அநுராதபுர தாக்குதல் காணொளிக் காட்சிகள், கிளிநொச்சிக்கு நேரலையாக அனுப்பப்பட்டன - நீதிமன்றத்தில் அறிக்கை
அநுராதபுர வான்படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்திய போது, அதன் காணொளிக் காட்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் கிளிநொச்சியிலிருந்து நேரலையாக பார்வையிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
2007ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட அநுராதபுர வான்படைத் தளம் மீதான தாக்குதல் வழக்கு இன்று (28) அநுராதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது, அநுராதபுரம் வான்படைத் தளத் தாக்குதலின் சூத்திரதாரியெனக் கூறி, காவல்துறையினர் கைதுசெய்த
இளைஞனையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தகவலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,
'அநுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உட்பட முக்கிய தளபதிகள் அதேநேரத்திலேயே பார்க்கக்கூடியவாறு காணொளிக் காட்சிகள் நேரலையாக அனுப்பப்பட்டுள்ளன. குறித்த இளைஞன் வான்படைத் தளத்துக்கு வெளியே நின்று தாக்குதலை வழிநடத்தியதுடன், தாக்குதல் தொடங்கிய நேரம் முதல் இறுதிவரையில் காணொளி காட்சிகளை கிளிநொச்சிக்கு நேரலையாக அனுப்பியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதல் நடவடிக்கையில் 24 பேர் பங்கேற்றுள்ளதாகக் கூறிய புலனாய்வுப் பிரிவினர், இதில் 21 பேர் முகாமுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் ஏனைய மூவரும் முகாமுக்கு வெளியே நின்று தாக்குதலை வழிநடத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
தாக்குதலுக்காக நவீன ரக ஆயுதங்களும், 8 ஆயிரம் சுற்று துப்பாக்கி ரவைகளும் வில்பத்து காட்டின் ஊடாகக் கடத்தி வரப்பட்டமை விசாரணைகளின்மூலம் தெரியவந்திருப்பதாகவும் தகவலளித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் வானூர்திகள், அநுராதபுரம் வான்படைத் தளத்தை நோக்கி வருவதற்கான வழிகாட்டல்களை பிரதான சந்தேக நபர்களே வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டனர்.
தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்காக பிரதான சந்தேக நபருக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர், லெப். கேணல் பதவியை வழங்கி கௌரவித்ததாகவும் நீதிமன்றத்தில் தகவலளித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment