ஜாக்ஸன்… சற்று விலகியே நின்ற ஒபாமா!
அமெரிக்க அதிபர் ஒபாமா, பாப் இசை மன்னர் மைக்கேல் ஜாக்ஸன்… இருவருமே உலகின் மிகப் புகழ்பெற்ற ஆப்பிரிக்க அமெரிக்கர்கள். ஆனால் ஒருவருக்கொருவர் முடிந்தவரை விலகியே நின்றுள்ளனர். மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோதும் சரி, அவரது இறுதிச் சடங்குகள் நடந்த போதும் சரி ஒபாமா அவற்றில் பங்கேற்கவில்லை. முடிந்தவரை வெகு தூரத்தில் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டார். குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த மைக்கேல் ஜாக்ஸன் இறுதி அஞ்சலி நிகழ்வில் உலகின் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் விவிஐபிக்கள் பங்கேற்றனர். ஆனால் அன்றைக்கு ஒபாமா ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருந்தார். உலகின் தன்னிகரில்லாத இசைக் கலைஞரான ஜாக்ஸன் இறந்ததற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ இரங்கல் அறிக்கைகூட வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒபாமா தனிப்பட்ட முறையில் ஜாக்ஸன் குடும்பத்துடன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொண்டதாக வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜாக்ஸன் மரணம் குறித்து ஒபாமாவிடம் நிருபர்கள் திரும்பத் திரும்ப கேட்டபோது, அவர் மிக எச்சரிக்கையுடன் வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஜாக்ஸன் மிகத் திறமையானவர். அவரது அபார திறமை மற்றும் இசை, அளவற்ற துன்பம் மற்றும் கஷ்டங்களுடன் கலந்தே இருந்தது, என்றார் ஒபாமா. ஆனால் அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், செனட்டர்கள் ஜாக்ஸனை கடுமையாக விமர்சித்தனர். சிலர் புகழ்ந்து பேசினர். ஆனால் இம்மாதிரி விவாதங்களில் தனது பெயர் இடம்பெறுவதை ஒபாமா விரும்பவில்லை. அதனால் தான் கொஞ்சமாகப் பேசி, மற்றவற்றை மக்களே பேசட்டும் என்று விட்டுவிட்டார் போலும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment