தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமார் குடும்பத்தின் பரிதாப நிலை!
கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தின் அரசியல் மேடைகளில் ஓங்கி ஒலித்த பெயர் முத்துக்குமார்! இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தவர். ஊர்ப்பிரச்சினைக்காக உயிரைக் கொடுத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள்?
கொளத்தூரில் உள்ள முத்துக்குமாரின் வீடு. அவர் தற்கொலை செய்து கொண்ட ஜனவரி 29 அன்று ஊடுருவிய அமைதி இன்னும் அந்த வீட்டில் கலையவில்லை. முத்துக்குமாரின் தங்கை தமிழரசியின் முகம் துக்கத்தில் நிரந்தரமாய் உறைந்திருக்கிறது.
துயரம் வார்த்தைகளைத் தடுமாற வைத்தாலும், அண்ணன் பாசம் தமிழரசியைப் பேச வைத்துவிடுகிறது. “அண்ணனோட முடிவு எங்களுக்கு தீராத வேதனைதான். ஆனால், ஊருக்காகத்தானே இப்படி செஞ்சிருக்கான்னு நெனச்சு, ஆறுதல் பட்டுக்குவேன். ‘எனக்கு நீ மட்டும் சகோதரி கிடையாது. உன்னைப்போல நிறைய அக்கா, தங்கச்சிங்க எனக்கு இருக்காங்க’னு அடிக்கடி சொல்வான். எப்பவும் அவன் மனசுல ஈழத்தமிழர்களின் கஷ்டம்தான் இருந்தது. ஆனால் அவன் தீக்குளிச்சும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு கிடைக்கல” என்கிறார் தமிழரசி.
இவரது கணவர் கருகவேலுக்கு ட்ரை சைக்கிளில் ஐஸ்க்கிரீம் விற்கும் வேலை. சீசன் இல்லாத நேரங்களில் பழைய இரும்பு வாங்கி விற்கும் வியாபாரமும் செய்கிறார். சங்கிலி கட்டிய தண்ணீர் டம்ளர் போல வருமானம் மிக அளவாக இருந்தாலும், தமிழக அரசு அறிவித்த இரண்டு லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை இந்தக் குடும்பம் மறுத்தது யாரும் துணியாத விஷயம். “இலங்கைத தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவங்க ரொம்ப வற்புறுத்தி, மூணு லட்ச ரூபாய் கொடுத்தாங்க. அவங்களோட வலியுறுத்தலை ஓரளவுக்கு மேல் மீற முடியலை. அறிமுகம் இல்லாதவங்க சிலர் திடீர்னு வந்து, யாராவது ஒரு தலைவர் பேரைச் சொல்லி, நிதி உதவி வாங்கித் தர்றதா சொல்றாங்க. ‘உங்களுக்குப் பாதி, எங்களுக்குப் பாதினு கூசாம பேரம் பேசுறாங்க. பேச்சின் முதல் நிமிஷத்திலேயே இந்த ஆளுங்களோட நோக்கம் தெளிவா தெரிஞ்சிடுது. பெரிசா கும்படு போட்டு அவங்களை அனுப்பிடுவோம். இதெல்லாம் கஷ்டமா இருக்கு. முத்துக்குமார் உயிரோடு இருந்தப்போ, வீடு வரைக்கும் வந்த நண்பர்கள் அவர் இறந்த பிறகு சம்பிரதாயத்துக்குக் கூட ஆறுதல் சொல்ல வீட்டுக்கு வரலை” என வேதனையோடு சொல்கிறார் தமிழரசி.
நன்றி: குமுதம்
ஒரு குறிப்பு: புலம்பெயர் நாடுகளில் சுமார் 10 லட்சம் இலங்கைத் தமிழர்கள் வாய்ப்பு வசதிகளுடன் வாழ்கிறார்கள். புலிகள் ஆயுதங்கள் வாங்கவும், ஆடம்பரமாக வாழவும் பணத்தை டொலர்களிலும், ஈரோக்களிலும் அள்ளிக் கொடுத்த அவர்கள், தமக்காக தன் இன்னுயிரை இழந்த முத்துக்குமாரின் குடும்பத்துக்கு உதவினால் என்ன? அல்லது வெளிநாடுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை வைத்திருக்கும் (இப்பொழுது அதைச் சொந்தமாக்குவதற்காக குடுமிச் சண்டையில் ஈடுபட்டிருக்கும்) புலிப் பினாமிகள் உதவினால் என்ன? அல்லது முத்துக்குமாரை தமது அரசியல் சுயலாபத்துக்காக பகடைக் காயாக்கி, உயிர் துறக்க வைத்து, இலாபம் சம்பாதித்த வை.கோ, ராமதாசு, திருமாவளவன், நெடுமாறன் கொம்பனி உதவினால் என்ன?
இந்தக் கேள்வியை நேர்மையான ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டும்.
Thenee.com
0 விமர்சனங்கள்:
Post a Comment