பிரான்ஸில் நடந்தது என்ன?? புலிகளுக்கு வக்காலத்து வாங்கும் தமிழ்வின் இணையதளத்தில் மீண்டுமொரு பொய்யான செய்தி அம்பலத்திற்கு வருகின்றது..!
புலிகளின் தமிழ்வின் இணையமானது நேற்று வெளியிட்டிருந்த தனது செய்தியில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லாச்சப்பல் பகுதியில் நேற்று முன்தினம் ஈ.பி.டி.பி, புளொட் ஆகிய துணை இராணுவக் குழுக்களால் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனின் வீரமக்கள் தின சுவரொட்டி ஒட்டியிருந்ததாகவும், அதனைக் கிழிந்தெறிந்த வர்த்தகர்களிடம் பலாத்காரமாக தண்டப்பணம் பெறப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
இது குறித்து அதிரடி இணையத்திற்கு பிரான்ஸிலிருந்து கிடைக்கப் பெற்ற உண்மைத் தகவல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சனிக்கிழமை காலையில் புளொட் ஆதரவாளர்கள் மற்றும் புளொட் உறுப்பினர்களால் பாரிஸ் லாச்சப்பல் பகுதியிலுள்ள பல்வேறு இடங்களிலும், அங்குள்ள வர்த்தக ஸ்தாபனங்களின் விளம்பரப் பலகைகளிலும் வீரமக்கள்தின சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்திருந்தன. இதேபோன்று கீர்த்திகா டெக்ஸ்டைல்ஸ் என்னும் வர்த்தக ஸ்தாபனத்தின் விளம்பரப் பலகையிலும் வீரமக்கள்தின சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. நேற்றுக்காலை அங்கு சென்றிருந்த புலி உறுப்பினர்களும், கடை உரிமையாளரும் மேற்படி சுவரொட்டிகளை மக்கள் மத்தியில் வைத்து கிழித்தெறிந்துள்ளனர். இதனைக் கண்ணுற்ற பொதுமக்கள் சிலர், இவை அஞ்சலி சுவரொட்டிகள் தானே இவற்றை ஏன் கிழித்தெறிகிறீர்கள்? என்று வினவிய போது அங்கிருந்த புலிகள் மற்றும் புலிசார்பு வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு குழுமிய தமிழ் இளைஞர் குழுக்கள் அஞ்சலி சுவரொட்டிகளை கிழித்தமை தொடர்பில் புலிகளிடமும் வர்த்தகர்களிடமும் வினாவெழுப்பியுள்ளனர்;. அப்போது புலிகளைத் தவிர ஏனைய எவருமே எங்கும் எதுவும் செய்யவிடப் போவதில்லை. அப்படி எதனையுமே செய்யவும் கூடாதென்றும் புலிகளும் புலிகளுடன் நின்ற சில வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு குழுமிய தமிழ்இளைஞர்கள் மற்றும் அவ்வழியே வந்த நிலையில் நியாயம் கேட்ட தமிழ்இளைஞர்களும் இணைந்து அங்கு பெருந்தொகையான அடியாட்களான புலிஇளைஞர்களுடன் வருகை தந்த புலிகளின் பிரான்ஸ் பொறுப்பாளர்களில் இருவரான சீலன், ஸ்ரீனிவாசன், மற்றும் புலியாதரவு வர்த்தகர் ஆகியோருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.
அங்கு குழுமியிருந்த தமிழ் இளைஞர் குழுக்களுக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இளைஞர் குழுக்களுடன் காணப்பட்ட சிங்கள இளைஞர்களை குறிப்பிட்டு நாங்கள் தமிழர்கள் என புலிகளும், வர்த்தகர்கள் சிலரும் இனத்துவேசம் அடங்கிய வசனங்களைப் பிரயோகித்த போது சிங்கள இளைஞர்களும் உள்ளடங்கிய இக்குழுவினர் நாங்கள் இலங்கையர்கள், எம்மை 23வருடங்களாக வன்னியிலும், வெளிநாடுகளிலும் அடக்கி ஆண்டது போதும் இனிமேலும் உங்கள் அடக்குமுறைகளைக் கண்டு அமைதியாக செல்ல மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். அத்தோடு இதுவரை காலமும் பொதுமக்களிடம் அநியாயமாக வரி கப்பமென அறவிட்ட புலிகளாகிய நீங்கள் இனிமேலும் நியாயமற்ற முறையில் நடந்தால் பொறுமை காக்க மாட்டோமெனத் தெரிவித்ததையடுத்து ஏற்பட்ட முறுகலினால் இளைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் புலிகளினால் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இளைஞர்குழுவினால் புலிகளின் பொறுப்பாளர் ஸ்ரீனிவாசன், உட்பட சில புலிஇளைஞர்கள் திருப்பித் தாக்கப்பட்டு ஸ்ரீனிவாசன் சட்டை கிழிக்கப்பட்டார்.
சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பிரான்ஸ் பொலீசாரினால் புலி உறுப்பினர்கள் ஜவரும், லாச்சப்பல் வர்த்தகர் சங்கத்தின் உபதலைவரான கோபால் அன் கோ உரிமையாளர்களில் ஒருவரான ரவி என்பரும், கீர்த்திகா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும் மற்றும் தமிழ் இளைஞர் குழுவைச் சேர்ந்த நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர மேலும் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பிந்திக்கிடைத்த செய்திகளின்படி புலிகளின் ஈழநாடு ஆசிரியர் பாலச்சந்திரன் உட்பட புலிகளால் இன்றுமதியம் வர்த்தக சங்கக் கூட்டத்தை அவசரமாக கூட்டும்படி பகிரங்கமாக விடுத்த அழைப்பானது பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தமிழ்இளைஞர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று லாச்சப்பலின் பெரும்பான்மையான வர்த்தகர்களினால் நிராகரிக்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
தாமாக முன்வந்து நியாயம் கேட்ட பொதுமக்கள் மற்றும் தமிழ் இளைஞர் குழுக்களுக்கும் பிரான்ஸ் புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையே இதுவாகும். இந்நிலையில் புளொட், ஈ.பி.டி.பியினை சேர்ந்தவர்களாலேயே இது நடத்தப்பட்டதாக தமிழ்வின் இணையதளம் உள்ளிட்ட புலிகளின் இணையதளங்கள் விசமப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இதற்கும் தமிழ் அமைப்புக்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பது தெரிய வந்துள்ளது. தமிழ்வின் இணையம் இவ்வாறான பொய்யான செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றமை வழமையே. எனினும் விறுவிறுப்பான செய்திகள், உடனுக்குடன் செய்திகள் என்ற பெயரில் இவ்வாறான விசமப் பிரச்சாரங்களை மேற்கொள்வதால் எந்த நேரமும் இதன் செய்திகளை நம்பிக் கொண்டிருக்க மக்கள் ஒன்றும் முட்டாள்களல்ல என்ற விடயம் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகின்றது.
Thanks…. www.athirady.com
0 விமர்சனங்கள்:
Post a Comment