கே.பி யின் கைதும் பரப்பப்படும் வதந்திகளும். கிழக்குப் புலிகள் துரோகிகளாம். -விருகோதரன்-
புலிகளியக்கத்தின் தற்போதைய தலைவர் என தன்னைத்தானே அறிமுகம் செய்துகொண்ட கே.பி என அறியப்படும் செல்வராசா பத்மநாதன் கைது தொடர்பாக பல தரப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கை அரசின் மிக தேர்ச்சி பெற்ற இராணுவ புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்ற உண்மையைத் தவிர எவ்விதமான தகவல்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் வெளிவிடப்படவில்லை.
இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறையின் தேர்ச்சி பெற்ற அதிகாரி ஒருவரின் தலைமையில் இடம்பெற்றுவரும் விசாரணைகளின்போது கே.பி பல தகவல்களை தெரிவித்துள்ளார் என்பது அரச உயர் மட்டத்தினரால் ஊடகங்களுக்கு சொல்லப்பட்டுள்ள செய்தியாகும். இது தவிர இக்கைது எவ்வாறு இடம்பெற்றது? எங்கு இடம்பெற்றது? யார் இவரை கைது செய்தார்கள்? கைதுக்கு உதவிய காரணிகள் யாது? என்ற வினாக்களுக்கு விடைகாண்பதற்கு பாதுகாப்பு படையின் உயர் அதிகாரிகள் கூட முட்டிமோதிக்கொள்கின்ற நிலையில் கற்பனைச் செய்திகள் பல கோணங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
கே.பி தாய்லாந்தில் கைதுசெய்யப்பட்டதாக வெளியான செய்தியை அந்நாட்டு பிரதமர் நிராகரித்ததுடன் மலேசியாவில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து கே.பி கைது செய்யப்பட்டதாக கூறப்படும் விடுதி அதிகாரிகள் தமது விடுதியில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என உறுதிபடக் கூறியுள்ள நிலையில் இவ்வாறான கற்பனைகள் அடங்கிய பல செய்திகள் புலம்பெயர் புலித்தொழிலாளர்களாலேயே பரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புலிகள் கேபி கைது தொடர்பாக முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதற்கு காரணங்கள் பலவுள்ளது.
கே.பி எவ்வாறு மாட்டினார் என்பதை விவாதிப்பதற்கு நியாயமான சந்தேகங்கள் உள்ளன, கேபி கைது செய்யப்பட்டவுடன் புலிகளினால் பரப்பப்பட்ட செய்திகளிலேயே பல சந்தேசங்கள் உள்ளன. பொலிஸ் நடேசனின் மகன் மற்றும் சகோதரனுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே கே.பி கைது செய்யப்பட்டதாக புலிகளின் வானொலிகள் முதலில் செய்தியை வெளியிட்டு பின்னர் அவற்றை அவ்வாறே மூடி மறைத்துக்கொண்டனர்.
புலிகளின் ஒட்டுமொத்த அழிவிற்கும் கே.பி யே வேட்டுவைத்தார் என நெடியவன் தலைமையிலான புலிகள் பகிரங்கமாக தெரிவித்திருந்தமையையும் பொட்டு தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் உள்ளார் என்று உலாவும் செய்திகளையும் வைத்து பார்க்கின்றபோது கே.பி புலிகளின் தலைமையை காட்டிக்கொடுத்ததற்காக நெடியவன் தரப்பின் அல்லது பொட்டுவின் சதியினால் கே.பி மாட்டியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றது.
கே.பி யே புலிகளின் அழிவிற்கு காரணமாக இருந்தார் என்ற செய்தியில் உண்மை இருந்தால், அது நிச்சயமாக பொட்டுவிற்கு தெரியாமல் இருந்திராது. பொட்டு இலங்கை இராணுவத்தின் பிடியில் உயிருடன் இருக்கின்றார் என்ற செய்தி உண்மையாக இருந்தால், கே.பி யை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் பொட்டுவை விட்டு அகலாது.
அதன்பொருட்டு நடேசனிடம் அணுகி உங்கள் தந்தை உயிரிழப்பதற்கும் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதற்கும் கே.பி யே காரணமாக இருந்தார். எனவே அவரை எவ்வாறாவது மாட்டவேண்டும் என அதற்கான திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து பொட்டு செய்திருக்கமுடியும்.
அத்திட்டத்திற்கு இணங்க நடேசனின் மகன் மற்றும் சகோதரன் குறிப்பிட்டவிடுதிக்கு சென்று கே.பி யை கைது செய்ய உதவியிருக்க முடியும். அவ்வாறு கே.பி கைது செய்யப்படும்போது தாம் அவ் விடுதியில் இருந்ததாக தெரிவித்திருக்கும் நடேசனின் மகன் மற்றும் சகோதரன் ஆகியோர் ஏன் கே.பி க்கு ஓர் அழைப்பு வந்தே அவர் வெளியே சென்றார் என்ற செய்தியை அவசர அவசரமாக வெளியிடவேண்டும். அதாவது இவர்களின் சந்திப்பை மூன்றாம் நபர் ஒருவர் அல்லது தரப்பு ஒன்று அறிந்து வைத்திருக்கவேண்டும் எனவே அக்கைதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வெளிக்காட்டுவதற்கா தொலைபேசிக் கதையை கட்டவிழ்த்து விட்டிருக்கவும் முடியும்.
அவ்வாறு நடசேனின் மகன் சகோதரன் ஆகியோர் குறிப்பிட்ட விடுதியில் இருக்கும் போது கே.பி கைது செய்யப்பட்டதாகவும் அவருடைய மூக்குக் காண்ணாடி தாம் தங்கியிருந்த அறையிலேயே காணப்படுவதாகவும் கூறியிருந்தனர், அவ்வாறாயின் அவர்கள் கே.பி கைதுடன் தொடர்பு பட்டிருக்கவிலையாயின் விடுதி அதிகாரிகள் கே.பி குறிப்பிட்ட விடுதியில் வைத்து கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கும் மறுப்பை நடேசனின் மகன் மற்றும் புலம்பெயர் புலிகள் மறுதலிக்க மறுக்கும் மர்மம் என்ன?
அத்துடன் புலிகள் அமைபினுள் பிளவு இல்லையாயின் இக்கைது புலித்தலைமையின் அனுசரணையுடன் இடம்பெறவில்லையாயின் கைது இடம்பெறும் போது கூடவே இருந்ததாக கூறும் மேற்படி புலிகளின் முக்கியஸ்தர்கள் மலேசிய அரசிற்கு குறிப்பிட்ட விடயத்தை முறையீடு செய்யாததன் காரணம் அல்லது இக்கைதின்பொருட்டு சட்ட நடவடிக்கை எடுக்க முயலாததன் மர்மம் என்ன என்ற விடயங்களுக்கான விடையை மக்களே தேடிக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு புலம் பெயர் புலித் தொழிலாளர்கள் தொடர்ந்தும் மக்களின் பணத்தை சுருட்டிக்கொள்வதற்காக பல தரப்பட்ட பொய்கைளை மக்களுக்கு கூறி அவர்களை தொடர்ந்து ஏமாற்ற முற்பட்டு வருகின்றமையே இவ்வாறான முன்னுக்கு பின் முரணான செய்திகளுக்கு பிரதான காரணமாகும்.
புலிகளின் தலைமை எவ்வாறு அதன் விசுவாசிகளாலும் சர்வதேசவலைமைப்பாலும் காட்டிக்கொடுக்கப்பட்டதோ அதேபோன்று கேபியின் கைதும் அவ்வியக்கத்தின் தலைமையை கைப்பற்றுவதற்கும், போராட்டத்தின் பெயரால் அறவிடப்பட்ட பணத்தை பங்கிட்டுக்கொள்ளவும் துடிக்கும் பல புலிதொழிலாளர்களின் ஒருமித்த நடவடிக்கை என்பதை மக்களுக்கு மூடி மறைப்பதற்காக பல தரப்பட்ட பொய் செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பமடையச் செய்யும் தமது கைங்கரியத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றனர்.
புலம்பெயர் புலித்தொழிலாளர்களின் இவ்வாறான பொய்பிரச்சாரங்களுக்கு கிழக்குப் புலிகள் இன்று பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுவது மிகவும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியது. புலிகளின் தலமை முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரசினால் பலமுறை சரணடையுமாறு அறிவுறுத்தல்கள் விடப்பட்டிருக்கின்ற நிலையிலும் தொடர்ந்தும் காடுகளில் வாழ்ந்து வரும் ராம் தலமையிலான புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்தனர் என்ற தோரணையில் புலித் தொழிலாளிகளின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் புலித்தொழிலாளர்களால் பதவிக்காகவும் பணத்திற்காகவும் இடம்பெறும் குத்துவெட்டுக்களே இவ்வாறான பின்னடைவுகளுக்கு காரணம் என்பதை மக்கள் ஊகித்துக்கொள்ளும் நிலையில், கிழக்கு மாகாண புலிகள் மீது பழியைபோட்டு தம்மை மக்களிடம் உத்தமர்களாக காட்டிக்கொள்ள முற்படும் புலித்தொழிலாளர்களது வக்கிரகுணத்தை சம்பந்தப்பட்ட அனைவரும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.
ஐ.பி.சி வானொலியினுள் கே.பி யின் விசுவாசியான றஞ்சித் என்பவரால் உட்புகுத்தப்பட்ட ஈஸ்வரதாசன் என்பவரால் நிர்வகிக்கப்படும் அதிர்வு இணையம் இவ்வாறான செய்திகள் திட்டமிட்ட முறையில் பரப்பப்புவதை காணமுடிகின்றது. பல சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு சமூக அந்தஸ்தை இழந்துள்ள மேற்படி நபர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி புலிகள் விட்டுச் சென்றுள்ள மிச்ச சொச்சங்களை சுருட்டிக்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு தவறான செய்திகளை வழங்கி வருவது தெளிவாக தெரிகின்றது.
புலிகளின் தலைமைக்காக போட்டி போடும் வல்வெட்டித்துறை, யாழ் கரையோரப்பகுதியை சேர்ந்தோருக்கு கிழக்கு மாகாண மக்கள் என்றால் காட்டிக்கொடுக்கும் பரம்பரையில் வந்தவர்கள் என்று இலகுவாக கூறமுடிந்துள்ளதை நோக்க முடிந்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணப் புலிகள் போடுதடிகள் என்பது புலித்தொழிலாளிகளின் கருதுகோள்.
கருணாவிற்கும் புலிகளின் தலைமைப் பீடத்திற்கும் முறுகல் ஏற்பட்டது தமிழீழ இராணுவத் தளபதி எனும் பதவியில் ஏற்பட்ட போட்டியே என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பதவி போட்டியினால் அவ்வியக்கத்தில் பிளவு ஏற்பட்டபோது கருணா மற்றும் புலிகள் தரப்பால் மூட்டப்பட்ட பிரதேசவாதத் தீ இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பது துரதிஸ்டமே. ஆனால் அவை அனைத்துக்கும் அப்பால் புலிகளியக்கத்திற்கு விசுவாசமாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரும் வன்னியில் பிரபாகரனுடன் இருந்தே மடிந்துள்ள நிலையில், புலம்பெயர் புலித்தொழலாளர்கள் கிழக்கு புலிகளே கேபி யை காட்டிக்கொடுத்ததாக தெரிவிக்க முனைந்து வருவதானது புலிகளின் தலைமை கடந்த காலங்களில் தமது உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனிநபர்கள் மீது எவ்வாறு பொய்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினார்கள் என்பதற்கு சிறிய உதாரணமே.
இன்று கே.பி யின் கைதுடன் புலிகளின் ஒரு தரப்பினர் தமது கை ஓங்கி உள்ளதாகவும் தாமே எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஏகத்தலைமை என தெரிவித்து வருவதை உணர முடிகின்றது. யார் இந்த தலைமை? அவர்களுக்கு கே.பி யை தலைமையாக ஏற்றிருந்த தரப்பினர் எவ்வாறான வேட்டு வைக்கப்பபோகின்றார்கள் என்பது வெளிவரும்போது, புலிகளின் சுயரூபம் விளங்காத புலம்பெயர் பாமரத் தமிழ் மக்களில் பலருக்கு புரியும் என நம்பமுடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment