பிரபாகரனும் கேபியும் துரேயா செய்மதி தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்

விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் அதன் தலைவருமான கே.பி என அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன், துரேயா என்ற செய்மதி தொலைபேசி ஊடாக மேற்கொண்ட அழைப்பொன்றை அடுத்தே அவர் இருக்கும் இடத்தை சர்வதேச காவற்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டதாக உயர்மட்டத் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் , செல்வராஜா பத்மநாதனும் துரேயா என்ற மலேசிய செய்மதி தொலைபேசிக் கட்டமைப்புடன் சம்பந்தப்பட்ட செய்மதி தொலைபேசிகளையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
மலேசியாவில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்மநாதனை சந்திப்பதற்காக புலிகளின் பிரித்தானிய பிரதிநிதிகளான சரவணன் மற்றும் விஸ்வம் ஆகிய இரண்டு பிரநிதிகள் அந்த விடுதிக்கு சென்றதாகவும் அவர்கள் சென்று 10 நிமிடங்களின் பத்மநாதனுக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்ததாகவும் அதனை அடுத்து அவர் அந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதற்காக விடுதிக்கு வெளியில் சென்றுள்ளதாகவும் இதன் போது இண்டர்போல் காவற்துறையினர் அவரை கைதுசெய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரன் பத்மநாதன் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள ரியூன் என்ற நட்சத்திர விடுதியில் இருந்தவாறே தனது அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த அவரை சந்திப்பதற்காக சென்றவர்கள் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மகன் மற்றும் சகோதர்களே அவரை சந்தித்த சென்றுள்ளனர். இவர்கள் பிரபாகரன் கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே மலேசியாவுக்கு சென்றுள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்த பத்மநாதனிடம் அப்போது புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்த கருணா, பிரபாகரன் கொடுத்த 424 ஆயுதங்கள் தொடர்பான பட்டியலை பத்மநாதனிடம் வழங்கியுள்ளார். சர்வதேச காவற்துறையினர் மற்றும் இந்திய புலனாய்வுத்துறையினரால் கே.பிக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள கே.பி. பல நாடுகளின் ஆயுத முகவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கேபி கைது விசாரணை நடத்த தாய்லாந்து அரசு உத்தரவு:
கேபி கடத்திக் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இலங்கை அரசு அவரை தாய்லாந்தில் வைத்து இண்டர்போல் கைது செய்ததாக தெரிவித்திருந்த சூழலில் உண்மையில் அவர் மலேஷியாவில் வைத்தே கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இது குறித்து கேபி தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அபிசித் வெஜ்ஜஜிவா கூறியுள்ளார். கேபி பாங்காக்கில் கைது செய்ததாக இலங்கை அரசு வெளியிட்ட செய்தியையும் அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேபி கைது குறித்து எனக்கு நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அனைத்து விவரங்களையும் எனக்கு அளிக்குமாறு பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார். தாய்லாந்து அரசின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் பானிடன் வட்டநாயக்கோன் கூறுகையில், முதலில் கிடைத்த செய்திகளின்படி தாய்லாந்துக்குள் கேபி அவ்வப்போது சென்றதாக தெரிகிறது.
இருப்பினும் அவர் தாய்லாந்துக்குள் வைத்துக் கைது செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.தாய்லாந்துப் பெண்ணைத்தான் கேபி மணந்துள்ளார். தாய்லாந்தின் வட பகுதியில் அவர் வசித்து வந்தார் என்றார்.தாய்லாந்து சிறப்புப் போலீஸ் பிரிவு தலைவர் தீரதேஜ் ரோட்போட்டாங் கூறுகையில், உண்மையில் சிங்கப்பூரில் வைத்துத்தான் கேபி கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் அவர் கைதாகவில்லை. கேபியின் மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி விட்டன. ஆனால் அவர் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம் என்றார்.
கனேடிய தமிழ் காங்கிரஸ் வருடாந்தம் 80 மில்லியன் டொலர்களை வழங்கியது – கே.பீ இண்டர்போல் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளதாக திவயின கூறுகிறது:
விடுதலைப்புலிகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கனேடிய தமிழ் காங்கிரஸ் வருடாந்தம் 80 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக செல்வராஜா பத்மநாதன் இண்டர்போல் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது. கனேடிய புலனாய்வு பிரிவினர் தமிழ் காங்கிரஸ் தொடர்பான ஆவணங்களை சர்தேச காவற்துறையினரிடம் கையளித்துள்ளனர். இவர்கள் கையளித்த ஆவணங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் கே.பி ஆகியோரின் கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணங்களும் அடங்குகின்றன.
கனடாவில் இருந்து இந்த பணம் மலேசியாவில் உள்ள வங்கிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வங்கிகள் குறித்த தகவல்களையும் இண்டர்போல் காவற்துறையினர் அறிந்து கொண்டுள்ளதாகவும் திவயின கூறியுள்ளது. படையினர் கைப்பற்றிய ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை, ரஷ்ய ஆயுத வர்த்தகரான விக்டர் டாவூட், பத்மநாதனுக்கு வழங்கியுள்ளதாகவும் இண்டர்போல் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நேரடியான தகவல் பரிமாற்றங்களின் பலனாகவே கே.பி கைது ‐ கோத்தபாய ராஜபக்ஷ:
சம்பந்தப்பட்ட நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நேரடியான தகவல் பரிமாற்றங்களின் பலனாகவே விடுதலைப்புலிகளின் தலைவர் என கூறிக்கொண்ட கே.பி என்ற குமரன் செல்வராஜா பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கே.பி. கைதுசெய்யபடும் போது குறித்த நாட்டில் இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் தரப்புகளின் அதிகாரிகள் மாத்திரமே இருந்தனர் எனவும் இதன் பின்னர் அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.
கே.பியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சர்வதேச ஆயுத வர்த்தக வலையமைப்பு உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளுடன் தன்னுடன் நெருங்கி செயற்பட்ட அவரின் நண்பர்கள் குறித்த தகவல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.
இதனால் அவர் கைதுசெய்யப்பட்ட நாடு குறித்து சரியான தகவல்களை வெளியிட முடியாதுள்ளது. கே.பி. தொடர்பில் இலங்கையின் சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவோ வேறு எந்த நாடோ கே.பியை வழங்குமாறு கோரவில்லை. கே.பி.கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை புலனாய்வு துறையினர் பணிகளை தாம் பாராட்டுவதாகவும் கோத்தபாய ராஜபக்ஷ தெரரிவித்துள்ளார்.
இலங்கையில் குறைவான எண்ணிக்கையிலானவர்களே கே.பியுடன் தொடர்புகளை கொண்டுள்ளதாகவும், எனினும் வெளிநாடுகளில் கே.பி.யுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் பல நாடுகளில் பரந்துள்ளனர் எனவும் கே.பி. வழங்கும் தகவல்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கைதுசெய்வதற்கான வழியேற்படும் என்றும் கோத்தபாய கூறியுள்ளார்.
கே.பி. தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் புலனாய்வுப் பிரிவின் குழுவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார். அவர் வெளியிடும் தகவல்கள் விசாரணைகளுக்கு தடையேற்படாத வகையில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான செல்வராஜா பத்மநாதனை கைதுசெய்வதற்கு உதவுமாறு வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களிடம் இலங்கை விடுத்த வேண்டுகோள் காரணமாகவே அவர் துரிதமாக கைதுசெய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தாம் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, கே.பியை கைதுசெய்ய உதவுமாறு பிற நாடுகளை சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் முக்கியமாக சிங்கபூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றின் போது, கே.பி. மறைந்துள்ளதாக கூறப்பட்ட மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களிடம் அவரை கைதுசெய்ய உதவுமாறு தான் கோரிக்கை விடுத்திருந்தாகவும் போகொல்லாகம தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கே.பியை கைதுசெய்ய உதவிய அனைத்து நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத அமைப்பொன்றின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னரோ, அவர் கைதுசெய்யப்பட்ட பின்னரோ, அந்த அமைப்பு வீழ்ச்சியடையும் எனவும் ரோஹித்த போகொல்லாகம கூறியுள்ளார்.
globaltamilnews.






0 விமர்சனங்கள்:
Post a Comment