அதிர்ச்சி தரும் சிறிலங்கா இராணுவப் போர்க் குற்ற ஒளிப்பதிவு ஆவணம்.
'தமிழ் மக்களின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைக்கான யுத்தம்' என சொல்லிக்கொண்டு, யுத்தத்தை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தினரின், உண்மையான மனோநிலையை,அப்படியே பிரதிபலிக்கும், வீடியோ ஒளிப்பதிவு ஆவணம் எனும் விளித்தலோடு ஒரு வீடியோ ஒளிப்பதிவு வெளிவந்திருக்கிறது.
2009 ஜனவரி காலப்பகுதியில் இலங்கையில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும், இந்த வீடியோப் பதிவினை, சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது, மோதல் வலயத்தினுள், சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களை அனுமதிக்காது, சிறிலங்கா அரசு தடுத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. வெளிவந்திருக்கும் இந்த வீடியோ ஆவணம், தமிழ் மக்களின் மனிதாபிமான மீட்பு நடவடிக்கைக்கான யுத்தம்' என சொல்லிக்கொண்டு, யுத்தத்தை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தினரின், உண்மையான மனோநிலையை,அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் விஸ்தரிக்க தொடங்கியுள்ளன.
பகல் வெளிச்சம் உள்ள பொழுதொன்றிலேயே இந்தப் போர்குற்றத்தை இராணுவத்தினர் நடத்தியுள்ளர். இக்குற்றச் செயலை அவர்கள் நடத்தும் போது, சிங்கள மொழியில் உரையாற்றியவாறும், கேலியும், கிண்டலும் செய்தவாறும் சாதாரண நடவடிக்கை போன்று சகஜமாக இப்படுகொலைகளை செய்துள்ளனர். இதனால் இவை இராணுவத்தலைமைகளின் அனுமதியின்றி, தன்னிச்சையாகவோ அல்லது களவாகவோ நடாத்தபட்ட ஒன்றாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. ஆயினும் இராணுவத் தலைமைகளுக்குத் தெரியாது பகற்பொழுதில் மிகச் சாதரணமாக, மோதல் பகுதிக்குச் சமீபமாக எவ்விதம் இது நிகழமுடியுமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.
வீடியோக் காட்சியில் தெரியும் சுட்டுக் கொல்லப்படும் நபர்கள் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில், கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில், இருக்கவைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு சுடப்பட்ட எட்டு உடலங்கள் அந்தக் காட்சிப்பதிவுக்குள் வருகின்றன. அத்துடன் சம்பவ இடத்திற்கு அருகாமையிலும் துப்பாக்கிச்சத்தங்கள் கேட்டவண்ணமிருக்கிறது. இவ்வீடியோ காட்சிகள் சம்பவ இடத்தில் இருந்த ஒரு இராணுவ வீரரின் தொலைபேசி கமெராவினால் பதிவு செய்யப்பட்டிருப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இந்த வீடியோ ஒளிப்பதிவை வெளியிட்டுள்ள Juernalists of Democracy in Srilanka' எனும் அமைப்பு, சிறிலங்காவி்ல் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், ஊடக சுதந்திரம் தொடர்பாக செயற்பட்டுவருகிறது
இந்த வீடியோ ஆவணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிறீலங்கா உயர்ஸ்தானிகம், சிறிலங்கா இராணுவத்தினர் மீது முன்வைக்கப்படும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது. சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்கள் மீது எவ்வித அட்டூழியங்களிலும் ஈடுபடவில்லை எனவும், அவர்களுடைய செயற்பாடுகள் யாவும் விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாகவே இருந்தது எனவும் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏற்கனவே மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், பல இவ்வாறு சர்வதேச ஊடகங்களில் வெளிக்கொணரப்பட்டிருப்தாகவும், இவை வெளியிடப்படமுன்னர் எங்கிருந்து பெறப்பட்டன என்பதனை உறுதிப்படுத்துமாறும் கோரியுள்ளது.
இவ்வாறான வீடியோக்கள், சிறிலங்கா இராணுவத்தினருக்கும், அரசுக்கும் மேலும் கலங்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்கப்படைகள் நடத்தியபோர்குற்றங்கள் தொடர்பான பதிவுகளுக்குப் பின், இராணுவக் குற்றம் தொடர்பாக உலகளாவிய ரீதியில், வெளிவந்திருக்கும் முக்கிய ஒளிப்பதிவு ஆவணமாக இதனைக்குறிப்பிடலாம் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
'சிறுவர்கள, இளகிய மனமுடையவர்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்'
0 விமர்சனங்கள்:
Post a Comment