கே.பி கைதானதை அடுத்து சர்வதேசம் அமைதி காத்து வருகின்றது
(லங்கா ஈ நியூஸ் 26.08.2009 -மு.ப.9.40) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரும் அவ்வியக்கத்துக்கான சர்வதேச ஆயுத வர்த்தகருமான கே.பி என்று அழைக்கப்படும் செல்வராஜா குமரன் பத்மநாதன் கடந்த 05ஆம் திகதி இலங்கை பாதுகாப்பு தரப்பினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரது கைதினை அடுத்து விடுதலைப் புலிகள் சார்பான தமிழ் டயஸ்போரா மற்றும் அந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட சமூகம் அமைதியில் மூழ்கியுள்ளது என்று எமது சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கே.பி கைது செய்யப்பட்டதை அடுத்து விடுதலைப் பலிகள் இயக்கத்தின் மற்றுமொரு உறுப்பினராகத் தெரிவிக்கப்படும் சட்டத்தரணியான உருத்திரகுமரன், அவ்வியக்கத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட கடதாசியில் எழுதப்பட்ட கடிதமொன்றினை வெளியிட்டார். அந்த கடிதத்தில் கே.பி கைது செய்யப்படவில்லை என்றும் அவர் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்றும் சர்வதேசத்திடம் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை அடுத்து அவரால் எந்தவித தகவல்களும் வெளியிடப்படவில்லை. கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ஈடுபட்ட போதிலும் கைதாகியுள்ள கே.பி.யை விடுதலை செய்யுமாறு கோரி எவரேனும் வேண்டுகோள் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேற்படி ஊர்வலங்கள் நடத்தப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் 50 பவுண்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் இன்று தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வேயில் தங்கியிருந்தவாறு புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுத்த சதீஸன் குமாரன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்களும், பிரான்ஸ், ஜேர்மன், கெனடா, மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கியுள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களும் தற்போது எங்கே சென்றுள்ளார்கள் என்பது குறித்து தெரியாதுள்ளதாக அந்நாடுகளிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.பி.க்கே இந்த நிலைமை என்றால் தமக்கு என்ன ஆகும் என்பது குறித்து எண்ணியே அவர்கள் அனைவரும் தலைமறைவாகி இருக்க முயற்சித்து இருக்கலாம் என்றும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் வெளிப்படையான தகவல்களை வெளியிட்ட ஊடகவியலாளர்கள், அல் ஜசீரா போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்கள் போன்றனவும் கே.பி. கைது செய்யப்பட்டதை அடுத்து குறித்தவொரு அமைதியான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. ( பக்கச் சார்பற்ற பிரதான ஊடகவியலாளர் ஒருவர் கடந்த 7ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு செய்தியினையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
இதைத் தவிர கே.பி.யுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்றோரும் குறிப்பிட்டவொரு அமைதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கே.பி. இவர்கள் தொடர்பில் எவ்வாறான தகவல்களை வெளியிடப் போகிறார் என்ற பயத்தில் உள்ள மேற்படி முக்கியஸ்தர்கள் அவ்வாறு கே.பி.யிடமிருந்து தகவல்கள் வெளியானால் சர்வதேச பயங்கரவாதத்துக்கு துணை நின்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவோமோ என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவ்வாறானதொரு அமைதி நிலையைப் பேணி வருகின்றார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவை எவ்வாறெனினும் சர்வதேச ஆயுத வியாபாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற செயற்பாடுகள் சட்டவிரோத நடவடிக்கைகளாகக் கருதப்படும் அதேவேளை, அந்த நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவோர் சர்வதேச சட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனை வழங்கக் கூடியவர்களாகக் கருதப்படுவர். இது கட்டாயப்படுத்தப்பட்டும் உள்ளது.
இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் புலிகளுடனான மோதல்களின் போது கொல்லப்பட்டதிலும் பார்க்க அவ்வியக்கத்தின் சர்வதேச ஆயுத வியாபாரியான கே.பி உயிருடன் கைது செய்யப்பட்டமையானது விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்படுவதற்கு உதவியாக அமைந்துள்ளது என்று இலங்கையின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment