ஆயுதப் போராட்டங்களின் விளைவு புகட்டும் பாடம்
ஆயுதம் ஏந்திய யுகம் முடிந்து விட்டது என்றும் இனிமேல் இந்நாட்டில் எவரும் ஆயுதத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறியிருப்பது காலத்துக்கு மிகவும் பொருத்தமான கூற்று. இக்கருத்தைப் போலவே இதை அவர் தெரிவித்திருக்கும் சந்தர்ப்பமும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மடுத்திருப்பதியின் திருவிழாத் திருப்பலியில் மறையுரை ஆற்றிய போதே பேராயர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
பேராயர் தெரிவித்த கருத்தையொட்டிய நம்பிக்கை நாட்டு மக்களிடம் ஏற்படக்கூடிய விதத்தில் மடுத்திருப்பதியின் திருவிழா நடந்திருக்கின்றது. மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இன பேதமின்றி ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மடுத்திருப்பதி உற்சவத்தில் பங்கு பற்றினார்கள்.
ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்து இன, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஐக்கியத்துடன் வாழும் ஒரு காலத்துக்குக் கட்டியம் கூறுவதாக இத் திருவிழா அமைந்திருந்தது.
ஆயுதப் போராட்டம் மடுத்திருப்பதியின் வருடாந்த உற்சவம் சீராக நடைபெறுவதற்கு இடமளிக்காதது மாத்திரமன்றி, மடுமாதாவின் திருவுருவத்தைப் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தையும் கடந்த வருடம் தோற்று வித்தது.
ஆயுதக் கலாசாரத்தால் இலங்கையில் ஏற்பட்ட இழப்புகளும் அழிவுகளும் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ அரசியல் தலைவர்களையும் முன்னணித் தொழில் வாண்மையாளர்களையும் ஆய்வாளர்களையும் நாம் பலி கொடுத்துள்ளோம். இவர்களைவிட ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.
பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் நாசமாகியுள்ளன. இலங்கையின் அபிவிருத்தி பல தசாப்தங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது.
மூன்று ஆயுதப் போராட்டங்களுக்கு இல ங்கை முகங்கொடுத்திருக்கின்றது. இரண்டு போராட்டங்கள் மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்டவை. மற்றைய போராட்டம் ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழு க்களால் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து புலிகளைத் தவிர ஏனைய தமிழ்க் குழுக்கள் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பின. புலிகள் மாத்திரம் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கடைசி யில் அரசாங்க படையினரால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நடத்திய போராட்டங்கள் மக்களுக்கு இழப்புக்களையும் அழிவுகளையும் வேறு துன்பங்களையும் கொடுத்தனவேயொழிய எதையும் சாதிக்கவில்லை. புலிகளின் ஆயுதப் போராட்டமும் அதைப் போன்றதே.
தமிழ் மக்களின் விமோசனத் துக்காக ஆயுதம் ஏந்தியதாகப் புலிகள் கூறிய போதிலும் தமிழ் மக்களுக்கு அழிவையே அவர்கள் கொடுத்தார்கள் என்பது தான் உண்மை. புலிகளால் நேரடியாகக் கொல்ல ப்பட்டவர்களும் புலிகளின் அழிவுகரமான அரசியல் செயற்பாட்டின் விளைவாக உயிரிழந்தவர்களுமான தமிழ் மக்களின் எண் ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.
புலிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் அடுத் தடுத்துத் துன்பங்களை அனுபவித்தார்களே யொழிய எந்தவொரு விமோசனமும் அவர் களுக்குக் கிடைக்கவில்லை. இவ்வளவு இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் பின் லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக முகாம்களுக்குள் தள்ளுவதிலேயே புலிகளின் போராட்டம் முடிந்தது.
ஆயுதப் போராட்டம் அழிவுக்கு மாத்திரம் வழிவகுக்கும் என்பதை மூன்று போராட்டங்களிலிருந்தும் அறிந்து கொண்டோம். இனிமேல் இந்த நாட்டில் எவரும் ஆயுதத்தைக் கையில் எடுக்கக் கூடாது என்று பேராயர் கூறியதன் முக்கியத்துவத்தை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகளை ஜனநாயக வழியில் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதையே ஆயுதப் போராட்டங்களின் அழிவுகரமான விளைவுகள் வலியுறுத்துகின்றன.
- தினகரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment