முகமூடிகளின் பின்னால் இருப்பவர்களைஅடையாளம் காண்பது எப்படி?
இன்று யாரையும் நம்புவதற்கில்லை. உங்களிடம் வெகு நெருக்கமாக பல வருடங்கள் பழகிய நண்பரே ஒருநாள் உங்கள் பணத்தை அல்லது நகைகளைத் திருடிக் கொண்டு ஓடிவிடலாம். அல்லது நம்பிக்கை அடிப்படையில் கொடுக்கப்பட்ட கடனைத் திரும்பித் தராமல் இருந்து விடலாம். சிலர் தன் நண்பரின் மனைவியை அல்லது மகளை கூட்டிக் கொண்டு ஓடி விடுகிறார்கள்.
இது ஒரு மனிதருக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரும் துரோகம். துரோகங்களிலேயே மிகப் பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம் தான்! நம்பிக்கைத் துரோகம் செய்யாமல் இருப்பதுதான் நமது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு மற்றும் சுற்றம் சூழ்ந்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரும் உதவி.
நம்பிக்கைத் துரோகத்தின் முதற்படி எப்போ தும் நட்பாகவும் காதலாகவுமே ஆரம்பமாகிறது. நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களும் இரண்டு வகைப்படுவர். முதல் பிரிவினர் நல்ல நண்பர்களாக வும் காதலர்களாகவும் ஆரம்பித்து நடுவில் மன மாற்றம் அடைந்து துரோகிகளாக மாறுகின்றவர்கள். இப்படி மாறுவதற்கு இவர்கள் சொல்லும் காரணங்களில் சில நமக்கு நியாயம் போலவும் தோன்றும்.
ஒரு நண்பன் தான் ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தவளை கைவிட்டு வேறொருத்தியைக் கைபிடித்தான். அவன் வேறொருத்தியைக் கரம்பிடிக்கப் போகிறான் என்பதை அறிந்துகொண்ட அவள் அவனுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டாள். காதலுக்காக தான் செய்த தியாகங்களை பழிச் சொற்களை பட்டியல் போட்டாள். அவன் தந்த உறுதி மொழிகளை வரிசைப்படுத்தினாள். குறைந்த பட்சம் தான் அங்கே தவறு செய்தேன் என்பதையாவது சொல்லி விடும்படி அவனிடம் கெஞ்சினாள். அவனாள் அவளது கேள்விகளுக்கு சரியான பதில் சொ¡ல்லத் தெரியவில்லை. அவளை முற்றாகத் தவிர்த்து விட்டான். தூர இடமொன்றில் திருமணத்தை நடத்தினான்.
பதுங்கி பதுங்கி அவர்கள் காதலித்தது நண்பர்களுக்குத் தெரியும். இதை நன்கு தெரிந்த நண்பன் அவனிடம் “ஏன்டா இப்படிச் செய்தாய்? அவள் என்ன பாவம் செய்தாள்? நல்ல குணம் கொண்ட பெண் தானே!” என்று கேட்டான்.
“மச்சான், அவள் எந்தப் பாவமும் செய்யாதவள் தான். ஆனால் அவளைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அவளைத் திருமணம் செய்தால் அவளது நான்கு தங்கைகளையும் நான்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அவள் அப்பா நோயாளி. அவர்கள் ஏழைகள். இருந்தாலும் நான் காதல் வசப்பட்டது உண்மைதான். ஆனால் இப்போது நான் திருமணம் செய்யப் போவது வசதியான குடும்பத்தில். கொழும்பில் ஒரு வீடு கிடைக்கிறது. ஒரே மகள். அண்ணன்மார் வெளிநாட்டில். எனக்கும் வெளிநாடு போக வாய்ப்பு தருவார்களாம். என் தம்பிக்கும் தங்கைக்கும் உதவ முடியும். நான் என்ன செய்யலாம் சொல்? கற்பனைக் காவியத்தில் வாழ்வதா இல்லையேல் யதார்த்தத்துக்கு முகம் கொடுப்பதா?”
இப்படி அவன் விளக்கம் இருந்தது. கேட்டவன் வாயடைத்துப் போனான்!
இங்கே இரண்டு பேர் பக்கமும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. எனினும் அவன் அவளுக்குச் செய்தது பச்சைத் துரோகம். ஏனெனில் எவருமே திடீரென மனம் மாறி துரோகம் செய்வதில்லை. துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை. ஏற்கனவே ஒருவரிடம் இருக்கும் குணம்தான் சரியான சமயத்தில் வெளிப்படுகிறது.
துரோகத்தின் அடிப்படை பச்சை சுயநலத்தில் ஆரம்பமாகிறது. தன்னைப் பற்றி மாத்திரமே கவலைப்படுகின்றவன் வேறொன்றைப் பற்றியும் கவலை கொள்வதில்லை. சிறுவயது முதலே நான் எனக்கு, எனக்கு மட்டும் என்ற உணர்வில் வளர்கின்றவன் பின்னாளில் அவ்வளவும் தனக்கே தனது நன்மைகளுக்காகவே எனக் கருதி வாழத் தொடங்குவான். இத்தகையவர்கள் எவருடன் எவ்வளவு நெருக்கமாகப் பழகினாலும் தனது நலன்கள் பாதிக்கப்படாதவாறு நடந்து கொள்வார்கள். தனது நலன்களுக்கு பாதிப்பு வரும் என்று தெரிந்து கொண்டால் மெதுவாக விலகிக் கொள்வார்கள். சமூக பிரக்ஞை இவர்களிடம் இருக்காது.
நீங்கள் ஆணோ, பெண்ணோ, இந்த வரையறைக்குள் வராவிட்டால் துரோகிகளால் துன்பப்படப் போகும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்று கருதி எச்சரிக்கையாக இருங்கள். பொதுநல சிந்தனை கொண்ட, உதவும், நம்பும் மனப்பான்மை கொண்டவர்கள் துரோகிகளிடம் ஏமாறும் வாய்ப்புகள் அதிகம்.
ஏற்கனவே உள்ளுக்குள் துரோகிகளாக இருந்து கொண்டு வெளியே வேறு மாதிரி வேஷம் போட்டுக் கொள்பவர்களிடமே நீங்கள் ஏமாறுகிaர்களே தவிர, திடீரென மனம் மாறியவரிடம் அல்ல என்பதை மறக்க வேண்டாம். எனினும் ஒருவர் எவ்வளவு தான் வேஷம் போட்டாலும் அவர் யாராக இருக்கிறாரோ அவருக்குரிய குணங்கள் தான் பல வழிகளிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.
நீங்கள் ஒருவரை ஆழமாகக் காதலிக்கும் போது அல்லது நம்பும் போது முதலில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். உதவுவது நன்மை செய்வது பொது விவகாரங்கள் போன்ற விடயங்களில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அவர்களின் ஆசைகள், பொருட்கள், செல்வங்களின் மீது காட்டும் ஆர்வம் போன்றவற்றின் மூலம் அவர்களின் சுயநல மனப்பான்மையையும் பேராசையையும் அனுமானிக்க முடியும்.
ஒருவர் சராசரியை விட சுயநலம் பிடித்தவர், ஆபத்து அவசரத்தில் உதவ வரமாட்டார் என்பது தெரிந்ததும் அவருடன் நீங்கள் வைத்திருக்கும் நெருக்கத்தைப் படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். பெரிய எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம். ஏனெனில் தனக்கு வாய்ப்பான தருணத்தில் அவர் உங்களை நிச்சயமாகக் கைவிடத்தான் போகிறார்.
நண்பரோ, காதலரோ யாராக இருந்தாலும் உங்கள் நட்பின் உள் வலயத்துக்குள் அவரை பிரவேசிக்க அனுமதிப்பதற்குள் அவரது குணநலன்களைத் தொடர்ந்து எடைபோட்டு வாருங்கள். நீங்கள் ஒரு இடத்தில் நின்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு அகன்று சென்ற பின்னரும் நீங்கள் தரித்திருக்கும் நறுமணம், வியர்வை மணம் கைரேகை மற்றும் பழக்க தோஷத்தில் செய்யும் காரியங்கள் போன்ற எச்சங்களை விட்டுச் செல்கிறோம்.
இதேபோலத்தான் நம்முடன் பழகும் மனிதர்கள் அவர்கள் முகமூடிகள் தரித்தவர்களாக இருந்தாலும் சரி, தன் உண்மை இயல்புகளை அவர்களை அறியாமலேயே சிந்தனையில் பேச்சில், செய்கைகளில் வெளிப்படுத்தி விடுவார்கள். நாம் மோப்ப நாய்களைப் போல இவற்றை உணர்ந்து கொள்வோமானால், இந்த முகமூடிகளுக்குப் பின்னால் இருக்கக் கூடிய மனிதர்களின் உண்மையான முகங்களை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
ஷோபனா
0 விமர்சனங்கள்:
Post a Comment