"தமக்கு சகலதும் தெரியும் என்று நினைத்த இந்தியர்கள் படைவீரரின் இலக்கு ராஜீவ் அல்ல, ஜே.ஆர்.ஜெயவர்தனா'
இந்திய அமைதிகாக்கும் படையிடமிருந்த அபரிமிதமான நம்பிக்கையும் நிரம்பவும் அனுபவமும் பெற்ற இலங்கை இராணுவத்தின் உதவியை ஏற்றுக்கொள்ள விரும்பாமையுமே இலங்கையில் இந்திய அமைதிப் படையினரால் சமாதானத்தை நிலைநாட்டுவதில் வெற்றிகாண முடியாமல் போனதற்கான பிரதான காரணங்களில் ஒன்று என்று இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலத்தில் கூட்டுப் படைகளுக்கான கட்டளைத் தளபதியாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இருந்த ஜெனரல் சிறில் ரணதுங்க கூறியுள்ளார்.
தமக்கு சகலதும் தெரியும் என்று இந்தியர்கள் நினைத்தார்கள். ஆதலால் இலங்கை இராணுவத்திடமிருந்து அவர்கள் எந்த உதவியையும் பெற விரும்பவில்லை. எமது கள விபரம் மற்றும் புலனாய்வு தொடர்பாக எமது கருத்துகளை செவிமடுக்கவோ அல்லது கலந்தாலோசனை செய்யவோ அவர்கள் விரும்பியிருக்கவில்லை என்று அண்மையில் பிரசுரித்திருந்த "சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம், என்ற தனது நூலில் ஜெனரல் சிறில்ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இந்தியர்களின் முதலாவது கவசப் படையணி பயன்படுத்தப்பட்டபோது சில இயந்திரங்கள் புதைந்து விட்டன. ஏனெனில் அவர்கள் களநிலை யதார்த்தத்தை அறிந்திருக்கவில்லை. அவர்களிடம் இலங்கையின் நவீன வரைபடங்களும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் புலிகள் வீதிகளின் பெயர்ப் பலகைகளை மாற்றியிருந்தனர். அதனால் இந்திய இராணுவம் தவறான பாதைகளில் செல்ல நேரிட்டது என்றும் ரணதுங்க நினைவுகூருகிறார்.
இந்திய அமைதிகாக்கும் படையை இலங்கைக்கு வரவழைத்தமை இலங்கையின் இறைமை மீதான ஆக்கிரமிப்பு என்று அதற்கு உறுதியான எதிர்ப்பை அவர் வெளியிட்டிருந்தாலும் இந்திய இராணுவத்தின் அனுசரணையுடனான தமிழ் தேசிய இராணுவத்துடனும் போராடுவதற்காக ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தமை தொடர்பாக சிறில் ரணதுங்க அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார். புலிகளுக்கு நீங்கள் எவ்வாறு ஆயுதங்களைக் கொடுக்க முடியும்? புலிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய சமாதானப் படையினர் என்ன மாதிரி? இந்தியா என்ன மாதிரி? என்று பிரேமதாஸவை அவர் கேட்டிருந்தார்.
"இதற்கு நான் தீர்வு காண்பேன்' அவர்கள் (புலிகள்) எம்முடன் இந்த ஆயுதங்களுடன் ஒருபோதும் சண்டை போடமாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளனர். இந்திய சமாதானப்படை உருவாக்கிய தமிழ்த் தேசிய இராணுவத்துடன் சண்டையிடவே இந்த ஆயுதங்களைக் கொடுத்துள்ளேன் என்று ஜனாதிபதி (பிரேமதாஸ) பதிலளித்துள்ளார்.
நீங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறீர்கள். அவர்களுடன் சண்டையிடுவதில் எனது வாழ்வு விரயமாக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இதனை நிறுத்துங்கள் என்று ஜெனரல் சிறில் ரணதுங்க திரும்பக் கூறியுள்ளார். "இப்போது இதனை மாற்ற முடியாது' என்று விசனமடைந்த பிரமேதாஸ கூறியுள்ளார். "இதனைக் கூறுவது எனது கடமை. தீர்மானம் எடுப்பது உங்களின் சிறப்புரிமை' என்று சாந்தமடைந்த ரணதுங்க உறுதியாகக் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய சமாதானப் படையை வாபஸ் பெறுமாறு கூறியது ஜனாதிபதி பிரேமதாஸ இழைத்த தவறு என்று ஜெனரல் ரணதுங்க கருதியுள்ளார். மார்ச் 1990 இல் தமது இலக்கை நிறைவேற்றாமல் இந்தியர்கள் வெளியேறினர்.
1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது, கடற்படைவீரர் ஒருவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கழுத்தின் பின்பகுதியில் இலக்கு வைத்துத் தாக்கியமை குறித்து மறைமுகமாகத் தெரிவித்திருக்கும் ஜெனரல் ரணதுங்க, அந்த இலக்கு ராஜீவ் மீதானது அல்ல என்றும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா மீதான இலக்கே என்றும் குறிப்பாக வெளிப்படுத்தியுள்ளார் என்று எக்ஸ்பிரஸ் புஷ்ஷில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment