84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற நபர் மரணம்.
கென்யாவின் அதி வயதான மாணவரான கிமானி நகங்கா மாருஜ் (Kimani Nganga Maruge), தனது 90 ஆவது வயதில் மரணமானார். அவர் தனது 84 ஆவது வயதில் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் உலகிலேயே மிக வயதான நபர் என “கின்னஸ்’ உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கடந்த வருடம் தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளையடுத்து றிப்ட் பள்ளத்தாக்கிலுள்ள அவரது வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டதை தொடர்ந்து அவர், தலைநகர் நைரோபியிலுள்ள வயோதிபர் இல்ல முகாம் ஒன்றை தஞ்சமடைந்தார். சுதந்திர இயக்க படைவீரரான கிமானி, இள வயதாக இருக்கும்போது பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பை ஒருபோதும் பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில் 5 பிள்ளைகளின் தந்தையான அவர், வேதாகமத்தை சுயமாக வாசிக்க கற்றுக் கொள்ள விரும்பினார். அத்துடன் தனக்குரிய ஓய்வூதிய பணம் சரியாக வழங்கப்படவில்லை என சந்தேகம் கொண்டிருந்ததால், கணித அறிவும் தனக்குத் தேவை எனக் கருதினார். இதனையடுத்து 2004 ஆம் ஆண்டு எல்டோரெட் நகரிலுள்ள கப் கென்டுயவா ஆரம்ப பாடசாலையில் இணைந்து கொண்டார். கென்ய அரசாங்கம் இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தி ஒரு ஆண்டிலேயே கிமானியின் இந்தப் பாடசாலைப் பிரவேசம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கிமானியின் 30 பேரப்பிள்ளைகளில் இருவர் மேற்படி பாடசாலையில் கல்வி கற்று வந்தனர். இந் நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் கிமானிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் மனம் தளராது கல்வியை தொடர விரும்பிய கிமானி, தனது வீட்டுக்கு வந்து கற்பிக்கும்படி ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
2005 ஆம் ஆண்டில் வறிய நாடுகளினான கல்விக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தி அமெரிக்காவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில், உலகத் தலைவர்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் கௌரவத்தை கிமானி பெற்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment