை தயக்கமோ, பயமோ இன்றி துணைமுதல்வரிடம் நேரில் சென்று தெரிவித்து பயன்பெறலாம் என்ற புதுக் கணக்கின் மூலம் ஆட்சியில் பங்கு அமைச்சர்கள் பதவி என்ற அத்தியாயத்துக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.
காங்கிரஸ்தி.மு.க. உறவில், டில்லியிலும் தமிழ் நாட்டிலும் இன்று சுமுகமான நிலை நீடிக்கும் அதே நேரம், சந்தர்ப்பத்தை சரியாகக் கையாண்டு அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான காகளை சாதுரியமாக நகர்த்தி வருகிறார் முதல்வர் கலைஞர். அவரை உற்சாகப்படுத்துவது, துணைமுதல்வரின் விரைவான நடவடிக்கைகளும் சட்டமன்றத்தில் ஸ்டாலின் விவாதிப்பதும் பதிலளிப்பதும் அவர் கையாளும் முறைகள், மக்கள் எதிர்பார்ப்புகளை ஸ்டாலின் பரபரப்பின்றி நிறைவேற்றும் சாதுரியம், நிறைவேற்றவேண்டிய அரசு திட்டங்களை துரிதப்படுத்துவதில் அவர் மேற்கொள்ளும் சிறப்புகள் எல்லாமே திருப்தியளித்துள்ளன. வாக்காளர்களுக்கு தி.மு.க.சொன்னதைச் செய்வதில் முந்திக்கொள்ளும் அதேநேரம், மக்களை கவர்ந்திழுக்க துணைமுதல்வர் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதும் பல தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதும் அ.தி.மு.க. மற்றும் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு திடீர் அதிர்ச்சியைக் கொடுத்து அவசர செயல்பாடுகளுக்கு முடுக்கிவிட்டிருக்கிறது.
கொட நாட்டில் ஓவெடுக்கும் ஜெயலலிதா முதலில் அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மத்தியில் களையெடுப்பை நடத்த முடிவெடுத்திருக்கும் செய்தியைத் தொடர்ந்து அ.தி.மு.க.வினர் வரிந்து கட்டிக்கொண்டு மாவட்டங்கள் தோறும் மக்களை நேரில் சென்று சந்தித்து கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். நடிகர் விஜயகாந்தும் மக்களை இழுப்பதில் புதுப்புது வடிவங்களில் நேரடியாகவே இறங்கியிருக்கிறார். தே.மு.தி.க. வட்டாரங்களில் இப்பொழுது அதிகமாக ஒலிக்கும் ""தனித்து வேண்டாம். கூட்டணிச் சிறப்பு' எனும் குரல் விஜயகாந்தை அதிகம் சோதிக்கவைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ, உள்ளே குமுறிக்கொண்டிருக்கும் சில முக்கியஸ்தர்களின் குறைகளைக் கூட கண்டுகொள்ளாமல் தினம் தினம் அறிக்கைகளை தலைவர் அள்ளிவீசுவது சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமன்றி தொண்டர்களின் மனதையும் புண்படுத்தி வருவதாக வெளிப்படையாகப் பேசுகின்றார்கள். பாட்டாளி மக்கள் கட்சியினரின் குறிப்பாக சில சட்டமன்ற அங்கத்தினர்களின் வயிற்றெரிச்சலை சரியாகப் புரிந்துகொண்ட தமிழக முதல்வர் கலைஞர் காதுகளுக்கு சில முக்கிய வரவுகள் காத்திருப்பதாகவும் தகவல் எட்டியிருக்கிறது. சில நாட்களை நகரவிட்டு, காலம் கனியட்டும் என்று பொறுமை காக்கின்றார் கலைஞர் என்று அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. கலைஞரின் காதுகளுக்கு "போனஸாக' நுழைந்திருக்கும் மற்றுமொரு புதுச்செதி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பச்சைக்கொடி தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணியில் இணைந்துவிடுவதென்ற உச்சக் கட்டமுடிவுக்கே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியினர் வந்துவிட்டதாக புதுச்செய்தி ஊர்ஜிதப்படுத்துகிறது.
அரசியலில் எத்தனை குத்துக்கரணங்கள் நிகழ்ந்தாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி 2011இல்தான் நடக்கும் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தாலும் இரண்டாயிரத்து ஒன்பதுக்கும் தயாராக நிற்கிறார் கலைஞர் கருணாநிதி. அதற்கான கணக்குகளையும் போட்டுமுடித்துவிட்டார். காற்றுள்ள போதே தூற்று என்பார்கள். தமிழ் நாட்டின் முக்கிய திசைகளில் மட்டுமன்றி காற்று டில்லியிலிருந்தும் சாதகமாக வீசுகிறது.தி.மு.க.வுக்கு.
மூச்சுவிட்டது "வணங்கா மண்'
அப்பாடா...! சென்னை துறைமுகத்துக்குள் அடியெடுத்துவைத்து, கடந்த வியாழக்கிழமை இரவு நிறுத்திவைக்கப்பட்ட "வணங்கா மண்'கப்பல் என்ன பாவம் செய்ததோ; உயிர் துடிக்கும் வன்னி மக்களுக்கு ஐரோப்பிய மக்களின் இதயத் துடிப்பாக உணவுப் பொருட்கள், மருந்துவகைகள், துணிகள் என்று வெறும் 884 தொன் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை சுமந்து கொண்டு இரண்டு மாதங்களாக கடலில் தத்தளித்த கொடுமை கணக்கிடமுடியாது! "கப்டன் அலி' என்ற "வணங்கா மண்' கப்பலின் கப்டன் முஸ்தபா முகமதுவை செய்தியாளர்கள் சந்தித்தபோது அவர் கூறியதாவது; ""கப்பலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெ, மருந்துப் பொருட்கள், உடுபுடவைகள் உட்பட பல நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இலங்கை சென்றோம். இலங்கை துறைமுகத்தின் வெளியே நான்கு நாட்கள் அவர்களது அனுமதிக்காக காத்திருந்தோம். கப்பலை சோதனை செய்த கடற்படையினர், சட்டவிரோதமாக எதுவுமே கண்டுபிடிக்காத நிலையிலும் இலங்கையிலிருந்து எழுபது கடல் மைல் தூரத்துக்கு கப்பலை எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டனர். இக்கப்பலில் உணவுப் பொருட்கள் உட்பட வெறும் நிவாரணப் பொருட்களே இருந்த நிலையில் ஏன் அதை அனுமதிக்கவில்லை என்பது புதிராகவே இருந்தது. நான் சிரிய நாட்டைச் சேர்ந்தவன். இரண்டு பேர் எகிப்தியர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டுபேர் பயணிகளாக உள்ளனர். வேறு யாரும் கப்பலில் இல்லை. நிவாரணப் பொருட்களை இலங்கைக்குக் கொண்டுசெல்லாதது பெரும் வருத்தமாக இருக்கிறது.' என்றார்.
நிவாரணப் பொருட்கள் பத்து "கண்டெனர்'களில் ஏற்றப்பட்டு இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றாலும் அங்கு போய்ச்சேர ஒருவார காலமெடுக்கும் என்று தெரிகிறது.
ஐம்பத்தாறு நாட்கள் கடலில் தத்தளித்த "வணங்காமண்' அந்த நாட்டினருக்கு அந்த உறவுகள் உயிர்த்த நிவாரணத்தை கடைசிவரை சுமந்து அந்தக் கரைசேர்க்க முடியாதுவிட்டாலும் அதன் பணி பூர்த்தியடைந்துவிட்டது. அந்த மண் என்ன பாவம் செய்ததோ. கரைதட்டி தலைகுனிய வணங்கா மண்ணினால் முடியவில்லை! வணங்கா முடி.
தமிழகத்திலிருந்து கே.ஜி.மகாதேவா
0 விமர்சனங்கள்:
Post a Comment