இரு குழுக்களுக்கிடையில் மோதல் தமிழ் இளைஞன் உயிரிழப்பு - ரொரண்டோ நகரில் சம்பவம்
கனடிய ரொரண்டோ நகரில் வார இறுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் தமிழ் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் திங்கட்கிழமை அறிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை பேஸ்போல் மற்றும் கிரிக்கெட் மட்டைகள் மற்றும் பியர் போத்தல்கள் சகிதம் வந்த குழுவினர் கிறிஸ்டியன் தனபாலன் என்ற மேற்படி இளைஞனை சரமாரியாக தாக்கியதாகவும், தலையில் ஏற்பட்ட ஆழமான காயத்தாலேயே அவர் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பில் ரொரன்டோ உத்தியோகத்தர் சவால் கைரியகொயு விபரிக்கையில், சம்பவ தினம் இரவு கிறிஸ்டியனும் அவரது நண்பர்களும் பாடசாலையொன்றிலிருந்த வெளியில் வொலிபோல் விளையாடுவதில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் விளையாடிய இடத்துக்கு அண்மையில் 11 பேர் முதல் 20 பேரைக் கொண்ட இளைஞர் குழுவொன்று விளையாட்டில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு 11 மணியளவில் விளக்குகள் அணைக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்த வேளை இரு தரப்பு குழுக்களுக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே படுகொலையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இரண்டாவது குழுவைச் சேர்ந்தவர்கள் தனபாலனையும் அவரது நண்பர்களையும் சூழ்ந்து தாக்க ஆரம்பித்ததாகவும் இதன் போது சிலர் தப்பிச் சென்றதாகவும் சிலர் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். எனினும், இப்படுகொலைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
கனடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் டேவிட் பூபாலப்பிள்ளை, தனபாலனின் மறைவு குறித்து அனுதாபத்தை தெரிவித்துள்ளார். தாய் நாடான இலங்கையில் அரசியல் பதற்றநிலை நிலவி வருகின்ற நிலையில், இத்தகைய வன்முறைகள் தமிழ் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என அவர் கூறினார்.
இணையதள செய்திகள்
0 விமர்சனங்கள்:
Post a Comment