18வருடங்களாக தேடிய இலங்கையரை இந்திய சி.பி.ஐ கைது செய்தது
இலங்கைத் தமிழரான ஜோன் பிரபாகரன் என்பவரை போலி கடவுச்சீட்டு குற்றங்கள் இரண்டிற்காக 1991 முதல் இந்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ) தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு புலிகளுடனும் தொடர்புள்ளதென மேலும் கூறப்ப்ட்டுள்ளது.
பிரபாகரனுக்கு எதிரான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தபோதும், அவரது புகைப்படமோ, அங்க அடையாளங்களோ, அவரது வயது, குடியுரிமை போன்ற எதுவுமே தங்களிடம் இருக்கவில்லை என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். இவரை கடந்த திங்கட்கிழமை கைது செய்த சி.பி.,ஐ தடுப்புக் காவலில் வைத்துள்ளது.
இருவித குற்றங்கள் இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது. போலியான நபர் ஒருவரின் பெயரில் முதலில் கடவுச் சீட்டுப் பெற்றுக்கொண்ட இவர், பின்னர் அந்த கடவுச்சீட்டில் இருந்த விவரங்கள், புகைப்படங்கள் என்பவற்றை மாற்றியமைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையை அடுத்து, இலங்கைத் தமிழர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் இந்திய பாதுகாப்புப் படையினர் கவனித்து வந்தபோது, தனது தோழர்கள் சட்ட விரோதமாக குடிபெயர்வதற்கு இந்த போலி கடவுச் சீட்டுக்களை வழங்கியுள்ளார். பிரபாகரனின் ஒரு சில தோழர்களை சி.பி.ஐ கைது செய்த போதும், அவர்களால் பிரபாகரனைக் கைது செய்யமுடியாமல் போய்விட்டது. இவர் சென்னை மற்றும் தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்துகொண்டு இலங்கையிலுள்ள வலையமைப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் கூறும் சி.பி.ஐ, பிரபாகரனின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றித் தெரியவில்லை எனக் கூறியுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment