ஈ மொய்க்கும் பிணத்தின் மீது விளம்பரம் தேடும் மனிதர்கள்
‘மகேஸ்வரி என்ற தன் மனைவியின் பெயரை மகேஷ்வரி என்று அச்சிட்டதால் ஆத்திரம் கொண்ட லண்டன் வாசியான இறந்தவரின் மகன் பிழையை உடனடியாகத் திருத்தும் படி உத்தரவிட்டான். கலங்கிப்போன இழவு வீட்டு மனிதர் கைகளை மேலே உயர்த்தி, ‘லண்டன்ல நாய் மேய்க் கிறவனுக்கெல்லாம் நாம பதில் சொல்ல வேண்டியிருக்கு’ என்று புலம்பினார்.’
நான் மரண வீடுகளுக்கு அவ்வளவாகச் செல்லாத ஒருவன். சோம்பேறித்தனந்தான் முக்கிய காரணம். வேறு சில காரணங்களும் இல்லாமலில்லை. சமூக அந்தஸ்து அற்றதென்று கருதப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்ட எனக்கு யாரெவரென்றே தெரியாத பிணங்களின் பின்னாலும் ஊர்வலமாய்ச் சென்றிருக்கிறேன்.
அவ்வாறு மரண வீடுகளுக்குச் செல்வதென்றாலும், அது அங்கு நிகழ்கின்ற டி. வி. சீரியல் போன்ற சுவாரஸ்யமான விடயங்களுக்காகவேயிருக்கும். உலகின் மகாமோசமான பிராணியை இத்தனை சடங்கு சம்பிரதாயங்களுடன் வழியனுப்பிவைக்க வேண்டியது அவசியந்தானா என்பது நானெப்போதும் எனக்குள்ளே கேட்டுவைக்கும் கேள்வி. மனித சமூகத்தின் மோசமான அத்தனை முகங்களையும் பார்த்துவிட்டதாலுண்டான வெறுப்போ என்னவோ இது.
ஒரு கண்ணில் கண்ணீர் வடிவது போன்று வரைந்து இறந்தவரின் முகாந்திரங்கள் எழுதப்பட்டு வீதியைக் குறுக்கறுத்து நின்ற அந்த நகைச்சுவைத் துணுக்கைத் தாண்டி வாசலை அண்மிக்கிறேன். பிணவாடையுடன் அங்கு விசிறப்பட்ட வாசனைத் திரவியங்களின் வாசனையும் இரண்டறக் கலந்து அகோரமான நெடியொன்று என்னை வரவேற்கிறது. மரணத்திற்குமொரு மணமுண்டு என்று சொல்வது இதைத்தானோ.
கிழவனிறந்து இன்றுடன் மூன்று நாட்களென்றார்கள். தூரத்தில் நின்றவாறு பார்த்தேன் பிணத்தில் ஈமொய்த்துக் கொண்டிருந்தது. அந்த ஈயை விரட்டிவிடக்கூட எவருமே முயலவில்லை. நீண்ட நாட்களின் பின் பார்த்த அந்த முகத்தை நினைவில் கொண்டுவர முயல்கிறேன். முடியவில்லை. அம்மனிதனை ஒரு கைதிபோலாக்கிவிட்டு, அந்த மனிதன் நேசித்தவர்களெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் வசதியாய் வாழ்வதாய்க் கேள்வி.
அங்கே யாரோவொரு உள்ளூர் வித்துவானின் வயலின் அபஸ்வரத்தில் சோகத்தைப் பிழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. அந்தவித்துவான் வாசித்தராகத்தை அடையாளங்காண இன்னுமவர் உயிரோடிருக்கிறாரோ என்னவோ, அவ்வாறவர் உயிரோடிருந்தால் இந்த இசையைக் கேளாமலிருப்பதே அவருக்கும் அவரது ஆயுளுக்கும் நலம். என்னதானவர் அபஸ்வரத்தில் வாசித்தாலும், அவரது அந்த இசை இந்தப்பிணத்துக்குக் கனகச்சிதமாய்ப் பொருந்துவதாய்ப்பட்டதெனக்கு.
அந்த வயலின் வித்துவானுக்குப் போட்டியாக பறையடிப்பவர் பதினாறு வகைத்தாளங்களையும் தனது பறை மூலம் கொண்டு வந்தது எனக்குப் பிடித்திருந்தது. மேளத்தை வாசித்தவாறு, தனது வாசிப்பை எவராவது ரசிக்கிறார்களாவெனப் பார்வையால் கூட்டத்தைத் துளாவுகிறார். எது என்னதானானாலும், அருமையாவொரு கலைஞன் பிணத்துக்குப் பறையடித்துக் கொண்டிருந்ததுதான் என் கவலை.
அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரண அறிவித்தல்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு பறையடிப்பவருக்கருகில் அமர்ந்து கொள்கிறேன். சப்ததாள அலங்காரங்களில், மிச்ரஜாதி, கண்டஜாதி போன்ற சிக்கலான தாளங்களையுமவன் விட்டுவைக்கவில்லை. அநாயாசமான விரற்பிரயோகம். அவனது கலைத்தாகம் என்னைப் பிரமிக்கவைக்க தாள எண்ணிக்கைகளை என்விரல்கள் கணக்குப் போடுகின்றன. பறையடிப்பவருக்கோ ரசிகரொருவர் கிடைத்துவிட்ட போதை தலைக்கேற வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். அவரும் ஏற்கனவே நல்ல போதையில்.
அந்த மரண அறிவித்தலை முதலில் பார்த்தபோது எனக்குச் சிரிப்பாய் வந்தது. அதில் அச்சிடப்பட்டிருந்தவரின் முகத்துக்கும் உடம்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லாமல், கொம்யூட்டர் தொழில்நுட்பத்தில் நேர்த்தியின்றி வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தப்படம். ஒழுங்கான புகைப்படமொன்றுகூட இல்லாதளவுக்கு வாழ்ந்து மடிந்துபோன அம்மனிதன் என்ன பாவஞ் செய்தவனோ!
அதற்கடுத்தாய், இறந்தவனை வைத்து இருப்பவர்கள் தங்களை எந்தளவுக்கு விளம்பரப்படுத்த இயலுமோ அந்தளவுக்கு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக ஒவ்வொரு பெயருக்கருகிலும் அடைப்புக்குறியுள் சுவிஸ், பிரான்ஸ், லண்டன் என அமர்க்களப்பட்டது அந்த மரண அறிவித்தல். அவர்களுடைய யூரோ, பவுண்ஸ்ரேலிங்குகளின் இலங்கைப் பெறுமதிப் பெருக்கலில் அந்த அடைப்புக்குறிப்பினுள்ளிருந்த நாடுகளில் அவர்கள் செய்யும் வேலைகள் அடிப்பட்டுப் போவதுதான் உண்மை. நாய் குரைத்த பணம் வீண்போவதில்லைதானே.
நாயென்னும் போதுதான் நண்பரொருவர் சொன்ன விடயமொன்று நினைவுக்கு வருகிறது. வெளிநாடுகளில் நம்மவர் அந்தந்த நாட்டவரை நம்பிப் பிழைப்பு நடத்துகிறார்களோ என்னவோ, வெளிநாட்டு நாய்கள் நம்மவர்களுக்குச் சோறுபோடும் விடயந்தானது. அவரும் அக்கம் பக்கம் பார்த்து மிக அடக்கமாகவும் அருவருப்புடனும் எனக்குச் சொன்னார். ஒருவேளை இறந்தவரின் சந்ததிகளில் எவராவது வெளிநாடுகளில் நாய் பராமரிப்பைத் தொழிலாகக் கொண்டதாகவிருக்கலாமோ என்னவோ.
அவர் சொன்ன இந்த விடயத்தைப் பற்றி நானலட்டிக் கொள்ளவில்லையென்றாலும் அவருடன் இவ்விடயம் பற்றிச் சம்வாதம் புரிய வேண்டும் போலிருந்தது. அவர் அருவருப்புடன் குறிப்பிட்ட அந்தவிடயமும் தொழிலென்கிற வகைக்குள் அடங்குவதால், அதனையும் ஒருவகை உழைப்பென்று பெருமனத்துடன் நாமேன் ஏற்றுக்கொள்ளக் கூடாதென்பது என்வாதம். மனிதத் தொகுதிக்குள் அடங்கிப்போன ஐரோப்பிய நாய்கள் வாழ்க என்று கோஷமெழுப்புவதைவிட வேறொன்றுந் தெரியவில்லை எனக்கு.
ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து இந்த நாட்டை வள முள்ளதாக்கி, நமது மலத்தையும் அள்ளிச் சுற்றாடலைத் தூய்மையாக்கியவர்களை நாமொரு பெயரிட்டழைத்ததை நினைத்துப் பார்க்கிறேன். காலம் மிகச் சரியாகவே நம்மைப் பழிவாங்கியிருக்கிறது.
அன்று சவரத்தொழிலென்றும், தீண்டத்தகாதவரென்றும் ஒரு சமூகத்தை விலக்கி வைத்தவர்களின் வாரிசுகள், இன்று ‘பேஷியல்’ என்றும் ‘ஹெயார்டிறெஸிங்’ என்றும் நாகரிகமான பெயர்களுடன் தொழில் செய்யப்புறப்பட்டிருக்கிறார்கள். வேறு வேறு பெயர்களில் தொழிலென்னவோ ஒன்றுதான் தாழ்ந்தவரென்று எவரையுமே விளிக்க முடியாதபடி இன்றைய சமூகக் கட்டமைப்பு எவ்வளவோ மாறிப்போயுள்ளது. சாதிகளில்லையடி பாப்பா என்று அன்று பாடியதன் தீர்க்கதரிசனம் இன்றுதான் நிறைவேறிக் கொண்டிருக்கிறதோ? இவையெல்லாவற்றையும்விட இறந்துபோன இந்தமனிதன் எந்தளவு கெளரவத்துக்குரியவன் என்பதுதான் எனது ஆராய்ச்சி இப்போது.இறந்தவனைக் கெளரவப்படுத்துதல்வேறு. அதற்காக அவனை இந்திரன் சந்திரனென்றா புகழ்வது வேறு. அந்தப் பிரசுரத்தில் காணப்பட்ட கவிதை போலொன்றில் அச்சிடப்பட்டிருந்த வாசகங்கள் எந்தளவுக்கு நியாயப்படுத்தக் கூடியவையோ எனக்குத் தெரியாது. காசுக்காக யாரோ ஒருவனால் எழுதப்பட்ட வரிகளாய் தோற்றமளித்தன அவையெனக்கு. இத்தனைக்குமந்த இரங்கல் வரிகளை எழுதியவன் இறந்தவனைக் கனவில் கூட கண்டிருப்பானோ இல்லையறிந்திருப்பானோ என்னவோ. கைதேர்ந்த நோட்டீஸ் கவிஞன்போலும்.
இத்தனை தடல்புடல்களுக்கும் மத்தியில் அந்த மரண அறிவித்தலில் காணப்பட்ட முக்கால் வீதமான, நபர்களில் எவருமே இந்த இடத்திலில்லாமல் ‘பினாமி’யொருவனால் அம்மரணவீடு நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்ததுதான் மிகப்பெரிய நகைச்சுவை.
அங்கு மனிதர்களின் அழுகைச் சத்தம் கேட்டதோ இல்லையோ, இடைவிடாது தொலைபேசி அழுது கொண்டேயிருந்தது. அழைப்பையேற்கும் நபர் தொலைபேசியைக் கையிலெடுக்கும் போதெல்லாம். “பிரான்சிலிருந்து லண்டனிலிருந்து” என்று எடுப்பாக நேர்முகவர்ணனை செய்பவர்போல சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வார். ஏதோ தேவலோகத்திலிருந்துதான் அழைப்புகள் வருகின்றனவோ என எண்ணும்படியிருந்தன அவரது அபிநயங்கள். ஆனால் பிணத்தில் மட்டும் ஈமொய்த்துக் கொண்டிருந்தது.
‘பினாமி’ தனக்குள்ளே அந்தப்பிணத்தைவைத்து எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குக் கறந்துவிடக் கூடியவாறு செலவுகளை மனக்கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். “என்ன செலவானாலும் கவலையில்லை” என்றவனுக்கு லண்டனிலிருந்து கிடைத்த உத்தரவாதம் ஒன்று மட்டும் போதுமே. அன்றைய பவுண்ஸ்ரேலிங்கின் இலங்கைப் பெறுமதியை அடிக்கடி தன் கையடக்கத் தொலைபேசியூடாகச் சரிபார்த்துக் கொண்டான்.
பினாமியின் கையிலிருந்த சிறிய ‘வீடியோ கமெரா’ பிணத்தைமொய்க்கும் போதெல்லாம் பிணத்துக்கருகே மூக்கைப் பொத்திக்கொண்டு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டுமிருந்த பெண்களின் முகங்களில் ‘ரெடிமேட்’ சோகமிழையோடுவதும், பின்னர் பழையபடியவர்கள் ஊர்க் கதைகளில் மூழ்குவதுமாய் மிக நன்றாகவே வித்தைகளில் தேறியிருந்தார்கள்.
சும்மாவா! எத்தனை பிணங்களைக் கண்டவர்களவர்கள். அந்தப் பெண்களின் முகபாவங்களை வைத்து எவரை எந்த டி. வி. சீரியலில் நடிக்கவைத்தால் பொருத்தமாயிருக்குமென கற்பனைத் தேர்வொன்றை நடத்திப் பார்த்தேன். என்னே ஆச்சரியம்! ஒருவரையொருவர் விஞ்சும் வண்ணம் எல்லோருமே தேறியிருந்தார்கள். தென்னிந்திய நடிகைகளுக்கு நிகராக.
இதற்குள் வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பொன்றினுட்சிக்கிப் பினாமி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தான். தொலைபேசியில் அழைத்தவர் இறந்தவரின் மகனாம். தொலைபேசி உரையாடலின் முடிவில் பினாமி விடுத்த கடுகடுப்புடன் கூடிய கட்டளைகளிலிருந்து நானறிந்து கொண்டதன் சாராம்சமிதுதான்.
தொலைநகல் மூலம் தனக்குக்கிடைத்த மரண அறிவித்தலில் தனது மனைவியின் பெயரில் ஒரெழுத்து பிழையாக அச்சிடப்பட்டுள்ளதால் அவர் குழப்ப முற்றிருக்கிறாரென்றும், சவ அடக்கத்துக்கிடையில் மனைவியின் பெயர் திருத்தப்பட்ட மரண அறிவித்தல் தன்கைக்குக் கிடைக்கவேண்டுமென்பதும் அவர் விடுத்திருக்கும், கட்டளை. பிணம் எக்கேடு கெட்டாலும் தனக்கதைப்பற்றிக் கவலையில்லையென்பது அவர் சொல்லாமற் சொன்னது.
பினாமியின் முகத்தில் ஈயாடவில்லை. மரண அறிவித்தலை அச்சிடப் பொறுப்பாயிருந்தவரை அவன் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தான். அவனது வருமானத்தில் விழுந்த முதல் அடியல்லவா அது. இறந்தவரின் மருமகளின் பெயரிலந்த ஓரெழுத்துத்திருத்தும்பணி முடுக்கிவிடப்படுகிறது. பிணத்தைவிடப் பிரச்சினைக்குரிய அந்த ஓரெழுத்து எதுவாயிருக்குமென்பதை அறியாது போனால் நான் வந்ததும் வீணாகிவிடுமே எனவே சம்பந்தப்பட்டவரை விசாரிக்கிறேன்.
“அதொண்ணுமில்ல பாருங்க சூனாவ இஷ்ஷன்னாவாக்கட்டாம்” புரியவில்லையென்றேன். “மகேசுவரிய.... மகேஷ்வரியாக்கட்டாம்” உதட்டைப்பிதுக்கிச் சொல்லிவிட்டு வானத்தைப் பார்த்துக் கையை நீட்டினான். அதனுள்தொனித்த ஆயிரம் மர்த்தங்களும் எனக்குப் புரிந்தன.
“லண்டன்ல நாய்மேய்க்கிற வனுக்கெல்லாம் நாம பதில் சொல்ல வேண்டியிருக்கு” என்று இடையில் ஒரு நீண்ட கெட்டவார்த்தையையும் சேர்த்துச் சிறிது சத்தமாகவே தன் வெறுப்பையுமிழ்ந்தான் பினாமி. ஆனாலும், ‘நாய்மேய்க்கிற’ என்ற அந்தச் சொல்லுக்கவன் அத்தனை அழுத்தம் கொடுத்திருக்கக் கூடாதுதான். எத்தனை பேரையது சங்கடத்திலாழ்த்தியதோ தெரியாது.
என் சிந்தனைகள் சுழல்கின்றன. அந்தப் பிணத்தின் இடத்தில் என்னை வைத்துப் பார்கிறேன். ‘குப்’ பென்று வியர்த்தது எனக்கு. இதுவரையில் என்னைச் சூழ நிகழ்ந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதிருந்த நான் முதற் தடவையாகக் கலவர முறுகிறேன். சுடலைக்கு முன்னே எனக்குப் பிறந்த ஞானமிதுவோ தெரியாது.
முதலில் என் இறுதிவிருப்பத்தை உயிலாக எழுதி வைக்கவேண்டும். நானிறந்தால் எனது பிணத்தின் பெயரால் எவையெவை நிகழக்கூடாதென நானதில் குறிப்பிடவேண்டும். குறிப்பாக ‘கண்ணீரஞ்சலி’யென்கிற பதம் என் மரணம்மட்டில் பாவிக்கப்படக் கூடாது. விரைவாக என்னை அடக்கஞ் செய்யவேண்டும். என்சவ அடக்கத்தின் பின்னர்தான் என் மரணம் பற்றி நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்க வேண்டும். மோசமான இந்தச் சமூகப் பிராணி இறந்த நிகழ்வை எவருமே கொண்டாடக் கூடாது என்கிற இவையெல்லாம் என் கற்பனைதான் நடக்குமா.....?
ஒரு பிணத்தை வைத்து எவ்வளவு பிடுங்கலாம், எவ்வளவு தூரம் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள லாம், எவ்வாறெல்லாம் தங்கள் நடிப்புத்திறனை வெளிப்படுத்தலாமென்று தீவிரமான ஒத்திகைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, வழமைபோல நடுவிலெழுந்து நடக்கத் தொடங்குகிறேன். பிணத்தில் அதிகமதிகமாய் ஈக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன.
அ.ச. பாய்வா
0 விமர்சனங்கள்:
Post a Comment