பிரிவை தவிர்க்க (சுவிஸ்) யாழ்ப்பாணக் காதலர்கள் போட்ட நாடகத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு !
வெளிநாட்டுக்கு விமானம் ஏற இருந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்களை வாலிபர் ஒருவர் திடீரென பறித்துச் சென்றது சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரிய மனமில்லாத காதலர்கள் நடத்திய நாடகம் என பின்னர் தெரிய வந்தது.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர். மனைவி அமலா ராணி (45), மகன் சுதாகர் (23), மகள் விஜிதா (19) ஆகியோருடன் வசித்து வருகிறார். சுவிட்சர்லாந்தில் நர்சரி பள்ளி ஆசிரியையாக விஜிதா பணியாற்றுகிறார். பிள்ளைகளுடன் அமலா ஒரு மாதம் முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். சென்னை போரூரில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அதே பகுதியில் வசிப்பவர் பிரேம்குமார் (24). சென்னையில் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஒரே நாட்டினர் என்பதால் பிரேம்குமாரும் விஜிதாவும் நண்பர்களாக பழகினர். நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவகாரம் பெற்றோருக்கு தெரியாது. இந்நிலையில், மீண்டும் சுவிஸ் திரும்ப குடும்பத்தினர் முடிவு செய்தனர். காதலனை பிரிந்து செல்ல விஜிதாவுக்கும் மனமில்லை. வேறு வழியின்றி அண்ணன், தாயுடன் புறப்பட்டார். அவர்களுடன் இன்று காலை 7.30-க்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். 9.45-க்கு துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில் அவர்கள் ஏற வேண்டும். காதலன் பிரேம்குமாருக்கும் இதே நிலை. விஜிதாவின் பயணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று முடிவு செய்தார். 2 நண்பர்களை துணைக்கு அழைத்து, காலையிலேயே விமான நிலையம் வந்தார். பார்வையாளர் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே காத்திருந்தார். சிறிது நேரத்தில் அமலா, விஜிதா, சுதாகர் ஆகியோர் விமான நிலையத்துக்குள் வந்தனர். பாஸ்போர்ட் சோதனைக்காக அவற்றுடன் குடியுரிமை பிரிவுக்குள் அமலா செல்ல முயன்றார். காத்திருந்த பிரேம்குமார் திடீரென ஓடிவந்தார். அமலாவிடம் இருந்து பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு ஓடினார். இதை எதிர்பார்க்காத அமலா, “திருடன் திருடன்” என்று கத்தினார். சுதாகரும் சத்தம் போட்டார்.
அருகே இருந்தவர்கள் ஓடி வந்து, பிரேம்குமாரை சுற்றி வளைத்து நைய புடைத்தனர். கூட்டத்துக்குள் விஜிதா பாய்ந்து, பிரேம் மீது அடி விழாமல் தடுத்தார். “பிரேமை காதலிக்கிறேன். அம்மாவுடன் சுவிட்சர்லாந்துக்கு செல்ல விருப்பம் இல்லை. என் பயணத்தை தடுக்கத்தான் காதலரை வரவழைத்து இவ்வாறு செய்தேன்” என்றார். இதை கேட்டதும் அவரது தாய், அண்ணன் மற்றும் பயணிகள், அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். புகார் கொடுக்க விரும்பவில்லை என்று அமலா கூறியதால் அவர்கள் திரும்பிச் சென்றனர். சுவிட்சர்லாந்து போகலாம் என்று கூறி விஜிதாவை அமலாவும் சுதாகரும் சமாதானப்படுத்த முயன்றனர். அவர் கேட்கவில்லை. “பொது இடத்தில் வைத்து எங்களை அவமானப்படுத்தினால் இங்கேயே விஷம் குடித்து சாவோம்” என்று கதறினர். தற்கொலை செய்வேன் என்று பிரேம் கூறினார். “திட்டமிட்டபடி சுவிஸ் போகலாம். முறைப்படி பிரேம்குமார் வீட்டில் பேசி அவரையே திருமணம் செய்து வைக்கிறேன்” என்று அமலா கூறினார்.
முக்கால் மணி போராட்டத்துக்கு பிறகு இதை விஜிதாவும் பிரேமும் ஏற்றுக் கொண்டனர். மனதை தேற்றிக் கொண்ட விஜிதா, பிரேமிடம் கண்ணீருடன் விடைபெற்று சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டார். 9.45-க்கு விமானம் புறப்பட்டு செல்லும் வரை காத்திருந்து பின்னர் சோகத்துடன் புறப்பட்டார் பிரேம். பிரிய மனமில்லாத காதலர்கள் அரங்கேற்றிய நாடகம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






0 விமர்சனங்கள்:
Post a Comment