வவுனியாவில் கொள்ளையர்களினதும், முடிச்சுமாறிகளினதும் அட்டகாசம்
வவுனியா வேப்பங்குளத்தில் வீடொன்றிற்குச் சென்ற இருவர் முகாமிலிருந்து வந்திருப்பவர்கள் இருப்பதால் வீட்டைச் சோதனையிட வேண்டும் எனக்கூறி வீட்டினுள்ளே சென்று துப்பாக்கி முனையில் வீட்டாரைக் கட்டி வைத்துவிட்டு வீ{ட்டிலிருந்த பெறுமதிமிக்க தங்கநகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து முகாமில் தங்கியிருந்த வயோதிபர்களை அந்த வீட்டுக்காரர் சம்பவ தினமாகிய சனிக்கிழமையே அழைத்து வந்திருந்ததாகவும், அவ்வாறு முகாமிலிருந்து வந்திருந்தவர்கள் வசமிருந்த தங்க நகைகளே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
யுத்த மோதல்களில் உயிர்தப்பி பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்களிடமிருந்தே இந்த தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் இருவரே இந்தக் கொள்ளையை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வவுனியா சமளங்குளம் பகுதியில் இரவு நேரத்தில் வீடுகளுக்குச் சென்ற கோஸ்டியொன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஊர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிரண்டு வீடுகளில் இருந்தவர்கள் உஷாராகி கதவுகளைத் திறக்காததனால் கொள்ளையர்களின் கைவரிசை அங்கு வெற்றிபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததும், அமைதி ஏற்படும் என எதிர்பார்த்திருந்த பொதுமக்களுக்கு வவுனியாவில் ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாகவும், கொள்ளையர்களினதும், முடிச்சுமாறிகளினதும் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
0 விமர்சனங்கள்:
Post a Comment